ஆன்மிகம்

ஜோதிடத்தில் மருத்துவம் : கேதுவால் ஏற்படும் நோய்கள் + "||" + Astrology Medicine: Diseases caused by Ketu

ஜோதிடத்தில் மருத்துவம் : கேதுவால் ஏற்படும் நோய்கள்

ஜோதிடத்தில் மருத்துவம் : கேதுவால் ஏற்படும் நோய்கள்
‘ராகு கொடுப்பார்.. கேது கெடுப்பார்’ என்பது ஜோதிட பழமொழி. இருந்தாலும் கேது, ஞானக்காரன் என்பதால் அவரது பங்குக்கு சில நன்மைகளைச் செய்வதில் இருந்து தவறுவதில்லை.
கேது தரும் நன்மைகள் நிரந்தரம் இல்லை என்றாலும், அதனை தக்க வைத்து கொள்ள போதிய புண்ணியபலம் இருக்க வேண்டும். புண்ணிய பலத்தை தரக்கூடிய குரு, ஒருவரது ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். குரு நன்றாக இருந்தால், கேது தரும் நன்மைகளால் தலைமுறைகள் மேன்மை அடையக்கூடும்.

ஒருவரது ஜாதகத்தில் கேது யோகம் தரக்கூடிய இடத்தில் இருந்தால், பல நன்மைகள் உண்டாகும். மனிதனாகப் பிறந்த ஒருவருக்கு ஏழாவது ஞானத்தை தரக்கூடிய அளவுக்கு கேதுவிற்கு சக்தி உண்டு. உலகில் யாருக்கும் புலப்படாத பிரபஞ்ச ரகசியங்கள் புலப்படுவதற்கு கேதுவே காரணம். ஒருவர் ஈடுபட்டுள்ள துறைகளில் முதன்மை ஞானத்தை பெறக்கூடிய சக்தியை தருபவர் கேதுவே. உடலை பார்த்தவுடன் நோய்களை பற்றி கூறும் வித்தக கலையும், முகத்தை பார்த்த உடனே எதிர்கால கணிப்புகள் கூறும் கலையையும் தருபவர் கேது பகவான் தான்.

ஏழு லோகங்கள் பற்றி உணரும் சக்தியை கேது தான் தரு கிறார். மரம், செடி, கொடிகளுடன் பேசும் ஆற்றலை பெறுவதும், ஜீவராசிகளிடம் பேசும் ஆற்றலை தருவதும், மூலிகை செடிகளுடன் பேசும் சக்தியை தருவதும் கேது தான். மகாமுனி, மகாதபசி ஆகியோருக்கு மகாதவம் புரியும் சக்தியை தருவதும் இவரே. மந்திர வித்தைகள் கற்பதும், சொல்லும் மந்திரங்கள் அனைத்தும் பலிதமாவதற்கும் கேதுதான் காரணம். ஞான வைராக்கியத்தை தருவது, அதிர்ஷ்டகரமான.. வளமான வாழ்க்கையில் ஒழுக்கமாக வாழ்வதை உணர்த்துவது, விரும்பியபடி வாழ்க்கையோடு சகல சுகத்தை தருபவர் கேதுவே. புதினங்கள் படைப்பதும், வேதாந்த ரகசியங்கள் ஆராய்ச்சி செய்யும் ஞானத்தை கொடுப்பவரும் கேது தான்.

கேதுவால் வரக்கூடிய நோய்கள்

நமது உடலில் தாங்கவே முடியாத வலிகளுக்கு எல்லாம் காரணமாக இருப்பவர் கேது. உடலில் கெட்ட வியர்வை, அதனால் உடல் துர்நாற்றம் வருவதும் கேதுவால் தான். எலும்பு வெளியே தெரியும் அளவிற்கு மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு கேதுவின் ஆதிக்கமே காரணம். மூச்சுத் திணறல், மூச்சு விட முடியாமல் அவதிப்படுவது, கெட்டுப் போன.. விஷத்தன்மை கொண்ட உணவுகளால் ஏற்படும் நோய்கள், காற்றில் பரவக்கூடிய நோய்கள் ஆகியவற்றுக்கும் கேது தான் காரணம் ஆவார்.
காடுகளில் வழி தெரியாமல் சுற்றித் திரிவது, வன விலங்குகளின் தாக்குதலால் உண்டாகும் உடல் சிதைவு, பற்களை தாங்கும் ஈறுகளில் கெட்ட ரத்தம் படிவது, ஈறுகள் தேய்ந்து போய் பற்கள் ஆடிக்கொண்டு இருப்பது, கீழ்தாடைகளில் வெட்டுப்படுவது, தாடை எலும்பு முறிவு ஏற்படுவது, தியானம், யோகா, ஆன்மிக சக்திகளை தவறான முறைகளில் பயன்படுத்துவதற்கும் காரணமானவர்கள் கேதுவே.

