ஆன்மிகம்

பாவ இயல்பும், தூய வாழ்வும் + "||" + Sinful nature and pure life

பாவ இயல்பும், தூய வாழ்வும்

பாவ இயல்பும், தூய வாழ்வும்
உலகில் எந்த ஒரு உயிரும் இன்னொரு உயிருக்கு அஞ்சி வாழ வேண்டிய சூழல் காணப்படுகிறது.
பூச்சிகள் பறவைகளைப் பார்த்து பயப்படும், பறவைகள் பூனைகளைக் கண்டு பயப்படும், மனிதர்கள் நோய் கிருமிகளைக் கண்டு பயப்படுவார்கள்.

இப்படித் தான் மெய்யான வாழ்வுக்கும் ஒரு பகைவன் உண்டு. அவன் தான் சாத்தான்.

யோவான் நற்செய்தியாளர் அதை மிக அழகாக முரண்களின் மூலம் விளக்குவார். ‘கடவுள் ஒளியாக இருக்கிறார், பாவம் இருளாக இருக்கிறது’ என்பது அதில் ஒரு சின்ன உதாரணம்.


கிறிஸ்தவ வாழ்க்கை என்பது பேச்சுடன் முடிந்து போவதல்ல. நாம் விசுவாசிப்பதன் படி வாழ்ந்து காட்டுவதில் தான் அது நிறைவடைகிறது. வாயின் வார்த்தைகளை வாழ்க்கை நிரூபிக்க வேண்டும்.

கிறிஸ்தவ வாழ்க்கை ‘நடை’ என்று விவிலியம் குறிப்பிடுகிறது. இயேசுவை மீட்பராகக் கண்டுணரும் போது இந்த வாழ்க்கை ஆரம்பமாகிறது.

‘நடை என்பது நிற்பதற்கான குறியீடு அல்ல, முன்னேறுவதற்கான அழைப்பு. இறைவனின் சித்தம், நோக்கம், விருப்பம் எல்லாம் அவரது வார்த்தையின் வழியாக நாம் நம்மை தூய்மைப்படுத்திக் கொள்வது தான். அவர் தூயவராய் இருப்பதும், அவரது வார்த்தை தூயதாய் இருப்பதும் தான் அதன் காரணம்.

தூய்மையற்றதை விவிலியம் மறைப்பதில்லை. ‘ஆபிரகாம், விசுவாசிகளின் தந்தை’ என குறிப்பிடும் விவிலியம் தான் ‘ஆபிரகாம் பொய்யன்’ என்றும் குறிப்பிடுகிறது. விடுதலை நாயகன் மோசே, ‘முரட்டாட்டமான மனிதன்’ என்கிறது. யோனா எனும் தீர்க்கதரிசியை, ‘கீழ்ப்படியாதவன்’ என்கிறது. சிம்சோனை, ‘பாவம் செய்தவன்’ என்றும், தாவீதை, ‘கொலையாளி’ என்றும் விவிலியம் மறைக்காமல் பேசுகிறது. மோட்சத்துக்குச் செல்லும் பாதை குறுகியது, அது விரிவான பாதை என விவிலியம் பொய் சொல்வதில்லை.

கடவுள் எப்படித் தூயவரோ, விவிலியம் எப்படி தூயதோ, அதுபோல கடவுளுக்குள் வருபவர்களும் தூயவர்களாக இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். பிறக்கும் போது நம்முடன் தோன்றி வருகின்ற பாவம், பாவ இயல்பு என்கிறோம்.

ஆவியினால் மறுபடியும் பிறக்கும் போது பெற்றுக்கொள்வது புதிய இயல்பு. இந்த இரண்டு இயல்புகளுக்கும் இடையே மிகப்பெரிய போராட்டம் உண்டு. நான் ஆவியினால் புதிதாகப் பிறந்திருக்கிறேன் என்று சொல்பவர்கள் அதைத் தக்க வைத்துக்கொள்ள பாவ இயல்போடு போராட வேண்டியிருக்கிறது.

