குழந்தை வரம் அருளும் கருக்காத்தம்மன்


குழந்தை வரம் அருளும் கருக்காத்தம்மன்
x
தினத்தந்தி 7 Aug 2018 6:31 AM GMT (Updated: 7 Aug 2018 6:31 AM GMT)

வேண்டுதல் பலித்து குழந்தை பாக்கியம் அடைந்த பெண்கள், தாயும் சேயுமாக கருக்காத்தம்மன் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி செல்கின்றனர்.

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் எல்லையில் அமைந்துள்ளது கருக்காத்தம்மன் திருக்கோவில். மாமல்லபுரம் நகரத்தின் எல்லையில் இக்கோவில் அமைந்துள்ளதால், இந்த அம்மனை ஊரையும், மக்களையும் காப்பாற்றும் ‘எல்லைப்பிடாரி’ என்றும் அழைக்கிறார்கள்.

எல்லை காக்கும் கோவில்கள், பெரும்பாலும் வடக்கு பார்த்த முகமாக காட்சி அளிக்கும். ஆனால் இந்த ஆலய அம்மன் கிழக்கு பார்த்த முகமாக காட்சி அளிப்பது தனி சிறப்பம்சமாகும். மூலஸ்தானத்தில் உள்ள அம்மன் ஜடா முடியுடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். கருவை காக்கும் அம்மன் என்பதால் இந்த அம்மனை ‘கருக்காத்த அம்மன்’ என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள், தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமி நாட்களில் இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனை வேண்டிக்கொண்டு, சிறிய துணியில் எலுமிச்சைப் பழம் அல்லது சிறிய கல் ஒன்றை வைத்து தொட்டில் போல அமைக்கின்றனர். அங்குள்ள சூலாயுதத்தில் எலுமிச்சைப் பழத்தை சொருகி வைத்து வேண்டுகின்றனர்.

பின்னர் அந்த துணி தொட்டிலை கோவிலின் தல விருட்சமான எட்டி மரத்தில், அம்மனை நினைத்தபடி கட்டிவிடுகின்றனர். வேண்டுதல் பலித்து குழந்தை பாக்கியம் அடைந்த பெண்கள், தாயும் சேயுமாக கருக்காத்தம்மன் கோவிலுக்கு வந்து தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி செல்கின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட குடும்பத்தினர், திருமணம் நல்ல முறையில் நடக்க அம்மனுக்கு பொங்கலிட்டு, பட்டு புடவை சாத்தி சிறப்பு வழிபாடு நடத்துவதும் இங்கு வாடிக்கையான ஒன்று. அதே போல திருமணமான பெண்கள், மஞ்சள் பூசப்பட்ட கயிற்றில் ஒரு சிறிய துண்டு மஞ்சளைக் கட்டி, அம்மனை நினைத்து தலவிருட்ச எட்டி மரத்தில் கட்டி மூன்று முடிச்சு போடுகின்றனர். இதனால் தங்கள் மாங்கல்யம் பலம் பெறும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.

இத்தல அம்மன் 6 மாதம் ஆக்ரோசமான முகத்துடனும், 6 மாதம் சாந்தமான முகத்துடனும் காட்சி தருவது இக்கோவிலின் இன்னொரு சிறப்பம்சமாகும். திருவிழா நாட்களில் பெண்கள் கூட்டம் இங்கே அலைமோதும். குறிப்பாக ஆடி மாதம் பிறந்து விட்டாலே இந்த கருக்காத்தம்மன் திருக்கோவிலில் தினமும் திருவிழாக் கோலம் தான். ஏராளமான பெண்கள் விர தம் இருந்து ஆடி வெள்ளிக்கிழமைகளில் இக்கோவிலில் பொங்கலிட்டு தங்கள் வேண்டுதல் நிறைவேற வேண்டி வழிபடுவர். சில பெண்கள் வேப்பிலை ஆடை உடுத்தி, அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர். ஆடி மாத நாட்களில் அம்மனுக்கு சந்தன காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமகாப்பு, வெண்ணெய் காப்பு அபிஷேகங்கள் நடைபெறும். ஆடி மாதங்களில் ஊஞ்சல் சேவை உற்சவமும், சிறப்பு யாகங்களும் நடைபெறுகிறது.

ஆலய விழாக்களிலேயே புரட்டாசி மாதம் நடைபெறும் 10 நாள் நவராத்திரி விழா சிறப்பு வாய்ந்த திருவிழா ஆகும். விழாவின் 10 நாட்களும், 10 உற்சவதாரர்கள் மூலம் கருக்காத்தம்மன் வீணை ஏந்தும் சரஸ்வதி, அஷ்டலட்சுமி, பத்ரகாளி, மகிஷாசூரனை (அரக்கனை) சம்ஹாரம் செய்தல், சிவனுடன் கூடிய பார்வதி உள்பட பல திருக்கோலங்களில், பூக்களாலும் ஆபரணங்களினாலும் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதுண்டு.

10-ம் நாளான இறுதி விழாவில் கருக்காத்தம்மன் சிங்க வாகனத்தில் மாமல்லபுரத்தில் வாணவேடிக்கையுடன் வீதி உலா வருவார். 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் விநாயகர், வள்ளி- தெய்வானையுடன் கூடிய முருகர், நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னிதி உண்டு. மேலும் கோவிலின் முகப்பு மண்டபத்தில் கவுமாரி, வைஷ்ணவி, வராகி, சாம்பவி உள்ளிட்ட சப்த மாதர்களின் சுதை சிலைகள் வண்ணம் தீட்டப்பட்ட நிலையில் அழகுற காட்சி தருகிறது. கருவறையின் முன்புறம் இரு பக்கமும் துவாரபாலகர், இரு யானை சிலைகள் பக்தர்களை வரவேற்று காட்சி அளிப்பது சிறப்பம்சமாகும்.

இக்கோவில் பல்லவ மன்னர் களின் துறைமுக பட்டினமாகவும், உலக சுற்றுலா மையமாகவும் விளங்கும் மாமல்லபுரத்தில் அமைந்திருப்பது சிறப்புக்குரியது.

சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும், செங்கல்பட்டில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள மாமல்லபுரத்தில் நகரின் எல்லையில் அமைந்துள்ளது. 

Next Story