ஆன்மிகம்

ஒரே தீர்வு + "||" + The only solution

ஒரே தீர்வு

ஒரே தீர்வு
தனது மக்கள் தனக்கு பலிகளைச் செலுத்த வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டில் இறைவனின் விருப்பமாக இருந்தது.
கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துவதாக  இது  அமைகிறது.

பலிகள் எப்படி அமைய வேண்டும் என்பதை விவிலியத்திலுள்ள லேவியர் எனும் நூல் விளக்குகிறது.

‘ரத்தம் என்பது உயிர். அந்த ரத்தத்தைச் சிந்தும் பாவம் செய்பவர்கள் அதற்கான பரிகாரத்தையும் ரத்தத்தைக் கொண்டு செய்யவேண்டும்’. இது லேவியராகமம் சொல்லும் சிந்தனைகளில் ஒன்று.


பாவத்தின் நிவாரணமாக அமைவது ரத்தம். பாவ நிவாரணத்தின் எபிரேயச் சொல் ‘ஹட்டாத்’ என்பது. இது அறியாமையால் செய்யப்படுகின்ற பாவங்க ளுக்காய் செய்யப்படும் பலி.

பாவத்தை மன்னிப்பது ஒன்று, பாவம் செய்தவனின் மனதிலிருந்து குற்ற உணர்வை மாற்றுவது இன்னொன்று. இவையெல்லாம் அறியாமல் செய்கின்ற பாவங்களுக்கான தண்டனையே. பெரும்பாலும் அடுத்த நபரைப் பாதிக்காதவை எனலாம்.

பாவ நிவாரண பலியில் பல பிரிவுகள் உண்டு. குருவுக்கு பழுது அற்ற இளம் காளை, சபையார் அனைவருக்கும் இளங்காளை, பிரபு நிறைவேற்றும் குற்றத்துக்கு பழுதற்ற வெள்ளாட்டுக்கடா, சாதாரண மனிதர் செய்யும் பாவத்துக்கு வெள்ளாட்டுப் பெண்குட்டி... இப்படித் தான் பலிப்பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். மக்களின் நிலைக்கு ஏற்ப இந்த பலி பொருட்கள் மாறுபடுகின்றன.

இன்னொன்று குற்ற நிவாரண பலி. இதற்குரிய எபிரேய வார்த்தை ‘அஸோம்’ என்பது. பிறரது உரிமையின் மீது நடத்துகின்ற அத்துமீறல் இது. இது குற்றம். இந்த குற்றங்கள் இரண்டு வகைப்படும்.

அதில் ஒன்று, தெய்வீகக் குற்றம். “ஒருவர் ஆண்டவருக்கு அர்ப்பணித் தவற்றில் ஒழுங்கை மீறி அறியாமல் தவறிழைத்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாவை ஆண்டவருக்குத் தம் குற்றப்பழி நீக்கும் பலியாகக் கொண்டு வருவாராக....” என தொடங்கி லேவியர் நூல் இதை (அதிகாரம் 5) விளக்குகிறது.

இரண்டாவது, மனிதருக்கு எதிராய் செய்கின்ற குற்றங்கள். “... ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ...” (லேவியர் 6:2) என இத்தகைய குற்றங்களை விவிலியம் பட்டியலிடுகிறது.

ஆள்மாறாட்டம் செய்வது, வலுக்கட்டாயமாய் பறித்துக் கொள்வது, அயலானுக்கு இடுக்கண் செய்வது, காணாமல் போனதை கண்டெடுத்தும் மறைப்பது... இவையெல்லாம் குற்றமாய் சொல்லப்படுகின்றன.

பாவத்தை நம் வாழ்வில் போக்கிக்கொள்ள ஒரு நிவாரண பலி உண்டு. அதற்கு ரத்தம் தேவைப்படுகிறது. எப்படி பாவத்துக்கு நிவாரணமாக காளையின் ரத்தம், ஆட்டுக்கடாவின் ரத்தம் என விலங்குகள் குறிப்பிடப்படுகின்றனவோ, அதேபோல பாவத்தைச் சுட்டவும் விலங்குகள் பயன்படுத்தப்படு கின்றன.

பாவம் என்பதை விஷமுடைய பாம்பு என சங்கீதம் சொல்கிறது. “அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே” என்கிறது சங்கீதம் 140:3.

தானியேல் 7:5 பாவத்தை ஒரு கரடியாகக் காட்டுகிறது. “கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது” என்கிறது அது.

“கடின நெஞ்சுடைய காட்டுக் கழுதையைப் போன்றது பாவம்” என யோபு நூல் சொல்கிறது. யோவேல் 5:25-ல் “பாவம் அழிக்கிற வெட்டுக்கிளியாய்” குறிப்பிடப்படுகிறது. “சூழ்ச்சிமிக்க நரி போன்றது பாவம்” என லூக்கா 13:32 குறிப்பிடுகிறது.

இவை மட்டுமல்லாமல் ‘பயங்கரமான ஓநாய்’, கர்ஜிக்கிற சிங்கம்’, ‘அசுத்தமான பன்றி’... என்றெல்லாம் பாவங்கள் விலங்குகளாக விவிலியத்தில் சுட்டப்படுகின்றன.

பாவத்தையும் குற்றங்களையும் செய்பவர்கள் தீர்ப்பிடப்படுகிறார்கள். ‘அவர்கள் குற்றத்தைச் சம்மதிக்க வேண்டும்’, ‘சுமத்தும் அபராதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்’, ‘பிழை செய்த காரியத்தில் அந்த விலையோடு ஐந்தில் ஒரு பாகத்தை சேர்த்து அபராதமாகச் செலுத்த வேண்டும்’.

நம்முடைய வாழ்வில், சிலுவையின் நிழலில் இருக்கும் போது பாவங்கள் என்றோ, குற்றங்கள் என்றோ நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. எல்லாமே இறைமகன் இயேசுவின் ரத்தத்தால் சுத்தமாகிறது.

இறைமகன் பலியானதே அதிகபட்ச பலி. இந்த பலி நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பல்வேறு நிலை மக்களுக்கு, பல்வேறு வகையான பலி இனிமேல் தேவையில்லை என்பதே.

முதலாவது, பழுதற்ற காளை, எஜமான னுக்காய் பொறுமையாய் உழைக்கும் பண்புடையது. தன் எஜமானை அது அறியும். மரணம் வரை அவருக்குக் கீழ்ப்படியும்.

இரண்டாவது, பழுதற்ற செம்மறியாட்டு க்கடா. அது குறையில்லாத ஒன்று. எதிர்ப்பு தெரிவிக்காத பண்புடையது.

மூன்றாவது, வெள்ளாட்டுக்கடா. அது தூய்மையின் சின்னம்.

நான்காவது மற்றும் ஐந்தாவது இரண்டும் காட்டுப்புறா, புறாக்குஞ்சு. இவை புலம்பல், குற்றமில்லாமை, கபடமற்ற தன்மை போன்றவற்றின் அடையாளம்.

இந்த பலி பொருட்கள் அனைத்தின் தன்மையும் இறைமகன் இயேசுவின் தன்மையோடு இணைந்து விடுகிறது. எனவே தான் இறைமகனின் பலி ஒட்டு மொத்த பாவங்களுக்கான தீர்வாக இருக்கிறது.

நமது பாவங்கள் எதுவாக இருந்தாலும் இறைமகனின் ரத்தம் அதை நீக்கும் எனும் நம்பிக்கையே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.

(தொடரும்)