தவறு செய்தவர்களை மன்னிப்பதே மனித மாண்பு


தவறு செய்தவர்களை மன்னிப்பதே மனித மாண்பு
x
தினத்தந்தி 10 Aug 2018 5:41 AM GMT (Updated: 10 Aug 2018 5:41 AM GMT)

அறிஞர் அலி அஸ்ஸல்லாபி அவர்கள் உண்மை முஸ்லிமுக்கும் கடும் போக்கைக் கடைப் பிடிக்கும் முஸ்லிமுக்குமான வேறுபாட்டை அழகாக இவ்வாறு படம்பிடித்துக் காட்டுகின்றார்.

றிஞர் அலி அஸ்ஸல்லாபி அவர்கள் உண்மை முஸ்லிமுக்கும் கடும் போக்கைக் கடைப் பிடிக்கும் முஸ்லிமுக்குமான வேறுபாட்டை அழகாக இவ்வாறு படம்பிடித்துக் காட்டுகின்றார்:

உண்மை முஸ்லிம்: தமது இறைநம்பிக்கை குறித்து யோசித்தவண்ணம் இருப்பார்.

கடும் போக்கைக் கடைப்பிடிப்பவர்: அடுத்தவரின் இறைநம்பிக்கை குறித்தே எப்போதும் கவலைப்படுவார்.

உண்மை முஸ்லிம்: தானும் அடுத்தவரும் எவ்வாறேனும் சுவனம் சென்றுசேர வேண்டும் என்பதற்காக முயற்சி செய்வார்.

கடும் போக்கைக் கடைபிடிப்பவர்: ‘இவர் நரகவாசி’ என்று தீர்ப்பளித்தவாறு அடுத்தவரை நரகத்திற்கு அனுப்புவதிலேயே குறியாக இருப்பார்.

உண்மை முஸ்லிம்: பிறருடைய தவறுகளை மன்னிப்பதற்கும் சகித்துக்கொள்வதற்கும் காரணங் களைத் தேடுவார்.

கடும் போக்கைக் கடைப்பிடிப்பவர்: ‘வழிகேடர்’ என்று தீர்ப்பு கொடுப்பதற்காகவும், ‘விமர்சனம்’ என்ற பெயரில் பொதுவெளியில் அவர்களைக் கேவலப் படுத்துவதற்காகவும், மானத்தை வாங்குவதற்காகவும் பிறர் குறித்த தவறுகளைத் தேடுவார்.

மார்க்க விவகாரங்களோ, உலக விவகாரங்களோ எதுவாக இருந்தாலும், சகிப்புத்தன்மை என்பதெல்லாம் மலையேறி காலம் ஆகிவிட்டது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது என்பதை சிலபோது நாம் மறந்துபோகின்றோம். தவறு செய்த மனிதரிடம் கடுமையாக நடந்துகொள்வதை மட்டும் மறக்காமல் இருக்கின்றோம்.

கூறுங்கள், இங்கே யார் தான் உத்தமர்? தவறிழைப்பது மனித இயல்பு. அப்படி ஒருவர் தவறு செய்துவிட்டால் அவரிடம் கடுமையாக நடந்துகொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை. எவ்வளவு தூரம் கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவரைக் கேவலப்படுத்தி, எவ்வளவு தூரம் இழிவுபடுத்த முடியுமோ அவ்வளவு தூரம் அவரை இழிவுபடுத்தி, பொதுத்தளத்தில் இருந்தே ஓட ஓட விரட்டி.. மூலையில் முடக்குவது ஒரு வகை வெறித்தனமான மனோபாவமாகவே இருக்கிறது.

நான்.. நீ.. என வேறுபாடு இன்றி அனேகமாக அனைவரிடமும் இந்தக் குணம் குடிகொண்டுள்ளது.

