ஆன்மிகம்

தேவர்களுக்கு காட்சியளித்த இறைவன் + "||" + Lord appeared for Devas

தேவர்களுக்கு காட்சியளித்த இறைவன்

தேவர்களுக்கு காட்சியளித்த இறைவன்
தேவர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி விஷ்ணுவை நினைத்து பிரார்த்தனை செய்தனர். அவர்களுக்கு அதே இடத்தில் மகாவிஷ்ணு காட்சியளித்து அருளினார்.
 பாண்டவர்களில் ஒருவரான தருமர் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்கிற சிறப்பும் பெற்ற கோவிலாகக் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், செங்கண்ணூர் அருகே உள்ள திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) விஷ்ணு கோவில்.

தல வரலாறு


மகாபாரதப் போரில் பதினைந்தாம் நாளில் பாண்டவர்கள் படையை எதிர்த்துத் துரோணர் கடுமையாகப் போர் செய்தார். அதைக் கண்ட கிருஷ்ணர் அவரை வீழ்த்துவதற்காகப் பீமனை அழைத்து, மாளவநாட்டு மன்னனிடம் இருக்கும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று மட்டும் சொல்லச் சொன்னார்.

அதே போல் தருமரிடமும், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சொல்லச் சொன்னார். ஆனால் தருமர், தன்னால் பொய் சொல்ல முடியாது என்று சொல்லி மறுத்தார்.

உடனே கிருஷ்ணர், ‘தருமா, நீ பொய் எதுவும் சொல்ல வேண்டாம், ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லிவிட்டுப் பின்னர், ‘அசுவத்தாமா என்ற யானை’ என்பதை மட்டும் மெதுவாகச் சொல், அது போதும்’ என்றார். தருமரும் அதனை ஏற்றுக் கொண்டார்.

கிருஷ்ணர் சொன்னபடி, பீமனும் அசுவத்தாமா எனும் யானையைக் கொன்று விட்டு, ‘அசுவத்தாமா கொல்லப்பட்டான்’ என்று சத்தமாகச் சொன்னான். பீமன் சொன்னதைக் கேட்டுத் துரோணர் அதிர்ச்சியடைந்தாலும், பீமன் சொன்னதில் அவருக்கு நம்பிக்கை வரவில்லை. தருமர் பொய் சொல்ல மாட்டார் என்று நம்பிய துரோணர், ‘என் மகன் அஸ்வத்தாமா போரில் கொல்லப்பட்டானா?‘ என்று தருமரைப் பார்த்துக் கேட்டார்.

கிருஷ்ணர் சொல்லியிருந்தபடி தருமரும், ‘அஸ்வத்தாமா கொல்லப்பட்டான்’ என்பதைச் சத்தமாகச் சொல்லி, ‘கொல்லப்பட்டது அஸ்வத்தாமா என்ற பெயருடைய யானை’ என்று மெதுவாகச் சொன்னார். தருமர் மெதுவாகச் சொன்னது துரோணரின் காதுகளில் விழவில்லை. துரோணர் தன் மகன் அசுவத்தாமன் இறந்து போனதாக நினைத்துத் தான் வைத்திருந்த ஆயுதத்தைக் கீழே போட்டார். அதன் பிறகு, துரோணர் எளிதில் கொல்லப்பட்டார்.

மகாபாரதப் போர் நிறைவடைந்ததற்குப் பின்பு, துரோணர் மரணத்துக்குத் தானும் ஒரு காரணமாகி விட்டோமே என்கிற மன வருத்தம் தருமர் மனதில் நிலைத்துப் போனது. அதில் இருந்து விடுபட்டு மன அமைதி அடைய நினைத்த தருமர், தனது சகோதரர்களுடன் கேரளப்பகுதிக்கு வந்தார். அப்போது, அங்கிருந்த பழமையான விஷ்ணு கோவில் ஒன்றைப் பார்த்தார். அந்தக் கோவிலைப் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி அடைந்தார் என்று இந்தக் கோவிலின் தல வரலாறு தெரிவிக்கிறது.

தருமர் புதுப்பித்து வழிபட்ட விஷ்ணு கோவில், முன்பு தேவர்கள் அனைவருக்கும் விஷ்ணு ஒரே இடத்தில் காட்சியளித்த இடத்தில் அமைந்தது என்று சொல்லப்படுகிறது. அதற்கும் ஒரு முன் வரலாற்றுக் கதை இருக்கிறது.

