தியாகப் பெருநாள் சிந்தனை


தியாகப் பெருநாள் சிந்தனை
x
தினத்தந்தி 17 Aug 2018 6:17 AM GMT (Updated: 17 Aug 2018 6:17 AM GMT)

அரபி மாதங்களில் பனிரெண்டாவது மாதம் துல்ஹஜ் ஆகும். இந்த மாதத்தின் பொருள் ‘ஹஜ் செய்யும் மாதம்’ என்பதாகும்.

 இந்த மாதத்தின் ஒன்பதாம் நாள் ‘அரபா தினம்’ ஆகும். இந்த நாளில் நோன்பு இருப்பது சிறப்பு வாய்ந்ததாகும்.

அரபா நாளின் நோன்பு குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அது கடந்து போன ஓராண்டு, மற்றும் எதிர்வரும் ஓராண்டு நிகழும் சிறுபாவங்களுக்கு பரிகாரமாக அமையும்’ எனக்கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி), நூல்: முஸ்லிம்)

இஸ்லாமியர்களின் பெருநாட்கள் இரண்டு. 1) நோன்புப் பெருநாள், 2) ஹஜ் பெருநாள். ரமலான் மாதம் முப்பது நாட்கள் நோன்பிருந்த பிறகு கொண்டாடப்படுவது நோன்புப் பெருநாள் ஆகும். துல்ஹஜ் மாதம் பிறை ஒன்றிலிருந்து பத்து நாட்கள் வரை ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்றிய பிறகு கொண்டாடப்படுவதற்கு ஹஜ் பெருநாள் ஆகும்.

ஹஜ் பெருநாள் ‘ஈதுல் அள்ஹா’ (தியாகத் திருநாள்) என்று அரபியிலும், பக்ரீத் பண்டிகை (ஆட்டை பலியிடுதல்) என்று உருது மொழியிலும் அழைக்கப்படுகிறது.

இறைவனின் கட்டளையை ஏற்று, இப்ராகிம் (அலை) அவர்கள் தமது அன்பு மகனை பலியிடத்துணிந்த ஒப்பற்ற தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் துல்ஹஜ் மாதம் பிறை பத்தாம் நாளன்று தியாகத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹஜ் செய்யும் ஹாஜிகள் தங்களது புனிதப் பயணத்தின் கடமைகளில் இறுதியாக நிறைவேற்றும் காரியம் இறைவனுக்காக கால்நடைகளில் ஏதேனும் ஒன்றை பலியிடுவதாகும். இது நடைபெறும் தினம் துல்ஹஜ் 10-ம் நாளாகும். ஹஜ் பயணம் மேற்கொள்ளாதவர்களில் வசதி வாய்ப்பை பெற்றுக்கொண்டவர்களும் தங்களின் இல்லங்களில் பெருநாள் தினம் அன்று கால்நடைகளில் ஒன்றை இறைவனுக்காக பலியிடுவார்கள்.

தியாகத் திருநாள் அன்று முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சம் சிறப்புத்தொழுகை மற்றும் குர்பானி கொடுத்தல் ஆகும். தொழுகைக்கு பின்புதான் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற கால்நடைகளில் அவரவர் வசதிக்கேற்ப குர்பானி கொடுக்கவேண்டும்.

‘தொழுகைக்கு முன்பே குர்பானிப் பிராணியை அறுப்பவர் தமக்காகவே அதை அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு அதை அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்து விட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்’ என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பாளர்: பராஉபின் ஆஸிப் (ரலி), நூல்: முஸ்லிம்)

‘எனவே உமது இறைவனைத் தொழுது, அவனுக்காக அறுப்பீராக’ என்பது திருக்குர்ஆன் (108:2) வசனமாகும்.

இதன்மூலம், பெருநாள் தொழுகைக்குப் பிறகுதான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பது திருக்குர்ஆன் வசனத்திலிருந்தும், நபிமொழியிலிருந்தும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. பெருநாள் தினத்தன்று குர்பானி கொடுப்பதைவிடச் சிறந்ததொரு காரியம் வேறெதுவும் கிடையாது.

