ஆன்மிகம்

கடன் தொல்லை நீக்கும் இறைவன் + "||" + God will remove debt

கடன் தொல்லை நீக்கும் இறைவன்

கடன் தொல்லை நீக்கும் இறைவன்
அனைத்து வித வியாதிகளையும் தீர்க்க வல்லவர் என்று பக்தர்கள் உறுதியாக நம்பும், வைத்தியநாத சுவாமி திருக்கோவில் பாண்டூர் என்ற கிராமத்தில் உள்ளது.
பசுமையான வயல் வெளிகளுக்கு இடையே இயற்கை சூழலில் அமைந்துள்ளது இந்த அழகிய ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் வைத்தியநாத சுவாமி. இறைவியின் திருநாமம் பாலாம்பிகை என்பதாகும்.

ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து இடது புறம் பிள்ளையாரும், வலதுபுறம் துர்க்கை திருமேனிகளும் உள்ளன. அடுத்து மகா மண்டபமும், அர்த்த மண்டபமும் காணப்படுகின்றன. தொடர்ந்து உள்ள கருவறையில் இறைவன், வைத்தியநாத சுவாமி கீழ்திசை நோக்கி லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.


இறைவனின் தேவக் கோட்டத்தில் தென்புறம் தட்சிணாமூர்த்தியின் திருமேனி இருக்கிறது. பிரகாரத்தின் மேற்கு திசையில் பிள்ளையார், வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.வடக்கு பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வ மரம் உள்ளது. அதனடியில் சிறிய அளவிலான சி வலிங்கம், நாகர், நந்தி திருமேனிகள் உள்ளன. இங்கே சனி பகவான் தனி சன்னிதியில் வீற்றி ருந்து அருள்கிறார். சண்டீஸ்வரர் சன்னிதியும் இங்கு உள்ளது. கிழக்கு பிரகாரத்தில் சூரியன், பைரவர் ஆகியோர் இருக்கிறார்கள்.

தீர்த்தமான சூரிய புஸ்கரணி ஆலயத்தின் எதிர் திசையில் அமைந்திருக்கிறது. தினசரி காலை சாயரட்சை, அர்த்த சாமம் என மூன்று கால பூஜைகள் இங்கு நடைபெறுகின்றன. ஆலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் திறந்திருக்கும்.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு முந்தைய ஆலயமாக இது கருதப்படுகிறது. சனி பகவானுக்கு இங்கு தனி சன்னிதி உள்ளதால், நவக்கிரகங்கள் இங்கு இல்லை. சனிக்கிழமை அன்றும், கிரகப் பெயர்ச்சி நாட்களிலும் இங்குள்ள சனி பகவானுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. சனிப் பார்வையால் துன்பப்ப டுவோர் இங்குள்ள சனி பகவானை வேண்டிக் கொண்டு பாதிப்பின் வேகம் குறைய, தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி நிம்மதி பெறுகின்றனர். எள் சாத நைவேத்தியம் செய்து அனை வருக்கும் வினியோகம் செய் கின்றனர். சனிப் பெயர்ச்சி காலங்களில் இங்கு பக்தர் கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை யான ஒன்றாகும்.

இந்த ஆலயத்தில் பிரதோஷ நிகழ்வும் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. நவராத்திரி, சிவராத்திரி மற்றும் பல்வேறு சிவ விசேஷ நாட்களில் இறை வனுக்கும், இறைவிக்கும் சிறப்பு ஆராதனைகளும் பூஜைகளும் நடைபெறுகின்றன. ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

அரிச்சந்திரன் இத்தலத்து இறைவனை வேண்டி பிராத் தனை செய்ததால் தனது கடன் தொல்லைகளில் இருந்து நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு கூறுகிறது. எனவே, அதை நினைவுபடுத்தும் விதமாக சித்திரை மாதம் மூன்றாவது செவ்வாய்க்கிழமை கடன் நிவர்த்தி பூஜை இங்குள்ள இறைவனுக்கும், இறைவிக்கும் நடத்தப்படுகிறது. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டு துன்பப்படும் பக்தர்கள், இந்த பூஜையில் கலந்து கொண்டு பலன் பெறுகிறார்கள். மேலும், அன்று முதல் மூன்று நாட்களுக்கு கோவிலுக்கு அருகே அரிச்சந்திரன் வரலாற்றை நாடகமாக அரங்கேற்றி, அதைப்பார்த்து மக்கள் மகிழ்வது இன்றும் நடைபெறும் ஒரு நிகழ்வாகும்.

சகல விதமான சரும நோய்களை தீர்க்க வல்லவர், இத்தலத்து இறைவன் என்று பக்தர்கள் சொல்கிறார்கள். தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள், இந்த ஆலயத்திற்கு எதிரே உள்ள சூரிய புஸ்கரணி தீர்த்தத்தில் நீராடி, நீலோத்பவ மலர்களால் இறைவனை அர்ச்சனை செய்து வழிபட்டால் ரோக நிவர்த்தி பெறலாம் என்பது ஐதீகம்.

நள மகாராஜன், கார்கோடன் என்ற நாகத்தால் தீண்டப்பட்டான். இதனால் அந்த மன்னனின் உருவம் மாறியது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான் நளன். அப்போது ஒரு முனிவரின் வழிகாட்டுதல்படி இந்த ஆலயத்திற்கு வந்தான். பின் இங்குள்ள இறைவனையும், இறைவியையும் ஆராதித்தான். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், நள மகாராஜனுக்கு அவனது பழைய உருவத்தை திருப்பி வழங்கியதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

பொதுவாக தங்களை கடன் பிரச்சினைகளில் இருந்து மீட்டு, நல்ல வழியை இத்தலத்து இறைவன் காட்டுவார் என பக்தர்கள் நம்புவது நிஜமே.

அமைவிடம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை - காளி பேருந்து மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது பாண்டூர் என்ற இந்த தலம். மயிலாடுதுறையில் இருந்தும், காளியில் இருந்தும் இத்தலம் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.

- தங்கம் மணிவண்ணன்