மறைவு ஸ்தானம் தரும் பலன்கள்


மறைவு ஸ்தானம் தரும் பலன்கள்
x
தினத்தந்தி 20 July 2018 12:45 AM GMT (Updated: 19 July 2018 9:31 AM GMT)

ஜோதிடத்தில் உள்ள 12 ராசி கட்டங்களும், மனித வாழ்க்கைக்கு ஏற்றபடி வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் ஒவ்வொரு அங்கமாக குறிக்கும்.

 கேந்திரம் 1, 4, 7, 10 ஆகிய இடங்கள், திரிகோணம் 1, 5, 9 ஆகிய இடங்கள், பணபரம் 2, 5, 8, 11 -ம்  இடங்கள், ஆபோக்லீபம் 1, 3, 6, 9, 12-ம் இடங்கள், மறைவு ஸ்தானங்கள் 3, 6, 8, 12 ஆகிய இடங்கள் சொல்லப்படுகிறது. இதில் கேந்திரம், திரிகோணம் ஆகியவை மிக முக்கிய சுப ஸ்தானங்கள் ஆகும்.

அதே போல் மறைவு ஸ்தானங்களை ‘துர்ஸ்தானம்’ என்கிறார்கள். ஒரு மனிதனுக்கு தன்னுடைய வாழ்வில் நடக்கும் கெட்ட சம்பவங்கள் அனைத்தும் மறைவு ஸ்தானத்தில் தான் சொல்லப்படுகிறது. நம்முடைய கண்களுக்கு புலப்படாத அனைத்துமே ‘மறைவு’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. கண்களால் காண முடியாத அனைத்தும் பொய் என்றும், அறியப்படாத பொருள் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறு அறியப்படாத விஷயங்கள் அனைத்தையும் மறைவு ஸ்தானத்தில் ஆதிபத்தியங்களாக வைத்திருக்கிறார்கள்.

ஒருவரது வாழ்வில் மறைந்து இருக்கும் விஷயங்களை கூட வெளிக்காட்டி கொடுக்கும் சக்தி ஜோதிடத்திற்கு உண்டு. அவ்வாறு மறைந்து இருக்கும் விஷயங்களை பற்றி தெரிந்து கொள்ளத் தான் மறைவு ஸ்தானம் என்பதை உருவாக்கினார்கள். ஒருவருக்கு நோய், ஆயுள், மனோபாவம் இவற்றை எல்லாம் மறைவு ஸ்தானத்தில் விரிவாக பார்க்கலாம்.

மூன்றாம் பாவம்

ஜாதகத்தில் உள்ள ராசி கட்டத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாவது கட்டமாக இருப்பதே மூன்றாம் பாவமாகும். இது சகோதர பாவமாக உள்ளது. இதில் ஜாதகருக்கு பின்னும் சகோதர, சகோதரிகள் இருக்கிறார்களா? என்பது பற்றியும், அந்த சகோதரர்கள் வாழ்க்கை தரம் பற்றியும், அவர்களுக்கு வரக்கூடிய நோய்கள் பற்றியும் அவர்களது மனோபாவ நிலைகளை பற்றியும் எடுத்துக் கூறலாம்.

அதே போல் ஜாதகரின் மனம், அந்த மனதின் நிலைபாடுகள் பற்றியும் பார்க்கலாம். கடல் அளவு துன்பம் வந்தாலும் அதனை தாங்கி நிற்கும் மனதைரியம் பற்றி பார்க்கலாம். இவரது மனதில் தோன்றும் ஆயிரம் ஆசைகள் மற்றும் கற்பனைகள், எண்ணங்களின் வடிவமாக தோன்றக்கூடிய கனவுகள், எதிர்பாராமல் நடக்கும் சில சம்பவங்கள் அதன் நினைவு அலைகள் பற்றி இந்த மூன்றாம் பாவம் தான் கூறுகிறது.