குற்றவாளிகளைப் பகிரங்கப்படுத்தாமல் இருத்தல் சிலபோது முழுமையான சிகிச்சையாக அமையலாம். மோசமான சூழ்நிலைகளால் உந்தப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர் பின்னர் அதிலிருந்து விடுபட முனைவதற்கும், மானசீகமாக பாவமீட்சி (தவ்பா) செய்வதற்கும், தூய்மையான வாழ்வைத் தொடங்க முயல்வதற்கும் அது வாய்ப்பை ஏற் படுத்திக் கொடுக்கலாம்.

ஆகவேதான், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை உடனடியாக பகிரங்கப்படுத்தாமல் மறைத்து வைப்பதை ஷரீஅத் சட்டபூர்வமாக்கி உள்ளது.

ஸயீத் இப்னுல் முஸய்யப் அவர்கள் அறிவிப்பதாவது: ஹஸ்ஸால் என்ற பெயர் கொண்ட ஒரு நபித்தோழரிடம் நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக நான் அறிந்துள்ளேன். வேறொரு நபர் குறித்து விபச்சாரப் புகார் கூறியவராக நபிகளாரிடம் இவர் வந்தார். “எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள்” என்ற திருக்குர்ஆன் வசனம் (24:4) இறங்குவதற்கு முன்பு இது நடைபெற்றது.

அவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ஹஸ்ஸால், நீர் அவரை உமது ஆடையால் மறைத்து வைத்திருந்தால் அதுவல்லவா உமக்குச் சிறந்ததாக இருந்திருக்கும்.”

யஹ்யா இப்னு ஸயீத் கூறுகின்றார்: யஸீத் பின் நுஐம் பின் ஹஸ்ஸால் அல்அஸ்லமி அவர்கள் அமர்ந்து இருந்த சபையில் இந்த ஹதீஸை நான் கூறினேன். அப்போது யஸீத் கூறினார்: “ஹஸ்ஸால் எனது பாட்டனார் தான். இந்த ஹதீஸ் உண்மைதான்” (முஅத்தா மாலிக்)

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிப்பதாவது:

“எவர் தமது முஸ்லிமான சகோதரருடைய தவறை மறைத்துக்கொள் கிறாரோ, அவருடைய தவறை மறுமைநாளில் அல்லாஹ்வும் மறைத்துக்கொள்வான். எவர் தமது சகோதரரின் தவறை வெளிப்படுத்துகிறாரோ, சொந்த வீட்டிலேயே கேவலப்படும் வண்ணம் அவருடைய தவறை அல்லாஹ்வும் வெளிப்படுத்துவான்.” (இப்னுமாஜா)

மனிதர்களுக்கு என்று சில கண்ணியங்கள் உள்ளன. துப்பறிவதன் மூலம் அவற்றைக் கீறிக்கிழித்து வீசுவது கூடாது. அவர்களுடைய ரக சியங்களைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களைப் பின்தொடர்ந்து செல்வது கூடாது. யாருக்கும் தெரியாமல் தனிப்பட்ட முறையில் பாவங் களைச் செய்பவர்களாக அவர்கள் இருந்தாலும் சரியே. ஒளித்து மறைத்து தவறு செய்துகொண்டிருக்கும் காலம்வரை அவற்றை வெளிப் படுத்துவது கூடாது.

உக்பத் பின் ஆமிர் (ரலி) அவர்களுடைய எழுத்தாளராக இருந்த அபுல் ஹைஸம் என்பவர் கூறுவதாவது:

உக்பத் பின் ஆமிர் (ரலி)அவர்களிடம் நான் கூறினேன்: “நம்முடைய சில அண்டை வீட்டார் மது அருந்துகின்றனர். அவர்களைக் கைது செய்வதற்காக நான் காவல் அதிகாரிகளை அழைக்கட்டுமா?”.

உக்பத் பின் ஆமிர் (ரலி) கூறினார்: “வேண்டாம்! அவர்களுக்கு உபதேசம் செய். அவர்களைப் பயமுறுத்து”.

