ஆன்மிகம்

‘தயம்மம்’: தண்ணீரின்றி சுத்தம் செய்யும் முறை + "||" + Method of cleaning without water

‘தயம்மம்’: தண்ணீரின்றி சுத்தம் செய்யும் முறை

‘தயம்மம்’: தண்ணீரின்றி சுத்தம் செய்யும் முறை
‘தயம்மம்’ செய்வதிலும் சில சந்தர்ப்ப நிர்பந்தங்களை எப்படி கையாள வேண்டும் என்றும் சில நிகழ்வுகள் மூலம் சொல்லித் தருகிறான் இறைவன்.
இஸ்லாத்தில் ஐம்பெரும் கடமைகளை நிர்ணயித்த அல்லாஹ் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய வரைமுறைகளையும் வகுத்துச் சொன்னான். தொழுகை என்பது கட்டாய கடமை. எந்த நிலையிலும் அதனை தவிர்ப்பதற்கு யாருக்கும் அனுமதியில்லை.

இது எந்த அளவிற்கு ஆழமாக வலியுறுத்தி சொல்லப்பட்டிருக்கிறது என்றால்; நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் விழித்துக்கொண்டிருக்கும் போது, அவன் தன் கண்களை அசைத்து ஜாடை செய்தாகிலும் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பதே.

ஆனாலும் அந்த தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்றால், உள்ளம் தூய்மையாகவும், உடல் தூய்மையாகவும், தொழும் இடம் தூய்மையாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. அல்லாஹ் கட்டளையை அத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை.

உடலைச் சுத்தம் செய்வதற்கு ‘ஒளு’ என்ற முறையையும் கற்றுத்தருகிறான். எப்படி அந்த ‘ஒளு’ என்ற சுத்தம் செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்பதைப் பற்றி மிகத் தெளிவாக இந்த வசனத்தில் குறிப்பிட்டு உள்ளான்.

“நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் அதற்கு முன்னர் உங்கள் முகத்தையும் முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால்கள் வரை உங்கள் இருபாதங்களையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் கையில் நீரைத் தொட்டு உங்கள் தலையைத் தடவிக் கொள்ளுங்கள். நீங்கள் முழுக்குடையவர்களாக இருந்தால் கை கால்களை மட்டும் கழுவினால் போதாது, உடல் முழுவதையும் கழுவி தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். அன்றி நீங்கள் நோயாளிகளாக இருந்தால் அல்லது பயணத்தில் இருந்தால் அல்லது உங்களில் எவரும் மலஜலம் பாதைக்கு சென்று வந்திருந்தால் அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்து கொள்வதற்கு வேண்டிய தண்ணீரை நீங்கள் பெறவில்லைஎனில் தயம்மம் செய்து கொள்ளுங்கள். அதாவது சுத்தமான மண்ணை உங்கள் கைகளால் தொட்டு அதைக் கொண்டு உங்கள் முகங்களையும் கைகளையும் துடைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு கஷ்டத்தை தர அல்லாஹ் விரும்பவில்லை. எனினும் அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும் தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகிறான். இதற்காக நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துவீர்களாக.” (திருக்குர்ஆன் 5:6)

தண்ணீரைக் கொண்டு தான் அழுக்கை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும் என்று சொன்னவன், தண்ணீர் கிடைக்காத நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று “தயம்மம்” என்ற முறையைக் கற்றுத் தந்தான். இதற்கான ஒரு வரலாற்று பின்னணியும் உண்டு.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியூர் பயணம் சென்ற போது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களையும் தன் நண்பர்கள் சூழ்ந்த சிறு குழுவையும் சேர்த்துக் கொண்டார்கள். இந்த பயணத்தின் போது அன்னை ஆயிஷா (ரலி) தங்களின் உறவினர் அஸ்மா (ரலி) அவர்களிடம் ஒரு முத்து மாலை ஒன்றை இரவலாக வாங்கி அணிந்து கொண்டார்.

பயணத்தின் போது வழியில் அன்னை ஆயிஷா (ரலி) அணிந்திருந்த முத்துமாலை எங்கேயோ தவறி விழுந்து விட்டது. இரவல் வாங்கிய மாலையாயிற்றே, இதயம் பதை பதைத்துப் போனார்கள். அண்ணல் எம் பெருமானாரிடம் செய்தி சொல்லிய போது அத்தனை சஹாபாக்களும் முத்துமாலையைத் தேடி கண்டு பிடிப்பதில் மும்முரம் காட்டினார்கள். எங்கும் தேடியும் மாலை கிடைக்கவில்லை. இரவும் வந்து விட்டது. தொழுகையின் நேரமும் நெருங்கி விட்டது. அடர்ந்த பாலைவனம், அங்கே தண்ணீர் கிடைப்பதற்கோ எந்த வழியும் இல்லை. கைவசம் இருப்பதோ தாகம் தீர்ப்பதற்கு மட்டும் கொஞ்சம் தண்ணீர். தொழுகைக்காக ‘ஒளு’ (சுத்தம்) செய்ய வேண்டும். நிர்பந்தமான நிலைமை.

அண்ணல் நபிகள் நாயகம் அவர்கள் அப்படியே ‘ஒளு’ இல்லாமலேயே தொழுகையை நடத்தினார்கள். அவர்கள் படும் சிரமத்தை கவனித்துக் கொண்டிருந்த அல்லாஹ், மண்ணால் சுத்தம் செய்யும் ‘தயம்மம்’ என்ற முறையைச் சொல்லித் தந்து இந்த வசனத்தை இறக்கினான்.

‘தயம்மம்’ என்பது சுத்தமான மண்ணைத் தொட்டு அதனைத் தட்டிய பின் தன் முகத்தையும், இரண்டு கைகளையும் தடவிக் கொள்ள வேண்டும். இதனால் உடல் சுத்தம் அடைந்து விடும். பின்னர் தொழுகையை நிறைவேற்றலாம்.

அன்னை ஆயிஷா (ரலி) மூலம் இது போன்ற ஒரு நிகழ்வை நிகழ்த்தி காட்டி ‘தயம்மம்’ என்ற ஒரு முறையை உலகுக்கு எடுத்துச் சொல்லவே அல்லாஹ் நாடினான். எந்த ஒரு செயலுக்கும் ஒரு நன்மை அமைந்திருக்கும் என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

‘தயம்மம்’ செய்வதிலும் சில சந்தர்ப்ப நிர்பந்தங்களை எப்படி கையாள வேண்டும் என்றும் சில நிகழ்வுகள் மூலம் சொல்லித் தருகிறான் இறைவன்.

ஒரு முறை ஜலாஸில் யுத்தத்திற்கு அம்ரு இப்னுஆஸ் (ரலி) தலைமையேற்று சென்றிருந்தார். போரில் வெற்றி பெற்று திரும்பி வரும் வழியில் இடையில் ஓரிடத்தில் தங்கினார்கள். மறுநாள் காலை பஜ்ர் தொழுகையை தளபதி தான் அமீராக இருந்து தொழ வைக்க வேண்டும். அப்போது காலையில் குளிக்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது. தண்ணீர் இல்லாத நிலையில் குளிக்காமலேயே அவர் தொழுகையை நடத்தினார்.

படை மதீனாவை வந்து அடைந்ததும் அண்ணல் நபிகளிடம் அம்ரு இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் செயல் குறித்து புகார் செய்யப்பட்டது. நபிகளார் விசாரணை செய்து நிலைமையை சரிவர புரிந்து கொண்டார்கள். “எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் போது எல்லா செயல்களும் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும்” என்று சொல்லி விட்டு ‘தயம்மம்’ செய்யும் முறையை கற்றுக் கொடுத்தார்கள்.

இதுபோல இன்னொரு நிகழ்வு குறித்து ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்வாறு அறிவிக்கிறார்கள். இது போன்று ஒரு போர் முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர் சஹாபாக்கள். ஓரிடத்தில் இரவில் தங்கிய போது ஒரு சஹாபாவிற்கு தூக்கத்தில் அசுத்தம் செய்யும் நிைலமை ஏற்பட்டு விட்டது. கடும் குளிர் காலம். தண்ணீர் நிறையவே இருக்கிறது. ஆனால் தண்ணீர் மிகவும் உறைந்த நிலையில் இருந்தது. அவர் உடலிலோ போரில் ஏற்பட்ட காயங்கள் இருந்தது. அதில் தண்ணீரை ஊற்றி குளித்தால் உயிருக்கு ஆபத்தான நிைலமை ஏற்பட்டு விடும். அவரும் தன் சக தோழர்களுடன் ஆலோசிக்கிறார். “இந்த நிலையில் குளிக்காமல் தொழலாமா?” என்று அவருக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. எனவே குளிக்காமலேயே தொழுகையை நிறைவேற்றி விட்டார்.

இந்த நிகழ்ச்சியும் அண்ணல் நபிகள் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது அவர்கள் அப்போதும் ‘தயம்மம்’ பற்றியே சஹாபாக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.

‘தயம்மம்’ செய்வது சுத்தமான மண்ணைத் தொட்டு மட்டுமே செய்ய வேண்டும். சிலர் விவரம் தெரியாமல் சுவற்றில் கைகளைத் தொட்டு தயம்மம் செய்வது கூடும் என்று வாதிடுகிறார்கள்.

அதற்கு ஆதாரமாக ரஸூலுல்லாஹ் ஒரு முறை ஒரு வீட்டில் சுவரைத் தொட்டு தயம்மம் செய்தார்கள் என்று சொல்கிறார்கள். கண்மணி நாயகம் நாள் முழுவதுமே ஒளுவோடு இருக்கின்ற தன்மை கொண்டவர்கள்.

ஒரு வேளை இந்த சட்டத்தை உலகிற்குச் சொல்லித் தர வேண்டும் என்பதற்காக அந்த சமயத்தில் அவர்கள் ஒளுவோடு இல்லாமல் இருந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல் அவர்கள் மண் வீட்டின் மண் சுவற்றைத் தொட்டே தயம்மம் செய்தார்கள். எனவே மண்ணைத் தொட்டே தயம்மம் செய்ய வேண்டும் என்பது விதியாக அமைந்துள்ளது.

இந்த வசனத்தின் மூலம் இறைவன் தயம்மம் பற்றிய அத்தனை விதிகளையும் ஒருங்கே சொல்லி விட்டான். தண்ணீர் இல்லாத நிலையில், தண்ணீர் இருந்தும் நிலைமை சரியில்லாத நிலையில் என்று மாறுபட்ட சந்தர்ப்பங்களிலும் தயம்மம் செய்வது எப்படி என்று விளக்கி கூறி விட்டான்.

இது போன்ற இஸ்லாமிய சட்டத்திட்டங்களில் தெளிவாக அறிவைப்பெற்று, நடைமுறைப்படுத்தி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், ஈருலக நன்மைகளையும் நாம் பெற்றுக் கொள்வோமாக.