புராணக் கதை

சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்ற சூரபத்மன், தான் பெற்ற வரங்களைக் கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு துன்பங்களைக் கொடுத்து வந்தான். அதனால் கவலையடைந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான், தான் கொடுத்த வரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் அவனைத் தன்னால் தண்டிக்க இயலாது என்றும், விஷ்ணுவிடம் சென்று முறையிட்டால் அவர், உங்களுக்கு நல்வழி காட்டுவார் என்றும் சொல்லி அவர்களைத் திருப்பி அனுப்பி வைத்தார்.

இதையடுத்து தேவர்கள் அனைவரும் பூலோகத்தில் ஒன்றாகக் கூடினர். பின்னர் அனைவரும் இணைந்து விஷ்ணுவை நோக்கி தவமியற்றத் தொடங்கினர். அவர்களது ஒன்றுபட்ட வேண்டு தலில் மனம் மகிழ்ந்த விஷ்ணு, அங்கே காட்சி யளித்தார். தேவர்கள் (இமையவர்கள்) ஒன்றாகக் கூடிய இடத்தில் காட்சியளித்ததால், இத்தல இறைவனுக்கு ‘தேவர்களின் தந்தை’ என பொருள்படும் வகையில் ‘இமையவரப்பன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது.

சிவபெருமான், சூரபத்மனுக்குக் கொடுத் திருந்த வரங்களைக் கேட்டறிந்த விஷ்ணு, சூரபத்மனை அழிக்க முருகப்பெருமானைக் கேட்டுக் கொண்டார். முருகப்பெருமான், தன்னிடமிருந்த வேற்படையால் சூரபத்மனுடைய அரக்கர் படைகளை முழுவதுமாக அழித்தார். பல்வேறு தோற்றங்களில் தோன்றிப் போரிட்ட சூரபத்மனை, ஒவ்வொரு தோற்றத்திலும் அழிக்க முற்பட்டு வெற்றி கண்ட முருகப்பெருமான், இறுதியாக, ஒரு மாமரமாகத் தோன்றிய அரக்கனை இரண்டாகப் பிளந்து ஒன்றைச் சேவலாகவும், மற்றொன்றை மயிலாகவும் மாற்றி அவ்விரண்டையும் தன் கொடியாகவும், வாகனமாகவும் அமைத்துக் கொண்டார்.

கோவில் அமைப்பு

இத்தல இறைவனான இமைய வரப்பன் மேற்கு நோக்கி, நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் இருக்கிறார். வலதுபுறத்தில் இருக்கும் இரு கரங்களில் ஒன்றில், சக்கரமும், மற்றொன்றில் செந்தாமரை மலரும் வைத்திருக்கிறார். இடது புறத்தில் இருக்கும் கரங்களில் ஒன்றில் சங்கும், மற்றொன்றில் தரையில் ஊன்றிய கதாயுதத்தையும் வைத்துக் கொண்டிருக்கிறார். இங்கிருக்கும் தாயார், ‘செங்கமலவல்லி’ என்றழைக்கப்படுகிறார்.

கோவில் வளாகத்தில் கோசால கிருஷ்ணன், தருமசாஸ்தா ஆகியோருக்கும் தனிச்சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. தலவிருட்சமாக ஆலமரம் இருக்கிறது. கோவிலுக்குச் செல்லும் பாதையில் வலதுபுறம் ‘சங்குதீர்த்தம்’ என்ற தீர்த்தக்குளம் உள்ளது.

திருச்சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந் திருக்கும் இந்த ஆலயத்தில், விஷ்ணுவுக்குரிய அனைத்துச் சிறப்பு நாட்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி, மீனம் (பங்குனி) மாதம் ஹஸ்தம் நட்சத்திர நாளில் கொடியேற்றத்துடன் தொடங்கி, திருவோணம் நட்சத்திர நாளில் ‘ஆறாட்டு’வுடன் நிறைவடையும் முதன்மை விழா (பிரம்மோற்சவம்) பத்து நாட்கள் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதே போன்று, சிங்ஙம் (ஆவணி) மாதம் அஷ்டமி ரோகிணி நாளில் தொடங்கிப் பத்து நாட்கள் வரை தசாவதாரப் பெருவிழாவும் நடைபெறுகிறது. இந்நாட்களில் விஷ்ணுவின் பத்து தோற்றங்களும் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கியார் கூத்து, கொடியாட்டம் உள்ளிட்ட மலையாள மரபு வழி நடனங்கள் இடம் பெறுகின்றன.