நமது உடல் உறுப்புகளாக இருக்கும் கழுத்து பகுதி, காது மற்றும் குரல், தொண்டை, மூச்சுக் குழாய் மற்றும் உணவு குழாய் உள்ள பகுதி, நாசி இவற்றை எல்லாம் இங்குதான் காண முடிகிறது. நம்மை யாராவது நினைத்தால் உடனே நமக்கு தோன்றும் விக்கல், மனதிலும் எண்ணத்திலும் தோன்றும் கற்பனைகள் மற்றும் குண்டலினி சக்தியாக திகழும் தியான கலை போன்றவை கை கூடி வர இந்த பாவத்தையே பார்க்க வேண்டும்.
‘அக சுத்தம் ஆண்டவனின் சித்தம்' என்பார்கள். அவ்வாறு மனதை தூய்மையாக வைத்து இருக்க செய்வது இந்த பாவம் தான். மேலும் மனம், தைரியம், எண்ணம், கற்பனை, நினைவுகள், குரல் தோன்றும் இடம் இவையாவும் நம் கண்களில் காண முடியாது என்பதால், ஜோதிடத்தில் இந்த மூன்றாம் பாவத்தை மறைவு ஸ்தானமாக வைத்து இருக்கிறார்கள்.

இந்த மூன்றாவது ஸ்தானத்தில் நின்ற கிரகங்களின் பலன்களைப் பற்றி பார்ப்போம்.

* மூன்றாம் பாவத்தில் சூரியன் நின்றால், ஜாதகருக்கு சிம்ம குரல் இருக்கும். அவசியமற்ற தேவையற்ற சிந்தனைகள், கற்பனைகளை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள். அசுரத்தனமான மன தைரியம் கொண்டவர். இவரது மனமும்,  உடலும் வேகமாக இருக்கும். இவருக்கு பின் சகோதரர் இருப்பார்.

* மூன்றாம் பாவத்தில் சந்திரன் நின்றால், ஜாதகருக்கு மெல்லிய குரல் இருக்கும். கற்பனைத் தேரில் பறந்து கொண்டே இருப்பார். சந்திரன் மூன்றில் மறைவதால், ஏதாவது நோய் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். சமயத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றிக் கொள்வார்கள். ஆன்மிகம், தியானம் இவற்றில் மனம் நாடும். ஜாதகருக்கு பின் சகோதரி ஒருவர் இருப்பார்.

* மூன்றாம் பாவத்தில் செவ்வாய் நின்றால், அந்த ஜாதகர் எப்போதும் டென்ஷனாக இருப்பார். பேச்சுகளில் அதட்டல் குரல் வெளிப்படும். மனதில் கள்ளம் கபடம் இன்றி நேர்மையாக இருப்பார்கள். இவர்களுக்கு உடல் சூடு இருக்கும். இவர்களுக்கு மனம் ஒருநிலை கொள்ளாது இருப்பதே ஒருவகை நோய் தான். நாசி பகுதியிலும், கழுத்துப் பகுதியிலும் வலிகள் வந்து போகும்.

* மூன்றாம் பாவத்தில் புதன் நின்றால், நடைமுறைக்கு சாத்தியப்படாத கற்பனையில் வாழ்வார்கள். இவர்களுக்கு மூச்சுக்குழாய் இறுகிக் கொள்வது, உணவு உண்பதில் சிரமம், அடிக்கடி தொண்டை குழி வறண்டு போவது, தொண்டை வலி போன்றவை உண்டாகும். சில சமயம் மூச்சு திணறல் மற்றும் தூசி படலத்தால் ஒவ்வாமை இருக்கும். கழுத்தில் மருக்கள், மச்சம் இருக்கும். இந்த ஜாதகர் சாந்தமான குரல் கொண்டிருப்பார்.

* மூன்றாம் பாவத்தில் குரு நின்றால், கழுத்து பகுதியில் சதை பற்று அதிகமாக இருக்கும். கணீர் என்ற வெண்கல குரல் இருக்கும். காதுகளில் நமைச்சல் உணர்வு இருக்கும். மன வசீகர சக்தி இருக்கும். சுவாச கோளாறுகள் வரக்கூடும். வயது ஆகும் போது சில இடங்களில் வாயுத்தொல்லை ஏற்படும்.
* மூன்றாம் பாவத்தில் சுக்ரன் நின்றால், இனிமையான குரலில் பேசும் தன்மை கொண்டவராக இருப்பார். இவர்களுக்கு நாசியில் பிரச்சினை வரக்கூடும். காதுகளிலும் நரம்புகளிலும் பிரச்சினை வரலாம். கற்பனைகள், கனவுகளுக்கு அளவு இல்லை என்றாலும், அவை எல்லைகடந்ததாக இருக்கும். முதுமை காலத்தில் சில பிரச்சினைகள் வரும்.

