இறைவன் விரும்பும் நேர்ச்சை


இறைவன் விரும்பும் நேர்ச்சை
x
தினத்தந்தி 24 July 2018 10:04 AM GMT (Updated: 24 July 2018 10:04 AM GMT)

நேர்ச்சை செய்வதைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இறைவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதும், அதற்கு நேர்ச்சை நேர்ந்து அதை நிறைவேற்றுவதும் அத்தனை மதங்களுக்கும் பொதுவான விஷயம்.

கிறிஸ்தவத்தில் நேர்ச்சைகளையும், காணிக்கைகளையும் எப்படி செலுத்தவேண்டும் என்பதை விவிலியம் இவ்வாறு விளக்குகிறது.

“வரவேண்டிய புனிதப் பொருட்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள்”. (இணைச்சட்டம் 12:26-27) என விவிலியம் நேர்ச்சை பற்றி பேசுகிறது.

இறைவன் சொல்கின்ற பொருட்களை மட்டுமல்ல, இறைவன் சொல்கின்ற இடமும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.

இஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி பயணித்தார்கள். நாற்பது ஆண்டு பாலை நில பயணம் முடியப் போகிறது. எகிப்திலிருந்து காதேஸ் பர்னேயா வரை இரண்டு ஆண்டுகள், காதேஸ் பர்னேயா முதல் கானான் வரை முப்பத்தெட்டு ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். கி.மு. 1451-ல் அவர்கள் கானான் நாட்டில் நுழைகிறார்கள் என வரலாறு குறிப்பிடுகிறது.

இன்னும் எழுபது நாட்களில் கானான் நாட்டுக்குள் நுழையலாம் எனும் சூழலில் மோசே நாற்பது நாட்கள் மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.

நாற்பது என்பது விவிலியத்தில் முக்கியமான ஒரு எண். நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு நாற்பது நாட்கள் நீடித்தது.

மோசே, சீனாய் மலையில் கடவுளோடு இருந்து கட்டளைகளைப் பெற்றது, நாற்பது நாட்கள்.

வாக்களிக்கப்பட்ட நாடான கானானை ஒற்றர்கள் நோட்டம் விட்டது நாற்பது நாட்கள்.

இவையெல்லாம் ஒரு புதிய வாழ்க்கைக்கு முன் நிகழ்ந்த நாற்பதுகளின் சில உதாரணங்கள். இங்கும், புதிய நாடான கானானுக்குள் நுழையும் முன் நாற்பது நாட்கள் அறிவுரைகள் நிகழ்த்தப்படுகின்றன. (இணைச்சட்டம் 7:1-11) “நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்” என மோசே மக்களிடம் உரையாற்றினார்.

புதிய ஏற்பாட்டில், இறைமகன் இயேசுவின் மீட்பின் காலத்தில் இது நமக்கு ஒரு புதிய சிந்தனையைத் தருகிறது. ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழையப் போகிற நாம், நமது பாவங்களை ஒவ்வொரு நாளும் உணரவேண்டும்.

எப்போதெல்லாம் இறைவனை நோக்கிப் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் நாம் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் மீட்பு என்பது நாம் சம்பாதித்ததல்ல, நமக்கு பரிசாய் கிடைத்தது. நாம் உழைத்ததல்ல, நமக்கு இலவசமாய்க் கிடைத்தது. அதற்கான ஆயத்தத்தை நாம் செய்ய வேண்டும்.

காணிக்கை, பொருத்தனை, நேர்ச்சை என்பதெல்லாம் இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவின், அன்பின், உரிமையின் வெளிப்பாடுகள்.

கடவுளை மையமாக்கு

நேர்ச்சைகளெல்லாம் கடவுளை மையப்படுத்துபவனவாக இருக்க வேண்டும். தூய்மையைக் கடைப்பிடிக்க உணர்த்துகின்ற ஒன்றாக அவை இருக்க வேண்டும். நமது அந்தஸ்தைச் சொல்லும் இடமாக அது இருக்கக் கூடாது.

பாவத்தை புலப்படுத்து

காணிக்கைகளெல்லாம் பாவத்தைப் புலப்படுத்துபவையாக இருக்க வேண்டும். என்னிடம் மிகுதியானவற்றைப் போடுவதல்ல காணிக்கை. என்னிடம் பாவம் மிகுதியாய் இருக்கிறதே எனும் உணர்வைத் தருவதற்காய் போடுவது. அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டேன், அதற்காக நேர்ச்சை செலுத்துகிறேன் என நேர்ச்சை செலுத்தவேண்டும்.

மீட்பின் முறையை வெளிப்படுத்து

மீட்பின் முறையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நேர்ச்சை இருக்க வேண்டும். தங்களுக்காக இன்னொருவர் பலியானார், அவரே இறைமகன் இயேசு. அதனால் தான் விடுதலை கிடைத்தது எனும் உண்மையை உணர வேண்டும்.

சமூக ஐக்கியத்தை வெளிப்படுத்து

வெறுமனே நமக்கும் கடவுளுக்கும் இடையேயான ஒரு விஷயம் மட்டுமல்ல இந்த நேர்ச்சை. சகமனிதனோடு இருக்கின்ற ஒற்றுமையை, பிணைப்பை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் இருக்க வேண்டும். சகோதர உறவை சரிசெய்த பின்பே இறைவன் காணிக்கையை ஏற்றுக் கொள்கிறார்.

பலி செய்கின்ற பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என பழைய ஏற்பாடு கூறுவது, புதிய ஏற்பாட்டில் இயேசுவை மறைமுகமாய்ச் சுட்டுகின்றன.

தாமதமின்றி எருசலேமுக்கு பலிப்பொருள் கொண்டு வரவேண்டும். தேவாலயத்தில் மட்டுமே பலியிடப்பட வேண்டும். இஸ்ரவேல் தேசத்தின் வெளியே இருந்தாலும் தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். பரிசுத்தமாய் இருக்க வேண்டும். ஊனமானவை மீட்கப்பட வேண்டும்... என்றெல்லாம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இறைமகன் இயேசுவின் பலியோடு நேரடியாக இணைகின்றன.

இன்று இறைவன் நம்மிடம் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கிறார்.

1. உங்கள் பண்டிகைகளில் நான் விருப்பமடைவதில்லை. பழைய பாவம் இடிக்கப்படட்டும், புதிய இருதயம் உருவாகட்டும். பலியல்ல, இதயமே வேண்டும்.

2. தான்தோன்றித் தனமாய் அல்ல, கடவுள் நாமம் விளங்கவே அனைத்தையும் செய்ய வேண்டும்.

3. பலியல்ல, பலியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். 

Next Story