‘துல்ஹஜ் 10-ம் நாளன்று ஆதமின் மகன் செய்யும் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது கால்நடைகளின் ரத்தத்தை ஓட்டுவதாகும். அது மறுமைநாளில் தமது கொம்புகளுடனும், ரோமங்களுடனும், குளம்புகளுடனும் வருகை தரும். அவற்றின் ரத்தம் பூமியில் விழும் முன்பே இறைவனிடம் சிறந்த ஒரு நிலையை அடைந்து விடுகிறது. எனவே அவற்றில் மனதுக்கு பிடித்தமானதை தேர்வு செய்யுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), திர்மிதி)

குர்பானி கொடுக்கப்படும் கால்நடைகளின் மாமிசங்களை ஏழை எளியோருக்கும், அண்டை வீட்டாருக்கும், சொந்த பந்தங்களுக்கும் பங்கீடு செய்து வழங்கிட வேண்டும். குர்பானியின் மாமிசங்களை மதம் கடந்து அனைத்து ஏழை எளியோருக்கும், தேவையுடைய வசதி படைத்தோருக்கும் வழங்கலாம். இது திருக்குர்ஆன் வழிகாட்டும் நெறிமுறை, நபிவழியின் வழிமுறை.

‘அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்’ (திருக்குர்ஆன் 22:28)

‘அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள். (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக்கொடுங்கள்’ (திருக்குர்ஆன் 22:36)

மாமிசங்களை மட்டுமல்ல, அவற்றின் தோல்களையும், அவற்றின் கடிவாளங்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிட வேண்டும். அறுத்து, தோலுரிப்பவர்களுக்கு தோல்களை கூலியாக வழங்கக்கூடாது. அதன் மாமிசங்களையும் கூலியாக வழங்கக்கூடாது. கட்டிட நிதிக்காகவோ, மராமத்து பணிக்காகவோ, இறையில்லப் பணியாளர்களின் ஊதியமாகவோ அவற்றின் தோல்களின் நிதியை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பயன்படுத்தினால் அது குர்பானியாக இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படாது; அது வெறும் மாமிசங்களுக்காக மட்டுமே அறுக்கப்பட்டவைகளாக ஆகிவிடும்.

‘நபி (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜில் நூறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அவற்றில் 63 ஒட்டகங்களை தமது திருக்கரத்தால் அறுத்தார்கள். பிறகு அவற்றின் தோல்களையும், மாமிசங்களையும், கடிவாளங்களையும் ஏழைகளுக்கு பங்கீடு செய்யும்படி என்னை நபியவர்கள் வேண்ட, நானும் அவ்வாறு செய்தேன்’. (அறிவிப்பாளர்: அலி (ரலி), திர்மிதி)

‘யாரிடம் அவர் அறுப்பதற்கான குர்பானிப் பிராணி இருந்து, துல்ஹஜ் பிறை காணப்பட்டு விட்டால், அவர் குர்பானி கொடுக்காதவரை தமது தலைமுடிகளையோ, நகங்களையோ சிறிதும் வெட்ட வேண்டாம்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உம்மு சலமா (ரலி), முஸ்லிம்)

தியாயகத் திருநாளின் மகிழ்ச்சியான கொண்டாட்டம் உலக முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்து ஏழை எளியோருக்கும் பொருந்தும். ஏழைகளின் நிலை அறிந்து, அவர்களின் வலி உணர்ந்து, அவர்களையும் நலமாகவும், வளமாகவும் வாழ வழி வகுப்பதுதான் இஸ்லாமியப் பண்டிகைகளின் முதன்மையான நோக்கம்.

இஸ்லாமியப் பண்டிகை என்பது கொண்டாடுவோருக்கு மட்டும் அல்ல மகிழ்ச்சி, அவர்களை சுற்றியிருப்போருக்கும் மகிழ்ச்சியே. இதுதான் இஸ்லாமியப் பண்டிகைகளின் எழுச்சி.

- மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல் வேலி டவுன். 

Next Story