இது தவிர தனு (மார்கழி) மாதம் ஏழு நாட்கள் பாகவத உபன்யாசம், மேடம் (சித்திரை) மாதம் வரும் அஷ்டமி ரோகிணி நாள், தனு (மார்கழி) மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி நாள் போன்றவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதேபோல், மகரவிளக்கு மண்டல பூஜை நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

தான் செய்த தவறான செயல்களை நினைத்து மனம் வருந்துபவர்கள், மனக் குழப்பமுடையவர்கள் மற்றும் மன அமைதி வேண்டுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு மன ஆறுதலையும், மன அமைதியையும் பெறலாம். இவை தவிர, பயம் நீங்குதல், நோய்களில் இருந்து விடுபடுதல், நல்ல உடல்நலம் பெறுதல், தடைகள் நீக்கம் போன்றவைகளுக்கும் பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்த ஆலயத்தில் பக்தர்களுக்குப் பால் பாயசம் பிரசாதமாக அளிக்கப்படுகிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அமைவிடம்

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது செங்கண்ணூர். இங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) அமைந்திருக்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து 115 கிலோமீட்டர், கொல்லத்தில் இருந்து 70 கிலோமீட்டர், கோட்டயத்தில் இருந்து 38 கிலோமீட்டர், திருவல்லாவில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செங்கண்ணூர் செல்லப் பேருந்து மற்றும் ரெயில் வசதிகள் அதிக அளவில் உள்ளன.

- தேனி மு.சுப்பிரமணி

அஞ்சம்பலம்

மகாபாரதப் போருக்குப் பின்பு பஞ்ச பாண்டவர்களான தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோருக்குத் தாங்கள் செய்த சில தவறுகள் மனச்சுமையாக இருந்தன. அந்த மனச் சுமையில் இருந்து தங்களை விடுவித்து, மன அமைதி கொள்வதற்காகக் கேரளப்பகுதிக்கு வந்த அவர்கள், தகுந்த பராமரிப்பின்றி பழமையடைந்திருக்கும் மகாவிஷ்ணு கோவில்களைப் புதுப்பித்து வழிபடுவதென்று முடிவு செய்தனர். அதன்படி தருமர்- திருச்சிற்றாறு (திருச்செங்குன்றூர்) இமையவரப்பன் கோவிலையும், பீமன் - திருப்புலியூர் மாயபிரான் கோவிலையும், அர்ச்சுனன் - திருவாரண்விளை பார்த்தசாரதி கோவிலையும், நகுலன் - திருவண்வண்டூர் பாம்பணையப்பன் கோவிலையும், சகாதேவன் - திருக்கடித் தானம் (திருக்கொடித்தானம்) அற்புத நாராயணர் கோவிலையும் புதுப்பித்து வழிபட்டு மன அமைதி பெற்றனர். பஞ்சபாண்டவர்களால் புதுப்பிக்கப்பட்ட இந்த ஐந்து கோவில்களும் கேரளாவில் ‘அஞ்சம்பலம்’ எனப்படுகின்றன.

ஆலயத்தின் சிறப்புகள்

* இக்கோவில் 108 வைணவத் திருத் தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

* நம்மாழ்வார் இத்தல இறைவனைப் போற்றி 11 பாசுரங்கள் பாடியுள்ளார்.

* பஞ்சபாண்டவர்களுள் தருமர் மன அமைதி வேண்டிப் புதுப்பித்து வழிபட்ட கோவில் என்பதால், இந்த ஆலயம் ‘தருமர் கோவில்’, ‘தருமச்சேத்திரம்’, ‘தரும அம்பலம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

* நம்மாழ்வார் பாடிய பாசுரத்தில் ‘திருச்செங்குன்றூர்’ என்று அழைக்கப்படும் இத்தலம், இக்கோவிலின் அருகே ஓடும் சிற்றாறுவின் பெயரால் ‘திருச்சிற்றாறு’ என்று அழைக்கப்படுகிறது.