பாவங்களைப் போக்கும் நிரஞ்சனேஸ்வரர்


பாவங்களைப் போக்கும் நிரஞ்சனேஸ்வரர்
x
தினத்தந்தி 10 July 2018 7:14 AM GMT (Updated: 10 July 2018 7:14 AM GMT)

வேளாண்குடி மக்கள் நிறைந்த இடத்தில் கோவில் கொண்டவர் நிரஞ்சனேஸ்வரர். இக்கோவில் கொண்ட ஊரை சுற்றி காவல்தெய்வங்களும், பல குடும்பங்களின் குலதெய்வங்களும் காவல் பணியில் இருக்கின்றனர்.

தெய்வாம்சம் பொருந்திய அந்த ஊரில், இயற்கை அளித்த கொடையால் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த மக்களை 2 அரக்கர்கள் துன்புறுத்தி வந்தனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர். இந்த நிலையில் தான், இயற்கையும் தெய்வாம்சமும் நிறைந்த ஊரைக் காண்பதற்காக காசிப முனிவர் இந்தப் பகுதிக்கு வந்தார்.

அவரிடம் அந்தப் பகுதி மக்கள், அசுரர்களால் தங்களுக்கு நிகழும் துன்பங்களை எடுத்துக் கூறி காப்பாற்றும்படி வேண்டினர். தேவர்களும் கூட பொதுமக்களுக்காக காசிப முனிவரிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி, மாபெரும் யாகம் செய்தார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரண்டு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் ‘எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா?’ என்றபடி, காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக குண்டங்களை உடைத்தெறிந்தனர்.

இதையடுத்து காசிப முனிவர், தேவர்கள், பக்தர்கள் அனைவரும் அந்த ஊரில் கோவில் கொண்டிருக்கும் நிரஞ்சனேஸ்வரரிடம் சென்று முறையிட்டனர்.

அப்போது அங்கு ஒரு அசரீரி ஒலித்தது. ‘நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடைபெறும்’ என்றது.

தேவர்களும் மக்களும் அங்கிருந்து சென்றனர். பின்னர் முருகப்பெருமான், மயில் வாகனத்துடன் சென்று இரண்டு அரக்கர்களையும் துரத்தினார். அவர்கள் மக்கள் நடமாட்டமும், கொக்குகள் நிறைந்த குளக்கரையுமான இடத்தில் மறைந்திருந்தனர். அவர்கள் இருப்பிடத்தை அறிந்து கொண்ட முருகப்பெருமான், முதலில் மலையனை தன்னுடைய வேலாயுதத்தால் வதம் செய்தார். அந்த இடம் தற்போதும் ‘மலையான்குளம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. மாயன், இனி மக்களுக்கு துன்பம் இழைக்க மாட்டேன் என்று கூறிவிட்டு தப்பி ஓடினான். முருகப்பெருமான், நிரஞ்சனேஸ்வரரிடம் திரும்பி வந்தார். தங்களின் கட்டளையை நிறைவேற்றியதாக கூறிவிட்டு, வேலாயுதத்தை ஓரிடத்தில் ஊன்றினார். அந்த இடமே ‘வேலூர்’ என்றானதாக தல வரலாறு சொல்கிறது.

வடநாடு சென்று வெற்றி வாகை சூடி, திரும்பிக்கொண்டிருந்தான், ராஜேந்திர சோழன். வழியில் இயற்கை வளமும், இறையருளும் நிரம்பிய வேலூர் கிராமத்தை அவன் கண்டான். அதன் அழகை ரசித்துக் கொண்டே வந்தவனுக்கு ஒரு அசரீரியின் ஒலி கேட்டது. ‘நீ பார்க்கும் இடத்தில் தெய்வாம்சம் பொருந்திய கொம்பு ஒன்று கிடைக்கும். அதனை எடுத்துச் சென்று தீவு போன்ற பகுதியில் உள்ள குளத்தின் கிழக்குப் பகுதியில் குடிகொண்டிருக்கும் ஈசனின் முன்பாக நட வேண்டும்’ என்றது அந்தக் குரல்.

அப்போது இருள் சூழும் நேரமாகிவிட்டதால், மன்னன் தன் படை, பரிவாரங்களுடன் ஓரிடத்தில் தங்கி கண்ணயர்ந்தான். கண் விழித்துப் பார்த்தபோது, அங்கே ஒரு கொம்பு துளிர்விட்டு, இலையுடன் காணப்பட்டதைக் கண்டு வியந்தார். பின்னர் அசரீரி சொன்னதைப் போலவே அதை குறிப்பிட்ட இடத்தில் நட்டு, அங்கு ஒரு பெரிய ஆலயத்தை எழுப்பினார். மன்னன் நட்ட கொம்பு, துளிர்த்து மரமாக வளரத் தொடங்கியது. அது தான் இன்றும் இந்த ஆலயத்தின் தல விருட்சமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

