ஆன்மிகம்

நீ சிந்தித்து செயல்படு + "||" + You have to think and act

நீ சிந்தித்து செயல்படு

நீ சிந்தித்து செயல்படு
நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான். தன் வழிகளில் தாறுமாறானவனே அவரை அலட்சியம் பண்ணுகிறான் (நீதி.14:2).
நிதானமாய் செயல்படு

மனிதன் வானத்தின் தோற்றத்தை நிதானித்து, செவ்வானம் மந்தாரமுமாயிருக்கிறது, காற்றும் மழையும் உண்டாகும் என்று அறிந்தவர்கள், வாழ்க்கையில் நிதானம் இல்லாமல் செயல்படுகிறார்கள். சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து அறிந்து உன் தேவனுக்கு முன்பாக உத்தமனாக ஜீவிக்க வேண்டும். இறைவன் ஜனங்களை நிதானமாய் நடத்துகிறார். அவர்கள் சந்தோஷத்தோடே மகிழ்ச்சியாய் ஜீவிக்கிறார்கள்.


எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்படுகிறவன் வாழ்க்கை செழிக்கும். அவர்களுக்கு இடறல்கள் வருவது இல்லை. நிதானமாய் பேசினால் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். ராஜாவினிடத்தில் தவறு செய்து நிதானமாய் உத்தரவு சொன்னபோது அவன் பிழைத்தான்.

நீ வழக்காடப் பதற்றமாய் போகாதே. முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்துவான். நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. நீ சிந்தித்து செயல்பட்டுப்போய் நிதானமாய் பேசினால் வெற்றியை காண்பாய்.

நன்மை-தீமை அறிந்து செயல்படு


நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது (நீதி.17:13).

ஒருவரிடத்தில் நன்மைகளை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் தீமை செய்யக்கூடாது. தீமை செய்தால் பாவம் நமது வீட்டின் வாசற்படியில் வந்து படுத்துக்கொள்ளும். உண்மையாய் தேவனிடத்தில் அன்பு வைத்தவர்கள் யாருக்கும் தீமை செய்யமாட்டார்கள்.

யாக்கோபின் மாமன் லாபான் யாக்கோபுக்கு தீமை செய்ய நினைத்த போது, கர்த்தர் சொப்பனத்தில் தோன்றி, ‘நீ யாக்கோபுக்கு நன்மையே அன்றித் தீமை ஒன்றும் செய்யாதே’ என்று எச்சாரித்தார்.

நன்மை செய்ய தேடுகிறவன் தேவ கிருபையை பெறுவான். தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். மனிதன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான். தீமை செய்கிறவன் கொடுமையைப் புசிப்பான். பாவம் செய்தால் தீவினை தொடரும். தேவ நீதியின்படி ஜீவிக்கிறவர்களுக்கோ நன்மை இரட்டிப்பாக வரும்.

மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையை கண்டடைவதில்லை. புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். தீமையை யோசிக்கிறவர்கள் தவறு செய்கிறார்கள். நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ தேவ மகிமை சூழ்ந்து கொள்ளும்.

தீமையை விட்டு விலகி நன்மை செய்தால், நீதியின் சூரியனாய் ஜொலிக்கும் இயேசு உன்னோடு இருப்பார். நீ தேவ மகிமையை காண்பாய். உன் வீட்டில் சமாதானத்தின் ஆசீர்வாதம் பெருகும்.

பொறுமையாய் செயல்படு

அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள். உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும் (நீதி.5:10).

மனிதன், ஆண்டவர் கொடுத்த ஆசீர்வாதத்தை அவசரப்பட்டு இழந்து போகிறான். எப்படி ஆசீர்வாதத்தை பாதுகாக்கவேண்டும் என்று பொறுமையாக சிந்தித்து செயல்படாத காரணத்தால், ஆசீர்வாதத்தின் மேன்மையை பல தீய வழிகளில் சென்று அந்நியருக்கு கொடுக்கிறான். தன் ஆயுசின் காலத்தை கொடூரமான வழிகளில் செலவிடுகிறான். எல்லா தீமைக்கும் அடிமை ஆகிவிடுகிறான். முடிவிலே ஆசீர்வாதமும் சரீரமும் உருவழியும் போது துக்கப்பட்டு வேதனைப்படுகிறான்.

‘ஐயோ, தேவ போதகத்தை நான் கேளாமலும், பலர் உபதேசம் பண்ணியும் சிந்தித்து செயல்படாமல் போனேன். அவசரப்பட்டேன், பொறுமை இல்லையே’ என்று புலம்புகிறான்.

உன் பிரயாசத்தின் ஆசீர்வாதம் திரும்பி வருவதில்லை. தேவ ஜனமே மோசம் போகாதீர்கள். மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறதை அறியாமல் போனார்கள். பொறுமையாய் செயல்படுகிறவர்கள் தேவ பலத்தின் மேல் பலம் அடைந்து சீயோனிலே தேவ சந்நிதியில் காணப்படுவார்கள் அவர்கள் தேவனோடு இருப்பார்கள்.

சாந்த குணமாய் செயல்படு


‘மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுண முள்ளவனாயிருந்தான்’ (எண்.12:3).

மோசே மிகுந்த கோபக்காரன். நியாய பிரமாணத்தை படித்தும் தேவ சத்தத்தை கேட்டும் பூமியில் சகல மனிதரிலும் மிகுந்த சாந்த குணமுள்ளவன் ஆனான். தேவனே சாட்சி கொடுக்கிறார்.

மோசே கர்த்தரிடத்தில் ஒவ்வொரு முறை பேசும் போதும், இஸ்ரவேல் ஜனத்தோடே பேசும் போதும் சாந்த குணமாய் பேசினான்.

நாநூற்றி முப்பது வருடம் அடிமைத் தனத்திலிருந்து எகிப்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் ஜனங்கள் சிவந்த சமுத்திரத்தில் வந்தபோது, பார்வோன் படைகள் பின்தொடர இஸ்ரவேல் ஜனங்கள் பிதாவை நோக்கி கூப்பிட்டார்கள். மோசேயினிடத்தில் மிகுந்த கோபம் கொண்டார்கள்.

மோசே, தேவனோடு பேசினான். கர்த்தர் சமுத்திரத்தை பிளந்து சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையை உண்டு பண்ணினார். இஸ்ரவேல் ஜனங்கள் வெட்டாந்தரையிலே நடந்து சமுத்திரத்தை கடந்தார்கள்.

மோசே சாந்த குணத்தினால் சிந்தித்து செயல்பட்டான். தேவனின் கிரியை அற்புதமாக அதிசயமாக செயல்பட்டது. சகல ஜனங்களும் உயிர் தப்பினார்கள்.

மோசேயின் சாந்த குணத்தால் ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல பேசினார். நாமும் சாந்த குணமாய் சிந்தித்து செயல்பட்டால் மோசேயோடு பேசிய தேவன் நம்மோடும் பேசுவார்.

- சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.

அதிகம் வாசிக்கப்பட்டவை