முன்னேற்றம் தரும் மொரீசியஸ் முருகன்


முன்னேற்றம் தரும் மொரீசியஸ் முருகன்
x
தினத்தந்தி 31 July 2018 9:08 AM GMT (Updated: 31 July 2018 9:08 AM GMT)

இந்தியாவிலிருந்து அரபிக்கடல், இந்துமகா சமுத்திரம் வழியாக உலகின் தென்மேற்கு மூலைக்குச் சென்றால் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டியுள்ள மடகாஸ்கர் தீவுக்கு அருகில் உள்ளது மொரீசியஸ் தீவு.

கடலும், மலையும் கரும்புக் காடுகளும் நிறைந்து, இயற்கை அன்னை தொட்டில் கட்டித் தூங்க வைக்கும் அத்தீவிற்கு, பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் ஆட்சியாளர்களாக இருந்த போது, தமிழகத்திலிருந்து அந்த மண்ணை வளப்படுத்த தமிழர்களும் சென்றுள்ளனர். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்றுள்ள தமிழர்கள், இன்றைய மொரீசியஸ் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

அதே போல் மொரீசியஸ் தமிழ் மக்கள் சார்பில், தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு என்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழகம் போல பல ஆலயங்களும் அங்கே அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு அந்த ஆலயங்களில் விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

மொரீசியசில் பல தமிழக கட்டிட சிற்பக் கலையின் பாணியில் கோவில்கள் இருப்பினும், தலைநகர் போர்ட் லூயிசில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள ரோஸ்கில்ஸ் பகுதியில் உள்ள முருகன் கோவில் காண்பவர்களைக் கவரும்படி அமைந்திருக்கிறது. திருத்தணி முருகன் கோவில் என்ற பெயரில் அமைந்த இந்த ஆலயம், நூற்றாண்டு விழா கொண்டாடும் நிலையில் இருக்கிறது.

ஆலய அமைப்பு

வண்ணங்கள் பளிச்சிடும் சுதை வேலைப்பாடு நிறைந்த 3 நிலை ராஜகோபுரம் தமிழர்களை தலை நிமிரச் செய்வதாக உள்ளது. ஆலயத்திற்குள் நுழைந்தால் பலி பீடம், பளபளவென்ற கொடிமரம், மயில் வாகனம் ஆகியவற்றை தரிசிக்கலாம்.

மயில் வாகனத்தின் எதிரே மூலவர் முருகப்பெருமான் தனி விமானத்தின் கீழ், கருவறை உள்ளே காட்சி தருகின்றார். அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த முருகப்பெருமான் மனைவியர் யாரும் இல்லாமல், தனித்து நின்ற கோலத்தில் அருள்கிறார். இடது கையை இடுப்பில் வைத்தபடியும், வலது கையை தூக்கியவாறு அதில் பூங்கொத்து வைத்துக்கொண்டும், வேல் தாங்கியபடி உள்ள இவரது உருவம் கண்களைக் கவருவதாக இருக்கிறது.

முருகப்பெருமானின் சன்னிதிக்கு வலதுபுறம் அமர்ந்த நிலையில் விநாயகர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். முருகனுக்கு இடதுபுறம் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க நான்கு கரங்களுடன் மாரியம்மன் அமர்ந்துள்ள தனிச் சன்னிதி உள்ளது. இந்த இரு தெய்வங்களும் தெற்கு பார்த்து இருக்கிறார்கள். மண்டபத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சித்திரம் வரையப்பட்டுள்ளது.

பெரிய மண்டபத்தின் முன்னே முதலில் திருமால் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே கருடன் வீற்றிருக்கிறார். அடுத்து சிறு கோவிலில் நந்தி வீற்றிருக்க, லிங்க சொரூபமாக சிவபிரான் காட்சி தருகிறார். அதன் எதிரே நவக்கிரகங்களின் கூட்டமைப்பு இருக்கிறது.

விழாக்கள்

இந்த ஆலயத்தில் தைப்பூசம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமல்லாது பிற மொழி பேசுவோரும் ஆண், பெண் பாகுபாடின்றி காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பானதாகக் சொல்லப்படுகிறது.

கந்த சஷ்டி விழாவின் ஆறு நாட்களும் அபிஷேகங்களும், ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்திலும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். சந்தனக் காப்பில் முருகனை கண்டுகளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. கார்த்திகை தீபத்தன்று கோவிலிலும், தங்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றுவது தமிழர்கள் மரபு. இங்கும் அதே போன்ற மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மனுக்கு கஞ்சி வார்த்தல் விழா சிறப்பாக நடைபெறுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில், குறிப்பாக கடைசி வாரம் ‘கோவிந்தன் விழா’ கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பக்தர்கள் நெற்றியில் நாமமிட்டு பெருமாளை வழிபடுகிறார்கள்.

இத்திருக்கோவிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் திரவுபதி அம்மன் ஆலயம் அமைத்து மகாபாரதத்தை நினைவு கூருகிறார்கள். மொரீசியஸ் சுதந்திர தினமான மார்ச் 12-ந்் தேதி இந்த ஆலயத்தில் மக்கள் மஞ்சள் ஆடை உடுத்தி தீமிதி உற்சவம் சிறப்பானதாக நடைபெறுகிறது. மொரீசியஸ் முருகப்பெருமான் ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

கடல் கடந்தும், காலங்கள் கடந்தும் தமிழ் தெய்வீகத்தையும் கலாசாரத்தையும் காப்பாற்றி வரும் மொரீசியஸ் தமிழர்களை வாழ்த்துவோம்.

 - டாக்டர் ச.தமிழரசன்


Next Story