ஆன்மிகம்

முருகப்பெருமானோடு பேசிய அப்பரானந்தர் + "||" + Apparanadar speach in Muruga peruman

முருகப்பெருமானோடு பேசிய அப்பரானந்தர்

முருகப்பெருமானோடு பேசிய அப்பரானந்தர்
எட்டயபுரம் ஜமீனின் தலைமைப் புலவரான கடிகை முத்து புலவர் வந்து, ‘யார் இந்த பரதேசி?. இவனுக்கு ஏன் இந்த மரியாதை’ என்று கிண்டலாக கேட்டார்.
கடந்த வாரம் அப்பரானந்த சுவாமிகளுக்கு இறையருள் கிடைத்ததையும், சொக்கம்பட்டி ஜமீன் அவரின் பக்தராக மாறியதையும், அப்பரானந்த சித்தர் சொக்கம்பட்டி அரண் மனைக்கு வந்து அரியணையில் அமர்ந்தபோது, எட்டயபுரம் ஜமீனின் தலைமைப் புலவரான கடிகை முத்து புலவர் வந்து, ‘யார் இந்த பரதேசி?. இவனுக்கு ஏன் இந்த மரியாதை’ என்று கிண்டலாக கேட்டார்.


கடிகை முத்து புலவரின் கடுமையான சொல், அப்பரானந்த சித்தர் மீது பாய்ந்தவுடன் நிலைகுலைந்து போனார் சொக்கம்பட்டி ஜமீன்தார்.

‘இவர் எனக்கு ஞானகுரு. என் பிறவித் துயர் தீர்க்கும் மெய்க்குரு' என பதறியபடி கூறினார்.

அதற்கும் எகத்தாளமான சிரிப்பை உதிர்த்தார் கடிகை முத்து புலவர். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கடிகை முத்து புலவர் அங்கிருந்து சென்று விட்டார்.

இதற்கிடையில் அப்பரானந்த சித்தர் எதுவும் பேசவில்லை. அவர்கள் இருவரின் வாதங்களையும் சிரித்தபடியே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

நாட்கள் கடந்தன.

எட்டயபுரம் வந்த கடிகை முத்து புலவருக்கு கன்னத்தில் புற்று நோய் உருவாகி விட்டது. இதனால் அன்னம், தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்தார். வலியால் துடித்தார். சங்கரன்கோவில், திருச்செந்தூர் என ஒவ்வொரு தலங்களாகச் சென்று, இறைவனைப் பாடி சுகம் அளிக்கும்படி வேண்டினார். ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை.

ஒரு முறை திருச்செந்தூரில் வழிபட்ட கடிகை முத்து புலவர், இரவு நேரத்தில் ஆலயம் முன்பாக உள்ள கடற்கரையில் படுத்து கண் அயர்ந்தார். அப்போது அவர் கனவில் தோன்றிய முருகப் பெருமான், ‘என்னுடைய சீடனை நீ பழித்து விட்டாய். நெட்டூர் போ.. அவன் கையால் உணவு வாங்கி சாப்பிடு. எல்லாம் சரியாகிவிடும்’ என்றார்.

அதிர்ந்து போன புலவர், விடிந்தும் விடியாததுமாக நெட்டூர் வந்து சேர்ந்தார். அங்கு தியானத்தில் இருந்த அப்பரானந்த சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

இப்போதும் சிரித்தபடியே கடிகை முத்து புலவரைப் பார்த்தார் அப்பரானந்த சித்தர். பிறகு தான் தவப்பிச்சையாக பெற்று வைத்திருந்த அன்னத்தை புலவரின் கன்னத்தில் தேய்த்தார். தான் தவப் பிச்சை எடுத்து வரும் உணவை மூன்று நாட்கள் சாப்பிடும்படி கூறினார். புலவரும் அப்படியே செய்தார்.

என்ன ஆச்சரியம்.. புலவரின் நோய் பூரணமாக தீர்ந்து போனது. ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார், கடிகை முத்து புலவர்.

அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக ‘அப்பரானந்த ஆனந்த மாலை' என்ற பாடல் தொகுப்பைப் பாடி, நன்றியுடன் சித்தர் வசம் அதைச் சமர்ப்பித்தார். அதன்பிறகு எட்டயபுரம் புறப்பட்டுச் சென்றார்.

ஒரு முறை சித்தரை தரிசிக்க வந்த சொக்கம்பட்டி ஜமீன்தார், ‘சுவாமி! நான் திருச்செந்தூர் செல்கிறேன். என்னுடன் பல்லக்கில் எழுந்தருள வேண்டும்' என்றார்.

அதற்கு சித்தர், ‘எனக்கு சிவிகை வேண்டாம். உனக்கு முன் நான் திருச்செந்தூர் வந்து சேர்ந்து விடுவேன்' என்று கூறிவிட்டு, அங்கிருந்த மருதமரத்தின் அடியில் போய் அமர்ந்து கொண்டார்.

இதையடுத்து ஜமீன்தார் திருசெந்தூர் புறப்பட்டார். வழியில் அவருக்கு கடுமையான நீர் தாகம் எடுத்தது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது சேவகனின் முன்பு தோன்றிய அப்பரானந்த சித்தர், ‘தென் கீழ்த்திசையில் போய் பார் தண்ணீர் கிடைக்கும்' என்றார். அது போலவே தண்ணீர் இருந்தது.

ஜமீன்தாருக்கு முன்பாகவே திருச்செந்தூர் ஆலயம் வந்த அப்பரானந்த சித்தர், சேவகன் வடிவில் ஆலய நிர்வாகத்தினரிடம் ‘சொக்கம்பட்டி ஜமீன்தார் நாளை வருவான்' எனக் கூறி மறைந்தார்.

மறுநாள் ஜமீன்தாரை வரவேற்க ஆலய குருக்கள் காத்திருந்தனர். ஆச்சரியமுற்ற ஜமீன்தார், சுவாமி நேற்று இரவே இங்கு வந்து விட்டதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார். முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, அங்கேயே தங்கினார் ஜமீன்தார்.

இரவு திருச்செந்தூர் முருகன் கோவில் சன்னிதிகள் மூடப்பட்ட பிறகு, ஆலயத்திற்குள் நுழைந்தார் அப்ப ரானந்த சித்தர். கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது. நேராக முருகப்பெருமான் சன்னிதிக்குச் சென்ற சித்தர், ‘குருவே, நான் சித்தி அடைவது எப்போது?' எனக் கேட்டார்.

அப்போது அங்கு ஒரு குரல் கேட்டது. பேசியது முருகப்பெருமான் தான். ‘அப்பரானந்தா! இன்னும் 24 மாத காலங்களுக்கு உனக்கு பணி உள்ளது. பெற்றோரின் கடன் முடித்த பிறகே உனக்கு சித்தி கிடைக்கும், நீ.. வணங்கும் வேல் அருகிலேயே உனக்கு சமாதி வைப்பார்கள். அதன் பின் கர்ப்பக்கிரகத்தில் தற்போது நீ வேல் வைத்து வணங்கிய இடத்தில், என்னை பிரதிஷ்டை செய்வார்கள். என்னை வணங்கும் பக்தர்கள் அனைவரும் உன்னையும் வணங்குவார்கள்' என கூறி அருளினார்.

இறைவனை தரிசித்து விட்டு வெளியே வந்தார் சித்தர். அனைத்தையும் வெளியே இருந்து கவனித்துக் கொண்டிருந்த சொக்கம்பட்டி ஜமீன்தாரின் சேவகன், ஆச்சரியத்துடன் இதுபற்றி ஜமீன்தாரிடம் கூறினான். அவருக்கு, முருகப்பெரு மானுடன் பேசும் ஆற்றல் பெற்றவர் சித்தர் என்பதில் எல்லையில்லாத மகிழ்ச்சி.