கோவில் அமைப்பு

ஆலயத்தைச் சுற்றி நான்கு புறமும் மதில் சுவர் அமைந்துள்ளது. தெற்கு மற்றும் கிழக்கு திசையில் நுழைவு வாசல் அமைக்கப்பட்டிருக்கிறது. நுழைந்தவுடன் கோவில் வலபுறத்தில் தனிக் கோவில் கொண்டுள்ள சுந்தர விநாயகரை தரிசனம் செய்யலாம். பின்னர் கிழக்கு நுழைவு வாசலின் உள்ளே நுழைந்தால், கருவறையின் இரு புறமும் துவார பாலகர்கள், ஈசனுக்கு காவலாக நிற்கின்றனர். முன்னதாக வலதுபுறத்தில் கணபதியையும், இடதுபுறத்தில் முருகப்ெபருமானையும் தரிசனம் செய்யலாம்.

கருவறையில் நிரஞ்சனேஸ்வரரை வீற்றிருந்து, தன்னைத் தேடிவரும் பக்தர்களின் குறைகளை களைந்தும், வேண்டுதல்களை நிறைவேற்றியும் அருள்பாலிக்கிறார். ஈசனின் முன்பாக இருக்கும் நந்தியின் காதில் நமது வேண்டுதல்களைச் சொன்னால் அது விரைவில் நிறைவேறும் என்கிறார்கள்.

கருவறை கோஷ்டத்தில் மகா கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும், லிங்கேத்பவமூர்த்தியையும் மூல வருக்கு பின்புறம் எழுந்தருளியுள்ள பிரம்மன், சண்டிகேஸ்வரர் மற்றும் துர்க்கை அம்மனை தரிசனம் செய்யலாம். அடுத்ததாக தனி மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நீலாயதாட்சினி அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும். தெற்கு வாசலை கடந்து வெளியே வந்தவுடன், கோவிலை சுற்றி வரும் வழியில் கால பைரவர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு அருகில் நவக்கிரக சன்னிதி காணப்படுகிறது.

அடுத்ததாக நாம் தரிசிப்பது, பல நூற்றாண்டுகளாக இருக்கும் தல விருட்சமான அரச மரம். ஆலய புஷ்கரணியின் அருகில் இந்த மரம் காணப்படுகிறது.

இந்த ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல் திருநாள், பிரதோஷம், தமிழ்புத்தாண்டு, ஆனி மாத தேய்பிறை, ஏகாதசி, சிவராத்திரி, மாசி மகம் ஆகிய நிகழ்வுகள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனையும், இறைவியையும் வழிபட்டால், பெரியோர் சாபம், பொய் சாட்சி சொன்னதால் ஏற்பட்ட பாவங்கள் உள்ளிட்டவை விலகும்.

ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் திறந்திருக்கும்.

பாவங்களை நீக்கும் தலமாக விளங்கும் நீலாயதாட்சினி சமேத நிரஞ்சனேஸ்வரர் கோவிலுக்கு சென்று அருள் பெறுவோம்.

அமைவிடம்

திருவள்ளூர் அடுத்த பொன்னேரி அருகே உள்ளது வேலூர் கிராமம். மீஞ்சூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலும், பொன்னேரியில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது திருவெள்ளைவாயல். இங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால் வேலூர் நிரஞ்சனேஸ்வரர் ஆலயத்தை அடையலாம். 

தல விருட்ச வழிபாடு
தல விருட்சம்

இந்த ஆலயத்தில் உள்ள புஷ்கரணியின் அருகில் தலவிருட்சமாக அரச மரம் உள்ளது. வியாழக்கிழமையில் வரும் அமாவாசை அன்று புஷ்கரணியில் நீராடினால், அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தல விருட்சமான அரச மரத்தின் அடிப்பகுதியில் பிரம்மனும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், கிளை மற்றும் இதரப் பகுதிகளில் சிவனுமாக மும்மூர்த்திகளும் இந்த மரத்தில் வாசம் செய்வதாக ஐதீகம்.

இந்த ஆலய தல விருட்சத்தை வணங்கினால், நீண்ட ஆயுள் கிடைப்பதுடன், செல்வம் பெருகும் என்கிறார்கள். காலை வேளையில் கர்ப்பிணி பெண்கள் அரச மரத்தை வலம் வந்தால், சுக பிரசவம் நிகழும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த மரத்தை சனிக்கிழமையில் மட்டுமே தொட அனுமதி உள்ளது. மற்ற நாட்களில் தொடக்கூடாது. இந்த மரத்தின் குச்சி மற்றும் மரப்பொருட்களை யாகம் செய்யும்போது மட்டுமே எடுத்து தீயில் போட்டு எரிக்கிறார்கள். விரதமிருந்து 108 முறை மரத்தை சுற்றினால், மன ஆரோக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும் என்கிறார்கள். 

Next Story