சொர்க்கத்தை பெற்றுத் தரும் அற்புதமான ஆறு அம்சங்கள்


சொர்க்கத்தை பெற்றுத் தரும் அற்புதமான ஆறு அம்சங்கள்
x
தினத்தந்தி 6 July 2018 6:45 AM IST (Updated: 5 July 2018 3:40 PM IST)
t-max-icont-min-icon

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘எனக்காக நீங்கள் ஆறு விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.

 உங்களுக்காக நான் சொர்க்கத்தை பெற்றுத் தருவதில் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்’.

நபிகள் குறிப்பிட்ட அந்த ஆறு விஷயங்கள் இது தான்:

1. நீங்கள் பேசினால் உண்மையே பேசுங்கள், 2. நீங்கள் வாக்குறுதி கொடுத்தால் முழுமையாக நிறைவேற்றுங்கள்,  3. உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்து விடுங்கள், 4. உங்களின் கற்புகளை பேணிக் காத்துக்கொள்ளுங்கள், 5. உங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள், 6. உங்களின் கைகளை போர் செய்யாமல் தடுத்துக் கொள்ளுங்கள்.

வாய்மையே சொர்க்கத்தை வென்று கொடுக்கும்

‘நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு பயந்துகொள்ளுங்கள். மேலும், (சொல்லிலும் செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள்’. (திருக்குர்ஆன் 9:119)

‘வாய்மை நன்மையின் பக்கம் வழிகாட்டும். நன்மை சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார். (அறிவிப்பாளர்: இப்னுமஸ்ஊத் (ரலி) புகாரி, முஸ்லிம்)

வாக்குறுதியை நிறைவேற்றினால் சொர்க்கம் உறுதி

‘நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி தீர்ப்பு நாளில் உங்களிடம்) விசாரிக்கப்படும்’. (திருக்குர்ஆன் 17:34)

‘இன்னும், நீங்கள் இறைவனின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்’. (திருக்குர்ஆன் 16:91)

வாக்குறுதி என்பது வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. அதில் உண்மையும், உறுதியும் அடங்கியிருக்க வேண்டும். வெற்று வாக்குறுதிகளை கொடுப்பவன் ஏமாற்றுப்பேர்வழி. அவன் பொய்யன். அவன் ஒதுங்கும் இடம் நரகமே. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவனும், அதை பாதுகாப்பவனும் தான் உண்மையான மனிதன். உண்மையான மனிதன் ஒதுங்கும் இடம் சொர்க்கமே.

வாக்கு மோசடிகளில் ஈடுபடுவோரின் முகமூடிகளை திருக்குர்ஆனும், நபிமொழிகளும் இவ்வாறு தோலுரித்துக் காட்டுகிறது.

‘இறைவிசுவாசிகளே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது இறைவனிடம் கடும் கோபத்துக்குரியது’. (திருக்குர்ஆன் 61:2,3)

‘நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். பேசும்போது பொய்சொல்வதும், வாக்குறுதியளித்தால் அதற்கு மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்தால் நம்பிக்கை மோசடி செய்வதும், வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை. எவனிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டுவிடும் வரை அவனுள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் குடியிருக்கும்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), புகாரி)

‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் இறைவனிடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்’. (திருக்குர்ஆன் 33:23)

‘இன்னும், அவர்கள் தங்கள் (வசம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்’. (திருக்குர்ஆன் 23:8)

‘இத்தகையோரே பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்’. (திருக்குர்ஆன் 23:10,11)

நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானித பொருட்களை அதனுடைய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும்படியும், அதற்கு மோசடி செய்யாமல் இருக்கும்படியும் இறைவன் இறைநம்பிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்கிறான்.

‘அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என இறைவன் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்’. (திருக்குர்ஆன் 4:58)

‘இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இறைவனுக்கும், இறைத்தூதருக்கும் மோசம் செய்யாதீர்கள். நீங்கள் அறிந்து கொண்டே உங்களிடமுள்ள அமானிதப் பொருட்களிலும் மோசம் செய்யாதீர்கள்’. (திருக்குர்ஆன் 8:27)

‘இந்தச் சமுதாயத்திலிருந்து முதன்முதலாக உயர்த்தப்படுவது வெட்கமும், அமானிதமும் ஆகும். எனவே அவ்விரண்டையும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல் : தப்ரானீ)

கற்பை பாதுகாப்பவருக்கு சொர்க்கமே பாதுகாப்பு

‘இறைநம்பிக்கையாளர்கள் தங்களது கற்புகளை பாதுகாத்துக் கொள்வார்கள்’. (திருக்குர்ஆன் 23:5)

‘ஒரு பெண் ஐவேளைத் தொழுது, மேலும், ரமலான் மாதம் நோன்பும் நோற்று, மேலும், அவள் தமது கற்பையும் பாதுகாத்து, இன்னும், அவள் தமது கணவனுக்கும் கட்டுப்பட்டு நடந்தால், சொர்க்கத்தின் எந்தவாசல் வழியாக நீ உள்ளே செல்ல நாடுகிறாயோ, அந்த வாசல் வழியாக நுழைந்து கொள்’ என்று அவருக்கு சொல்லப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி), நூல்: அஹ்மது)

‘எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் இருக்கும் நாவுக்கும், இரண்டு தொடைகளுக்கு மத்தியில் இருக்கும் பாலின உறுப்புக்கும் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுக்கொண்டாரோ, அவருக்கு நான் சொர்க்கத்தின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஸஹ்ல் பின் ஸத் (ரலி) புகாரி)

பார்வைகளைத் தாழ்த்திக் கொண்டவர்களுக்கு சொர்க்கம்

தகாத பார்வை என்பது பாவத்தில் தள்ளிவிடும். ஆபாச பார்வை என்பது விபச்சாரத்தில் தள்ளிவிடும்.

‘பார்வை என்பது விஷம் தடவப்பட்ட ஷைத்தானின் ஒரு அம்பு’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் (ரலி) தப்ரானீ)

‘(நபியே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக. இது அவர்களுக்கு பரிசுத்தமானது, அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். தமது பார்வைகளைத் தாழ்த்திக்கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் கூறுவீராக’. (திருக்குர்ஆன் 24:30,31)

‘இன்னும், உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்’. (திருக்குர்ஆன் 2:195)

மேற்கூறப்பட்ட ஆறு அம்சங்களையும் இஸ்லாம் கூறும் வழியில், இறைத்தூதர் காட்டிய வழியில் செயல்படுத்தி வாழ்ந்து வந்தால் சொர்க்கம் நிச்சயம். இது வேத சத்தியம், இது நபி (ஸல்) அவர்களின் உறுதியான உத்தரவாதம்.

- மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

Next Story