உடனடியாக சித்தரைப் போய் சந்தித்த ஜமீன்தார், ‘சுவாமி! நான் குழந்தை பேறு இல்லாமல் தவிக்கிறேனே. இதற்கு அருள்புரியமாட்டீர்களா' என்று வேண்டினார்.

‘உனக்கு மகன் பிறப்பான். அதற்காக நீ.. செந்தூரில் உள்ள சரவணப் பொய்கையைச் சீர் செய்யவேண்டும்' என்றார் சித்தர். மறுநிமிடமே சரவணப்பொய்கையை சீர் செய்ய நடவடிக்கை எடுத்தார் ஜமீன்தார்.பின்னர் சொக்கம்பட்டி திரும்பும்போது, தனது தாகம் தீர்த்த சுனையைத் தேடினார். ஆனால் அந்த சுனை அங்கே இல்லை. எல்லாம் சித்தரின் செயல் என்று நினைத்தபடி அரண்மனை வந்து சேர்ந்தார். அப்பரானந்த சித்தர் கூறியபடியே ஜமீன்தாருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

காலங்கள் கடந்தன. முருகப்பெருமான் சொன்னபடியே தனது தாய் தந்தைக்கு இறுதி மரியாதை செய்து விட்டு, நெட்டூரில் தவப்பிச்சை அன்னத்தை தொடர்ந்து கொண்டிருந்தார் அப்பரானந்த சித்தர். வேலுக்கும் தவறாமல் பூஜை செய்தார்.

இந்த நிலையில் இருளகற்றி அம்மையின் இறுதி காலத்தை சித்தர் உணர்ந்தார். அவரை தவம் செய்யும்படி சித்தர் பணித்தார். இருளகற்றியம்மை தவம் இருந்தார். அவரது உயிர் ஒளியில் கலந்தது. அவரது ஒடுக்கத்தை தான் அடங்கப்போகிற இடத்திற்கு அருகில் தன் கையாலேயே அமைத்தார். சித்தரின் தமக்கை முத்தம்மையும் அந்த ஆலய வளாகத்திலேயே சமாதி வைக்கப்பட்டார்.

அது ஒரு ஆனி மாதம் வியாக்கிழமை பூச நட்சத்திரம். அப்பரானந்த சித்தர், சொக்கம்பட்டி ஜமீன் மற்றும் பக்தர்களை அழைத் திருந்தார். பின் அவர்களை நோக்கி, ‘எனது இறுதி காலம் வந்து விட்டது. இருளகற்றிக்கு வடக்கில் என்னை அடக்கம் செய்யுங்கள். நான் ஒடுங்கியப் பின் இறைவனுக்கும் வேற்படைக்கும் உண்மையான அன்போடு பணி செய்யுங்கள். இந்த இடத்தில் நற்பணி செய்வோருக்கு எல்லா அறப் பயன்களும், பொருளும், இன்பமும் கிட்டும். அவர்கள் அனைவரும் முக்தியும் அடைவார்கள்’ என்று அருளினார்.

மேலும் ‘இந்தச் சன்னிதியில் முருகப்பெருமானையும் பிரதிஷ்டை செய்யுங்கள். எல்லா தேவர்களும் துதி செய்ய அவர் இங்கு வந்து கோவில் கொள்வார்’ என்றார்.

அனைவரும் சூழ்ந்து நிற்க, அப்பரானந்தர் சிற்றாற்றில் நீராடினார். புலித் தோலை ஆசனமாக விரித்து வடக்கு நோக்கி பத்மா சனத்தில் அமர்ந்தார். சின்முத்திரைக் காட்டி அருட் சமாதி நிலையில் ஒன்றினார். எல்லாரும் அதிசயிக்குமாறு மேலேழுந்த ஒரு சோதி வான் நோக்கிச் சென்றது.