மருத்துவமனைகளில் தவறான அறுவை சிகிச்சை ஏற்படுவதற்கும், தவறான மூலிகை மருந்து கொடுத்து அவதிப்படுவதற்கும், விஷ சாராயம், விஷ நீர் போன்ற உயிர் கொல்லி மருந்துகள் மூலம் உடலில் கண், காது, வாய், உயிர் போவதற்கும் காரணமாக இருப்பவர் கேது. சாலைகளில் சித்தபிரமையில் கத்திக் கொண்டு இருப்பவர்களுக்கு, பல நாள்பட்ட.. அருவறுப்பான ரண காயத்திற்கு, அசைவ உணவுகள் மூலம் கெட்ட கொழுப்புகள் தரக் கூடிய நோய்களுக்கு, சாக்கடை மற்றும் மனித மலக் கழிவு தொட்டி, ரசாயன கழிவு தொட்டி இவற்றில் செய்யும் வேலையால் வரும் நோய்களுக்கு, பலநாட்கள் குளிக்காமல்.. பல் துலக்காமல் தரித்திர நிலையில் இருப்பதற்கு, கோவில் கோபுரம், கோவில் மண்டபம், கோவில் சிலைகள் ஒருவர் மீது விழுந்து அங்கம் சேதம் அடைவதற்கு, போதை வஸ்துவால் அவதிப்படும் நிலை, தன்னைத்தானே வருத்திக்கொள்ளும் மனநிலைக்கு கேது தான் காரணம் ஆவார்.

கேதுவால் வரும் பாதிப்புகள்


* கேது பகை ராசியான மேஷம், கடகம், சிம்மம் ஆகிய ராசியில் நின்று இருந்தால், உடலில் ஏதாவது வலிகள் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வரக் கூடும் அல்லது உடல் எப்போதும் சூடாகவே இருக்கும். சின்ன சின்ன சீழ் பிடிக்கும் கட்டிகள் வரக்கூடும்.

* கேது நீச்ச ராசியான ரிஷபத்தில் இருந்தால், கெட்ட எண்ணம்.. கெட்ட பழக்கவழக்கத்தால் நோய்களை தேடிக் கொள்வார்கள். தோல் அரிப்புகள், கட்டிகள் வரக்கூடும். நிலையான புத்தி இல்லாமல் மன சஞ்சலத்தோடு நோய் கொண்டு வாழ்வார்கள்.

* கேதுவின் பகை கிரகங்களான சூரியன், சந்திரன் இணைந்து இருந்தால், உடலில் ஏதாவது பிணி இருந்து கொண்டே இருக்கும். வயிற்று வலி, ரத்த குறைபாடு, கண்கள் குறைபாடு இருக்கும். பரம்பரை நோய்கள் நிச்சயம் வரக்கூடும்.

* கேது பகை கிரகமான சூரியன், சந்திரன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தால், மனதில் மரண பயம் அவ்வப்போது வாட்டி எடுக்கும். நல்ல சுத்தமான பேச்சுகள் இல்லாமல், குளறியபடி பேசுவார்கள். மற்றவர்களுக்கு புரியாத புதிராக இருப்பார்கள்.

* கேது கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12-ல் மறைவு ஸ்தானத்தில் நின்று இருந்தால், கேது மறைவு பெறுவது நன்மையே என்றாலும், நோயின் வீரியத்தை அதிகப் படுத்தும். நற்பலன்கள் தந்தாலும் அவற்றை நிரந்தரமாக தரமாட்டார். ஆசையை காட்டி மோசம் செய்வார். நாள் பட்ட நோய்களை தருவார். ஜாதகர் சாப்பிடும் மருந்துகள் கூட ஒரு கட்டத்தில் பக்க விளைவுகளை உண்டாக்கி விடக்கூடும்.

* கேது கிரகம் லக்னத்திற்கு 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் இணைந்து இருந்தாலோ அல்லது அதன் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, சின்ன சின்ன விபத்துகள் நடந்து, உடலில் காயங்கள், தழும்புகள் உண்டாகும். வேனிற் கட்டிகள் வந்து போகும். உடலில் அரிப்பு,  புண்கள் வரக்கூடும். கண்களில் கோளாறு இருக்கும்.

* கேது லக்னத்திற்கு பாதகாதிபதியுடன் இணைந்து இருந்தாலோ அல்லது பாதகாதிபதியின் நட்சத்திர பாதத்தில் நின்று இருந்தாலோ, அந்த ஜாதகருக்கு நித்திய கண்டம் போல் இருக்கக்கூடும். விஷ பாம்புகள், விஷ வண்டுகள் மூலம் ஏதாவது தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். புது தொற்று நோய்கள் எளிதில் தாக்கும்.