பாவ இயல்பு நம்மை தோற்கடிக்க முயல்கிறது, அதை தோல்வியடைய வைக்க நமக்கு தூய ஆவியானவரின் துணை தேவைப்படுகிறது. சுய ஒழுக்கமோ, சட்ட திட்டமோ இவற்றைக் கட்டுப்படுத்த முடியாது.

இந்த பழைய இயல்பை மறைக்க விரும்பும் விசுவாசிகள் பொய் சொல்பவர்களாக இருக்கிறார்கள். முதலில் அவர்கள் பிறரிடம் பொய் சொல்கின்றனர். பிறர் தன்னை ஆன்மிகவாதி என நம்பவேண்டும் என்பதற்காக பொய் சொல்கிறார்கள். தன்னை ஒரு ஆன்மிகவாதியாய்க் காட்டிக்கொள்ள ஆசைப்படும் மனம் பொய் சொல்கிறது. தான் இருளிலே நடந்தாலும், தான் ஒளியிலே நடப்பவனாக பிறர் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த பொய் பேசுதல் நடக்கிறது.

பின்னர் தன்னோடு தன்னைப்பற்றி பொய் சொல்ல ஆரம்பிக்கிறான் மனிதன். இது பிறரை ஏமாற்றும் நிலையல்ல, தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் நிலை. பாவத்தில் வாழ்ந்து கொண்டே, கடவுளுக்கும் தனக்கும் இடையே உறவு சீராக இருப்பதாக சமாதானம் சொல்லிக்கொள்கிறான்.

இந்த நிலையிலிருந்து தூய நிலைக்கு மனிதன் மாறவேண்டும். ‘கடவுள் ஒளியாய் இருக்கிறார், அவரிடம் இருள் என்பதே இல்லை’ என்கிறது விவிலியம். இருளில் இருந்து நம்மை அவரது ஒளிக்கு இறைவன் அழைக்கிறார். அது தான் மீட்பின் முதல் நிலை. இப்போது நாம் ஒளியின் பிள்ளைகள் ஆகிறோம்.

தீமை செய்பவர்கள் ஒளியைப் பகைக்கிறார்கள். ஆனால் ஒளி பிரகாசிக்கும் போது நமது உண்மையான சுபாவம் வெளிப்படுகிறது. நம்மிடம் பாவம் இல்லை என சொன்னால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் மாறிவிடுகிறோம். இறைவனுக்கு நமது பாவங்களைப் பற்றி தெரியும். ஆனாலும் இறைவனிடம் நாம் நம்மைப் பற்றி அறிக்கையிட வேண்டும்.

நீ எங்கேயிருக்கிறாய்? என ஆதாமிடம் கேட்டார் இறைவன். உன் பெயர் என்ன? என யாக்கோபிடம் கேட்டார். உன் கணவரை அழைத்து வா, என சமாரியப் பெண்ணிடம் சொன்னார்.

எல்லாமே இறைவனுக்குத் தெரிந்த விஷயங்கள் தான். ஆனாலும் நாம் அதை சொல்லவேண்டும் என இறைவன் விரும்புகிறார். உண்மையை மறைக்காமல் பேசவேண்டும் என ஆசைப்படுகிறார்.

பாவத்தை அறிக்கையிடுவது கடவுளுக்கு நம் பாவத்தைத் தெரியப்படுத்த அல்ல. நமது பாவத்தையும், பாவ இயல்பையும் நாம் உணர, வெளிப்படையாய் இருக்கிறோம் என்பதை இறைவனிடம் நிரூபிக்க.

இறைவனிடம் வரும்போது உண்மை இயல்போடு வருவோம். நமது பாவங்களை அவரிடம் அறிக்கையிட்டு மன்னிப்பைப் பெற்றுக்கொள்வோம். அவரது அன்பில் நிலைத்திருப்போம்.

(தொடரும்)