அதன்பின் அப்பரானந்த சித்தர் அருளியபடியே ஆலயம் அமைக்கப்பட்டது. கர்ப்பக்கிரகத்தில் வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்தார்கள். தற்போது இந்த ஆலயம் சுப்பிரமணிய சுவாமி, அப்பரானந்த சுவாமிகள் ஆலயம் என்றே போற்றப்படுகிறது.

அப்பரானந்த சுவாமிகளின் குருபூஜை ஆனி மாத பவுர்ணமியில் நிகழ்த்தப்படுகிறது. இக்கோவிலில் திருச்செந்தூரில் நடைபெறும் அனைத்து திருவிழாக்களும் நடைபெறும்.

ஆனி திருவிழா தான் இக்கோவிலில் மணிமகுட திரு விழாவாகும். இவ்விழாவில் அன்ன பிச்சை வழங்கப்படும். இதற்காக அன்னம் குவிக்கப்பட்டு, சுவாமி மற்றும் அவரின் குருநாதரின் பாதக்குறடுகள், கைத் தண்டுகள் படையலில் வைத்து பூஜை செய்யப்படும். இச்சமயம் அப்பரானந்த சுவாமி களும் இவரது குருநாதர் குழந்தை முத்தானந்தா சுவாமிகளும் இங்கே வந்து அருளி நிற்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். அன்ன பிச்சையை சாதுக்கள் பக்தர்களுக்கு வழங் குவார்கள். அதை உண்ணும் மக்களுக்கு வேண்டும் வரம் கிடைக்கிறது. குறிப்பாக குழந்தை வரம். தடைபட்ட திருமணம் நடந்தேறுகிறது. கடன் தீர்ந்து தொழில் பெருகுகிறது. நாள் பட்ட நோய் தீருகிறது.

தினமும் இக்கோவிலின் நடை காலை 6 மணியில் இருந்து 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் திறந்திருக்கும்.

அமைவிடம்

திருநெல்வேலியில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் உள்ளது ஆலங்குளம். இங்கிருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருநெல்வேலி- சங்கரன்கோவில் சாலையில் அழகிய பாண்டிய புரத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும், சங்கரன்கோவிலில் இருந்து ஊத்துமலை, சோழச்சேரி வழியாக 10 கிலோமீட்டர் தொலைவிலும் நெட்டூர் அமைந்துள்ளது. இங்கு செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.

-சித்தர்களைத் தேடுவோம்.

சித்தர் அருளிய 11 கடமைகள்

தன்னை வணங்க வரும் பக்தர்களிடம், அப்பரானந்த சித்தர் 11 கடமைகளை கடைப்பிடிக்கும்படி கூறிவந்தார். ஞானத்தின் தொடக்கமான அந்த கடமைகளில், ‘சிவனது மலரடிகளில் மலர் தூவி வழிபட்ட பின்பே உண்ணுதல். பசுந்தழைகளை பசு உண்ணக் கொடுத்தல், கதிரவனை வணங்குதல், உண்ணும் போது பிறருக்கு கொடுத்து உண்ணுதல், இனியச் சொற்களையே எல்லோரிடத்திலும் பேசுதல், நமசிவாய என்ற ஐந்தெழுத்தை இடைவிடாது ஓதுதல், நன்மை பெருகும் காலத்திலும் நிலைத்த வாய்மையைப் போற்றுதல், தொண்டு செய்வோர்களையும் இறைவனையும் வாழ்த்துதல், தாய் தந்தையர், குரு, தெய்வங்களைப் பேணும் அன்பு, எல்லா உயிரையும் தன்னுயிர் என எண்ணுதல், ஞான குரு உபதேசத்தினைக் கேட்பது’ போன்றவை அந்த கடமைகளாகும். இக்கடமையை நிறைவேற்றும் போது அறிவு நிறையும், வீட்டின் இன்பத்துக்கும் குறை ஏற்படாது என்பது சித்தரின் வாக்கு.