ஆன்மிகம்

மகிழ்ச்சி தரும் சாளக்கிராமம் + "||" + Salakkiramam will be happy

மகிழ்ச்சி தரும் சாளக்கிராமம்

மகிழ்ச்சி தரும் சாளக்கிராமம்
சாளக்கிராமம் என்பது புனிதமான வழிபாட்டு பொருளாக கருதப்படுகிறது. வைணவ குடும்பங்களில் பலரும் இதை பரம்பரை பரம்பரையாக வைத்து பூஜித்து வருவார்கள்.
உருளையாகவும், மிருதுவாகவும், கரிய நிறம் அல்லது சிவப்பு நிறமாக இருக்கும் இந்த வகை கல் விஷ்ணுவின் அருள் நிறைந்தது என்று புராணங்கள் சொல்கின்றன. பூஜை அறையில் சிறிய பெட்டியில் பத்திரமாக பூட்டி வைத்திருப்பவர்கள் ஏராளம்.


வைணவ வழி திருமணங்களில் பெண்ணை கன்னிகாதானம் செய்து கொடுக்கும் போது, வரனுக்கு சாளக்கிராம கல்லை தானம் செய்வதும் வழக்கத்தில் இருக்கிறது.

சாளக்கிராமக் கல் நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் கிடைக்கிறது. இந்த சாளக்கிராமம் பற்றிய ஒரு கதையை இங்கே பார்க்கலாம்.

பிரம்மதேவரின் வியர்வைத் துளியில் இருந்து கண்டகி என்ற ஒரு பெண் உருவெடுத்தாள். அவள் கடுந்தவம் புரிந்தமையால் அச்சமுற்ற தேவர்கள் அவளை நாடி வரமளிக்க வந்தனர். அவளோ அவர்களை தன் பிள்ளைகளாகப் பெற விரும்பினாள். அதற்கு தேவர்கள் அனைவரும் மறுப்பு தெரிவித்து விட்டனர். இதனால் தேவர்கள் அனைவரும் பூமியில் புழுக்களாக பிறக்கும்படி கண்டகி சபித்து விட்டாள்.

இதைக்கேட்டு அதிர்ச்சியும், கோபமும் கொண்ட தேவர்கள், கண்டகிக்கு எதிர் சாபம் அளித்தனர். அதன்படி அவளை ஒரு ஜடமாக மாறும்படி சாபம் கொடுத்தனர்.பிறகு தேவர்கள் அனைவரும் பிரம்மனையும், சிவபெருமானையும் சந்தித்து, தங்களின் சாபத்தை போக்கி அருளும்படி வேண்டினர். அவர்கள் இருவரும் விஷ்ணுவிடம் முறையிடும்படி தேவர்களை அனுப்பி வைத்தனர். அதன்படி தேவர்களும் விஷ்ணுவிடம் சென்று தங்களின் வேண்டுதலை வைத்தனர்.

ஆனால் சாபங்கள் எதையும் அகற்ற முடியாது என்று கூறிய விஷ்ணு ஒரு உபாயம் கூறினார். ‘சாளக்ராம ஷேத்திரத்தில் உள்ள சக்ர தீர்த்தத்தில் நான் வாசம் செய்வேன். தேவர்களாகிய நீங்கள் ‘வஜ்ரகீடம்’ என்ற புழுக்களாக மாறி, அங்குள்ள கூழாங்கற்களை ஆகாரமாகக் கொண்டு வாழவேண்டும். கண்டகி ஒரு நதி வடிவமாக அந்த கற்களில் பாயவேண்டும்’ என்று அருளினார்.

அத்தகைய தேவாம்சமும், விஷ்ணு அம்சமும் பொருந்தியதே சாளக்கிராம கற்கள். பத்ரிநாத்தில் உள்ள இறைவனின் உருவங்கள் சாளக்கிராம கல்லினால் ஆனவை. சாளக்கிராமத்தை கோர்த்து மாலையாகவும் இவைனுக்கு சமர்ப்பிக்கலாம். சாளக்கிராமம் உடைந்திருந்தாலும், உருவம் சிதைவுற்று இருந்தாலும், அக்னியில் எரிந்திருந்தாலும் அதற்கு ஒரு தோஷமும் இல்லை. சாளக்கிராமம் குற்றம் அற்றது.

சாளக்கிராம பூஜை செய்ய மந்திரமோ, தந்திரமோ, புனித தீர்த்தமோ வேறு எதுவுமே தேவையில்லை. அது இருந்தாலே மகிழ்ச்சியை அளிக்க வல்லது. முன்னோர்களுக்கான வழிபாட்டின்போது, சாளக்கிராம கல்லை வைத்து பூஜிப்பது முன்னோர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும். சாளக்கிராம அபிஷேக தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு, அதை அர்ச்சித்த துளசியை தரித்துக் கொண்டு, அதற்கு நிவேதனம் செய்த உணவை உண்பதால் வைகுண்ட வாசம் கிடைக்கும்.

சாளக்கிராம அபிஷேக நீரை கீழே கொட்டக்கூடாது. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இந்த வகை கற்கள், நெடுங்காலமாக கோவில்கள், மடங்கள், வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகிறது.

சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவை ஓர் குறிப்பிட்ட அமைப்பில் உள்ள கற்கள் ‘கேசவம்’ என அழைக்கப்படுகின்றன. இதே போல மாதவம், நாராயணம், கோவிந்தம், விஷ்ணு, மதுசூதனம், திரிவிக்கிரமம், வாமனம், சிறீதரம், இரிசிகேசம், பத்மநாபம், தமோதரம், சங்கர்சனம், பிரத்யும்னம், நரசிம்மம், சனார்த்தனம், அரி, கிருஷ்ணம், சந்தான கோபாலன், லட்சுமி நாராயணன், வராகமூர்த்தி, மத்ஸ்யமூர்த்தி, கூர்மம், சுதர்சனம், ஹிரண்ய கர்ப்பம் என்று 68 வகை சாளக்கிராமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.