அபுல் ஹைஸம்: “அவர்களை நான் எவ்வளவோ பயமுறுத்தியும் அவர்கள் பயப்படவில்லை. ஆகவே அவர்களைக் கைது செய்வதற்காக காவலர்களை கூப்பிடட்டுமா?”.

உக்பா (ரலி) கூறினார்: “உனக்கு நாசம், அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக நான் கேட்டுள்ளேன்: “ஒரு ரகசியத்தை மறைத்து வைப்பவர் மண்ணறையில் (கப்ர்) உயிருடன் புதைக்கப்பட்ட சிறுமிக்கு உயிர் கொடுத்தவரைப் போன்றாவார்”. (அபூதாவூத், நஸாயி, இப்னு ஹிப்பான், ஹாகிம்)

அனைத்து விவகாரங்களுக்கும் அண்ணல் நபி (ஸல்) அவர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் நாம், இந்த விவகாரத்திலும் பெருமானாரின் வழிகாட்டுதலைத்தானே எடுத்திருக்க வேண்டும். அதுதானே முறை.?

ஆம், தவறிழைத்தவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதையும் வரலாறு அழகாகப் பதிவு செய்து வைத்துள்ளது. இதோ அந்த நிகழ்வு.

மக்காவை வெற்றிகொள்ள நபி (ஸல்) அவர்கள் நாடியபோது, மக்கத்துக் குறைஷிகளுக்குத் தெரியாமல் ரகசியமாக அதற்காகத் தயாரானார்கள். ஆனால் ஹாதிப் பின் அபீ பல்தஅ (ரலி) எனும் நபித்தோழர் அந்தச் செய்தியை ஒரு கடிதம் மூலம் ரகசியமாக மக்காவுக்குத் தெரிவிக்க முற்படுகிறார். ஆயினும் அலி (ரலி) அவர்கள் மூலம் அந்தக் கடிதம் பெறப்படுகிறது. அந்த நபித்தோழரும் பெருமானார் (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்படுகிறார்.

விஷயத்தைக் கேள்விப்பட்டு உமர் (ரலி) அவர்கள் வாளை உருவி, “இறைத் தூதரே! இவர் நயவஞ்சகனாகி விட்டார். இவரைக் கொலைசெய்ய அனுமதி தாருங்கள்” என்று கேட்கின்றார்.

நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா?

“உமரே! இவர் பத்ருப் போரில் கலந்துகொண்டவர். பத்ருப் போரில் கலந்துகொண்டவரின் மகிமை குறித்து உமக்கு என்ன தெரியும்? இவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறினான்: என்ன வேண்டுமென்றாலும் நீங்கள் செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தையும் நான் மன்னித்துவிட்டேன்”.

நடந்த தவறுக்கு ஹாதிப் பின் அபீ பல்தஅ (ரலி) கூறிய விளக்கமும், அவரைப் பெருமானார் (ஸல்) அவர்கள் மன்னித்தமையும் தனி வரலாறு. ஆயினும் செய்த செயல் என்னவோ பெரும் தவறுதான். மிகப் பெரிய துரோகச் செயல்தான். ஆகவேதான் உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்டார். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் அந்த தோழருக்காக எவ்வளவு தூரம் பரிந்து பேசுகின்றார்கள் என்பதைப் பாருங்கள்.

மக்கள் மன்றத்தில் அவரைக் கேவலப்படுத்தவோ, இழிவுபடுத்தவே செய்யவில்லை. தண்டிக்கும் ஆற்றலும் அதிகாரமும் இருந்த பின்னரும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவரை மன்னித்து விட்டுவிட்டார்கள். இதுதான் நபி வழி.

ஆனால், அடுத்தவரைத் தண்டிக்க அதிகாரமில்லாத நாம், தவறு செய்தவர்களுடன் எவ்வாறு நடந்துகொள்கிறோம்? நபி வழியில் நடப்பதாகச் சொல்லும் நமது நடவடிக்கைகள் எவ்வாறு உள்ளன?, சிந்தித்துப்பார்ப்போம்.

நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story