* கேது கிரகத்தை பகை கிரகங்கள் அல்லது பாதகாதிபதிகள் பார்வை இருந்தால், உண்ணும் உணவு விஷமாகும். கெட்ட பழக்கத்தால் தானே நோயை தேடிக் கொள்வதும், எந்த நேரமும் ஏதாவது உடல் தொல்லைகளுடன் இருப்பதும், நோய் போக்க மருந்துகள் எடுத்துக் கொள்வதில் அக்கறை காட்டாமலும் இருப்பார்.

உலக பாதிப்புகள்

கேது மிக கொடிய கிரகம் என்பதால், அவரது ஆதிக்க காலத்தில் காற்றில் கண்களுக்கு தெரியாத விஷ கிருமிகள் பரவக்கூடும். உலகில் புதிய தொற்று நோய்கள் வரக்கூடும். மருந்துகள் கண்டுபிடிக்க முடியாத நோய்கள் வரலாம். கடவுளின் புனித இடங்களில் துஷ்ட சம்பவங்கள் நடக்கக்கூடும். காடுகளில் அபூர்வமான மூலிகைகள் அழியலாம். பூமிக்கு அடியில் இருந்து வரும் விஷ வாயுக்களால் பாதிப்பு, பொது மக்கள் உணவு பஞ்சம் வந்து பசியால் வாடுவது, நாடு விட்டு நாடு பஞ்சம் பிழைக்க செல்வது, போர் அச்சம் காரணமாக பொதுமக்கள் நிம்மதியின்றி வாழ்வது போன்றவை நடந்தேறும்.

- ஆர். சூரிய நாராயணமூர்த்தி.


கேதுவுக்குரியவை

காரகன்     -     மாதாமகன்

தேவதை     -      இந்திரன்

தானியம்     -     கொள்ளு

உலோகம்     -     துருக்கல்

நிறம்    -      சிவப்பு (செந்நிறம்)

குணம்    -     தாமஸம்

சுபாவம்    -      குரூரர்

சுவை        - புளிப்பு

திக்கு         - வட மேற்கு

உடல் அங்கம்          - உள்ளங்கால்

தாது         - இல்லை (நிழல் கிரகம் என்பதால்)

நோய்          - பித்தம்

பஞ்சபூதம்     -     - நீர்

பார்வை நிலை         - தான் நின்ற ராசியில் இருந்து 7-ம்  இடத்தை 
முழுமையாகவும், 3, 10 ஆகிய  இடங்களை கால் பங்கும், 5, 9  ஆகிய இடங்களை அரை  பங்கும்,  4, 8 ஆகிய இடங்களை முக்கால்  பங்கும் பார்ப்பார்.

பாலினம்        - அலி

உபகிரகம்         - தூமகேது

ஆட்சி ராசி        - இல்லை

உச்ச ராசி        - விருச்சிகம்

மூலத்திரிகோண ராசி     - இல்லை

நட்பு ராசி        - மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம்

சமமான ராசி        - இல்லை

பகை ராசி        - மேஷம், கடகம், சிம்மம்

நீச்ச ராசி         - ரிஷபம்

திசை ஆண்டுகள்       - ஏழு ஆண்டுகள்

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம்           - ஒன்றரை ஆண்டுகள்

நட்பு கிரகங்கள்       - சுக்ரன், சனி

சமமான கிரகங்கள்    - புதன், குரு

பகையான கிரகங்கள்     - சூரியன், சந்திரன்,  செவ்வாய்

அதிகமான பகையான கிரகம்    - சந்திரன் செம்பாம்பு,  கதிர்பகை, ஞானன்

நட்சத்திரங்கள்         - அஸ்வினி, மகம், மூலம்


தொடர்புடைய செய்திகள்

1. ஜோதிடத்தில் மருத்துவம் : சனி கிரகத்தால் உண்டாகும் நன்மை-தீமை
நவக்கிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக சனி கிரகம் இருக்கிறது. இதன் பார்வை தான் ஒருவரு டைய பாவ - புண்ணியங்களின்படி நமக்கு நன்மைகளையும், தீமைகளையும் வழங்குகிறது.
2. ஜோதிடத்தில் மருத்துவம் : குரு கிரகம் தரும் நன்மை - தீமை
நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும்.
3. ஜோதிடத்தில் மருத்துவம் : செவ்வாய் கிரகம் தரக்கூடிய நோய்கள்
நவக்கிரகங்கள் தரக் கூடிய நோய்களைப் பற்றி இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். கடந்த இரண்டு வாரங்களாக நவக்கிரகங்களில் முக்கியமானவர்களான சூரியன், சந்திரன் பற்றிப் பார்த்தோம்.
4. ஜோதிடத்தில் மருத்துவம் : சூரியன் தரக்கூடிய நோய்கள்
சூரியனோடு, ராகு, கேது, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் இணையும் காலகட்டத்தில், பொருளாதாரத்தில் முதன்மை பெற்ற நாடுகளுக்கு தீவிரவாதம் மற்றும் இயற்கை பேரிடர்களால் பல தொல்லைகள் ஏற்படக் கூடும்.