* மூன்றாம் பாவத்தில் சனி நின்றால், ஜாதகர் கழுத்து மற்றும் நாசி பகுதியில் பிரச்சினைகள் வரும். மனம் கெட்டவைகளை பற்றியே சிந்திக்கும். காது மந்தமாக கேட்கும். மூச்சு பிடிப்பு, கழுத்து பிடிப்பு இருக்கக்கூடும். அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவதால் தொண்டையில் எலும்புகள், மீன் முள் அடிக்கடி மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. பேசுவது கூட பிறருக்கு கேட்காதபடி மந்தக்குரலாக இருக்கும்.

* மூன்றாம் பாவத்தில் ராகு நின்றால், கழுத்து நீண்டு இருக்கும். நல்ல குரல் ஓசை இருக்காது. அடிக்கடி விக்கல் வரும். உணவு குழாய் சீராய் வைத்து கொள்ள வேண்டும். மனக்குழப்பம், மனதைரியம் இல்லாமல் இருப்பதாலேயே பாதி நோய்க்கு ஆளாகி விடுவார்கள்.

* மூன்றாம் பாவத்தில் கேது நின்றால், மனம் கெட்டதையே நாடும். பொறாமை, சூது, வஞ்சம் என்கிற மனப்போக்கில் இருப்பார்கள். மன தைரியம் குறைந்தாலும், காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். உணவும், சுவாசமும் இவற்றில் மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். கழுத்து வலி, கழுத்தில் மருக்கள், மச்சம் இருக்கும். குரல் ஓசை கேட்கும்படியாக இருக்காது.

மூன்றாம் பாவம் என்னும் மறைவு ஸ்தானங்களில், நவக்கிரகங்களும் நின்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கே பார்த்தோம். இந்த பாவத்தில் கூட்டுக் கிரகங்கள் இருந்தால் அவற்றுக்கு ஏற்றபடி பலன்கள் மாறுபடும். மூன்றாம் பாவத்தில் எந்த கிரகமும் இல்லையென்றாலும் மூன்றாம் பாவ அதிபதி எங்கு உள்ளார் என்பதைப் பொறுத்தும், எந்த கிரகத்தோடு சேர்ந்து இருக்கிறாரோ அவற்றுக்கு ஏற்றபடியும் பலன்கள் மாறுபடும். அதாவது மூன்றாம் பாவாதிபதி மற்றும் மூன்றாம் பாவத்தை பார்க்கும் கிரகத்தை விட மூன்றாம் பாவத்தில் நின்ற கிரகமே வலிமையான கிரகமாக இருக்கும்.

மூன்றாம் பாவத்தில் சூரியன், சந்திரன், புதன், குரு, சுக்ரன் இந்த கிரகங்கள் நின்றால் நல்லது. இவை தவிர செவ்வாய், சனி, ராகு, கேது நிற்கக் கூடாது. மறைந்த இடத்தில் கெட்ட கிரகங்கள் நின்றால் நல்லது என்றாலும் அதன் பாதிப்புகள் துன்பத்தைத் தருவதாக அமைந்து விடும். மூன்றாம் பாவம், சுப கிரக பார்வையில் இருந்தால் சில நன்மைகள் நடைபெறும் வாய்ப்பு உண்டு.

ஜோதிட நூல்கள் மூன்றாம் பாவத்தை மறைவு ஸ்தானமாக எடுத்துக் கொள்வதில்லை. இந்த மூன்றாம் பாவத்திற்கு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் இல்லை. ஏனெனில் மூன்றாம் பாவத்திற்கு எதிர் பாவமாக பாக்கிய ஸ்தானமாக 9-ம் பாவம் உள்ளது. இந்த ஒன்பதாம் பாவம் சிறப்பாக அமைந்தால், அது மூன்றாம் பாவத்தின் பிரச்சினைகளை குறைத்து விடும் என்பது ஜோதிட விதியாகும்.

-ஆர்.சூரியநாராயணமூர்த்தி

Next Story