ஆன்மிகம்

கைரேகை அற்புதங்கள் : கல்வியும்.. தொழிலும்.. + "||" + Fingerprint miracles: education and business ..

கைரேகை அற்புதங்கள் : கல்வியும்.. தொழிலும்..

கைரேகை அற்புதங்கள் :  கல்வியும்.. தொழிலும்..
ஒரு கிரகத்துக்கு பலபல காரகத்துவங்கள் உண்டு. உலகின் வளர்ச்சியாலும், மக்கள் பெருக்கத்தாலும் எத்தனையோ நூதன அம்சங்கள் கிளைத்துக் கொண்டு வருகின்றன. அவற்றில் பல பிரிவுகளும் உற்பத்தியாகி வருகின்றன.
 சூரியனை எடுத்துக் கொண்டால், நூற்றுக்கணக்கான காரகத்துவங்கள் அவருக்கு உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலமாக அமைந்து, தொழில் மற்றும் வருவாய் ஆகிய இடங்களோடு சூரியனுக்கு சம்பந்தம் இருந்தால், அந்த நபர் என்ன உத்தியோகம் பார்க்க நேரிடும் என்பதை கண்டறிய முடியும்.


சூரியன் பலமாக அமைந்து, தொழில் வீட்டோடு தொடர்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு அரசாங்க உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டு. சூரியனது பலமும், சூரியனுக்குத் தொழில் வீட்டுத் தொடர்பும் இருப்பவர் டாக்டராக முடியும், விமான ஓட்டியாக பணியாற்ற இயலும், அரசியலில் புகுந்து அமைச்சராக வாய்ப்பு உண்டு, ஒரு நிறுவனத்தில் பொது மேலாளராக இருக்க முடியும். போர்க்களத்தில் பகைவரை வெற்றிகொள்ளும் படைத் தலைவராகவும் திகழ முடியும். இப்படியெல்லாம் எடைபோட்டுப் பார்த்து, கல்வி நிலையைப் பற்றி முடிவு செய்யும் போது, தொழில் அல்லது உத்தியோக நிலையைப் பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

பெரும்பாலும் படிப்புக்கும், தொழிலுக்கும் தொடர்பு இருக்கும். டாக்டருக்கு படித்தவர் வக்கீலாக முடியாது. அதுபோல் வக்கீலுக்கு படித்தவர் டாக்டராக முடியாது. ஆனால் இரண்டு படிப்புகளையும் கற்றவர்கள் அநேகம் பேர் உண்டு. அவர்கள் ஒன்றை நீக்கிவிட்டு மற்றொன்றை கவனிக்கக் கூடும். தொழிலுக்குரிய கிரகம் ஒருவரது ஜாதகத்தில் பலம் குறைந்து அமைந்திருந்தால், அந்த நபர் பெரிய அதிகாரியாக வாய்ப்பில்லை.

பொதுவாக சூரியனும், செவ்வாயும் ராஜ கிரகங்கள். இவர்கள் இருவரும் பலமுடன் அமைந்த ஜாதகருக்கு அரசாங்க வேலை தப்பாமல் கிடைக்கும். குரு ஜாதகத்தில் பலமாக அமைந்து, தொழிலோடு தொடர்பு கொண்டிருந்தால், அரசாங்க உத்தியோகம் அமைவது உறுதி. செவ்வாய் பலம் பெற்றும், தொழில் வீட்டோடு தொடர்பு கொண்டிருந்தால் அந்த நபருக்கும் அரசாங்க உத்தியோகம் வாய்க்கும். குறிப்பாக ராணுவம், காவல்துறை, தீயணைப்புத் துறை, சுரங்கத்துறை, சிறைத்துறைகளில் பெரும் பதவி கிடைக்க இடமுண்டு. சனியும், செவ்வாயும் தொழில் துறை வீட்டோடு தொடர்பு கொண்டிருந்தால், அந்த நபர் நீதித்துறையில் சிறந்த நீதிபதியாக திகழ அதிக வாய்ப்பு உண்டு.

இனி கைரேகைப்படி கல்வியும் தொழிலும் எவ்விதம் அமையும் என்பதைப் பார்க்கலாம். மனிதனின் மோதிர விரலின் அடிப்பாகம் தான் சூரிய மேடு. இந்த சூரிய மேடு உப்பலாகவும், பிளவு இன்றி வலுவாக கையில் அமைந்திருந்தால், அந்த நபர் ஏழ்மையானவராக இருந்தாலும், தான் பெறும் உயர்கல்வியால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு லட்சுமி கடாட்சம் பெற்று சிறப்பாக வாழ்வார். நல்ல சூரிய மேடு கையில் அமைந்து, சூரிய ரேகையும் இருதய ரேகைக்கு மேல் அமைந்திருக்க அல்லது கையில் நடுப்பகுதியில் இருந்து சூரிய ரேகை ஆரம்பித்து சூரிய மேடுவரை பலமாகச் செல்ல, அந்த நபர் ‘ராஜராஜேஸ்வர யோகம்’ என்ற சிறப்பான யோகத்தைப் பெறுவார். அந்த யோகம் அவர் பெற்ற கல்வியால் அமையும். அந்த நபருக்கு அதிக தனம், செல்வாக்கு, சமூக அந்தஸ்தை சூரிய பகவான் வாரி வழங்குவார்.


-கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ.