இறைவனின் திருவடியே திருமுடி


இறைவனின் திருவடியே திருமுடி
x
தினத்தந்தி 7 Aug 2018 6:13 AM GMT (Updated: 7 Aug 2018 6:13 AM GMT)

பக்தர்கள் வேண்டியதை அளிக்கும் கருணைக்கடலான சிவபெருமான், கூற்றுவ நாயனாரின் கனவில் தோன்றி அவருடைய தலையில் தனது திருவடியைச் சூட்டி அருள்புரிந்தார்.

8-8-2018 கூற்றுவநாயனார் குரு பூஜை

களந்தை என்னும் தலத்தில் கூற்றுவ நாயனார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் பகைவர் களுக்கு எமன் போன்றவர் என்பதால், கூற்றுவனார் என்ற பெயர் பெற்றார். இவர் பெரிய வீராதிவீரராகவும், அதே சமயம் அடியார்கள் அன்பில் இணையற்றவராகவும் திகழ்ந்தார். ஈசனின் அருள்பெற்றால், இறையுணர்விலும் வீரத்திலும் சிறந்து விளங்கலாம் என்பதற்கு கூற்றுவ நாயனார் எடுத்துக்காட்டாக விளங்கினர்.

சிறந்த தோள் வலிமையும், வாள் வலிமையும் கொண்டிருந்த கூற்றுவனார், போர்க்களத்தில் பகைவர்களை வெற்றி கொண்டு சிறந்த வீரனாக விளங்கினார். எப்போதும் நாவில் சிவபெருமானின் பஞ்சாட்சரத்தை ஓதிக்கொண்டிருக்கும் அவர், அடியார்களை கண்டால் அன்பொழுக பாதம் பணிந்து வேண்டிய பணிவிடைகளை செய்வார். இறைவனின் திருவருள் அவருக்கு இருந்ததால், அரசர்களும் அவருக்கு அஞ்சி ஒதுங்கினர்.

தேர், யானை, குதிரை, காலாட்படை என நால்வகை படைகளையும் கொண்டு சிறப்புற்றிருந்தார். சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடி, நிறைய பொன்னும், பொருளும் சேர்த்தார். அதைக் கொண்டு சிவனடியார்களுக்கு தொண்டுகள் புரிந்து வந்தார். அரசர்கள் பலருடன் போரிட்டு, அந்த நாட்டை தனக்குரியதாக்கிக் கொண்டவர், மணிமுடி ஒன்று மட்டும் நீங்கலாக அரசருக்கு உரிய மற்ற அனைத்து சின்னங்களையும் கொண்டவராக திகழ்ந்தார்.

இந்த நிலையில் கூற்றுவ நாயனார், தில்லையம்பதி என்று அழைக்கப்படும் சிதம்பரத்தில் நடராஜப் பெருமானை வழிபடும் அந்தணர்களை பணிந்து, தனக்கு முடிசூட்டுமாறு வேண்டினார். ஏனெனில் அந்த காலத்தில் சோழ மன்னர்களுக்கு சூட்டக்கூடிய மணி மகுடம், தில்லைவாழ் அந்தணர்களின் வசம் இருந்தது. உரிய காலத்தில் அந்த மணி மகுடத்தை அவர்கள் மன்னனுக்கு சூட்டி அவனை அரசனாக்குவார்கள். அந்த மணிமகுடத்தை சோழ மன்னர்களுக்கு மட்டுமே அவர்கள் சூட்டுவர் என்பதும் மரபாக இருந்து வந்தது.

அதற்கு அந்த அந்தணர்கள், ‘ஐயா! நாங்கள் சோழர்களது பரம்பரையில் வரும் மன்னர் களுக்கே அன்றி வேறு ஒருவருக்கும் திருமுடி சூட்டமாட்டோம்’ என்று கூறி மறுத்து விட்டனர். இதனால் மிகுந்த மனவேதனை கொண்டார் கூற்றுவ நாயனார். தான் அன்றாடம் தொழும் அம்பலவாணரை நினைத்து உருகினார். மாறாக, தன் தோள் வலிமையையும், வாள் வலிமையையும் அவர்களிடம் காட்டி, தனக்கு மணிமகுடம் சூட்டும்படி கூறவில்லை. இதில் இருந்து அவர் அடியார்களுக்கு அளித்த மதிப்பை நாம் கண்டுணர முடிகிறது.

‘ஐயனே! அருட்கடலே! எனக்கு எப்போதும் அரசர் களுக்கு சூட்டப்படும் மணி முடி இனி தேவையில்லை. இறைவா! இந்த எளியேனுக்கு முடியாக, உமது திருவடியையே சூட்டி அருள் செய்ய வேண்டும்’ என்று கூறியபடி துயில் கொள்ளத் தொடங்கினார்.

பக்தர்கள் வேண்டியதை அளிக்கும் கருணைக்கடலான சிவபெருமான், கூற்றுவ நாயனாரின் கனவில் தோன்றி அவருடைய தலையில் தனது திருவடியைச் சூட்டி அருள்புரிந்தார்.

கண் விழித்து எழுந்த நாயனார் அடைந்த மகிழ்ச்சி எல்லையே இல்லை. பேரானந்தம் கொண்டார். இறைவனது திருவடியையே முடியாகக் கொண்டு உலகம் எல்லாம் ஒரு குடையின் கீழ் அரசாண்டு வந்தார். மேலும் தனக்கு அரசையும், அதை ஆளுவதற்குரிய செல்வத்தையும் வழங்கிய இறைவனுக்கு நன்றிக்கடனாக, பூவுலகில் இறைவன் எழுந்தருளி இருக்கும் திருக்கோவில்கள் அனைத்துக்கும் தனித்தனியே நித்திய வழிபாடுகள் இனிதே நடைபெற பெரும் நிலங்களை அமைத்துக் கொடுத்து அகமகிழ்ந்தார்.

இது போன்ற இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து உலகை கணையுடன் அரசு புரிந்து முடிவில் அரனார் அடிமலர் சேர்ந்து இன்புற்றார். 

Next Story