ஆன்மிகம்

திருமாங்கல்யத்தை விற்று குங்கிலியம் வாங்கிய நாயனார் + "||" + Rosin Purchased Nayanar

திருமாங்கல்யத்தை விற்று குங்கிலியம் வாங்கிய நாயனார்

திருமாங்கல்யத்தை விற்று குங்கிலியம் வாங்கிய நாயனார்
திருக்கடவூர் திருத்தலத்தில் அமிர்தகடேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது.
21-8-2018 கலயனார் குருபூஜை

திருக்கடவூர் பகுதியில் பல அடியவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் தான் கலயனார். திருக்கோவிலுக்குக் குங்கிலியத் தூபமிடும் திருத்தொண்டினை இடைவிடாது செய்து வந்தார். இதனால் இவர் ‘குங்கிலியக் கலயனார்’ என்று பெயர் பெற்றார்.

இறைவனுக்கு குங்கிலியம் இடும் பணிக்காக தன் சொத்துகள் அனைத்தையும் இழந்தார். இதனால் அவரது குடும்பம் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டது. இருப்பினும் மனம் தளராது இறைவனுக்கு குங்கிலியம் இடும் பணியைச் செய்து வந்தார். நிலங்களை விற்றார், பசுக்களையும், கன்றுகளையும் விற்றார். ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்கு உணவுக்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டது. குழந்தைகள் பசியில் துடிப்பதை காண சகிக்காத குங்கிலிய கலயனாரின் மனைவி, தன்னுடைய திருமாங்கல்யத்தை கழற்றிக் கொடுத்து அதை விற்று பணம் வாங்கி வரும்படி கூறி அனுப்பினார்.

கலயனார் திருமாங்கல்யத்தை விற்பதற்காக சென்று கொண்டிருந்தார். அவரது சிந்தனை எல்லாம் மறுநாள் கோவிலுக்குக் குங்கிலியம் வாங்க என்ன செய்வது என்பதாக இருந்தது. அப்போது எதிரில் வணிகன் ஒருவன் குங்கிலியப் பொதியுடன் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி கொண்ட நாயனார், தன் பிள்ளைகளையும், மனைவியையும் மறந்து, திருமாங்கல்யத்தைக் கொடுத்து விட்டு, குங்கிலியப் பொதியை அப்படியே வாங்கிக் கொண்டார். அதோடு கோவிலுக்கு விரைந்தார். இறைவனுக்கு குங்கிலிய தூபம் காட்டியபடி ஆலயத்திலேயே தங்கிவிட்டார்.

கணவர் வருவார் என்று வழிமேல் விழிவைத்து காத்திருந்த குங்கிலியக் கலயனாரின் மனைவி பரிதவித்துப் போனாள். வீட்டின் வாசலிலேயே படுத்து உறங்கிப்போனாள். அதே நேரத்தில் ஆலயத்திலும் நாயனார் துயில் கொண்டிருந்தார். அப்போது கணவன்- மனைவி இருவர் கனவிலும் தோன்றிய இறைவன், இல்லத்தில் பொன், பொருள் குவிந்திருப்பதை உணர்த்தினார்.

திடுக்கிட்டு விழித்த நாயனாரின் மனைவி, தன் வீட்டில் குவிந்து கிடக்கும், பொன், பொருள், நெல்மணிகளைக் கண்டு மகிழ்ந்தாள். குழந்தைகளின் பசி போக்க உணவு சமைக்கத் தொடங்கினாள். அதே வேளையில் குங்கிலியக் கலயனாரும் இறைவனின் கருணையை எண்ணி கண்ணீர் சுரந்தார்.

அப்போது இறைவன் அசரீரியாக, ‘உன்னுடைய இல்லத்திற்குச் சென்று பாலுடன் கலந்த தேன் சுவை உணவை உண்டு, பசி தீர்ந்து மகிழ்வாயாக’ என்றார். குங்கிலியக் கலயனார் மகிழ்ச்சி பொங்க வீட்டுக்கு ஓடோடி வந்தார். மனைவி மக்களை வாரி அணைத்து மகிழ்ந்தார். பின் அனைவரும் ஈசனை வழிபட்டனர்.

குங்கிலியக் கலயனாரது அன்பின் வலிமையையும், பெருமையும் உலகிற்கு உணர்த்த வேண்டும் என்று ஈசன் விரும்பினார். அந்த பெருமையை திருப்பனந்தாள் திருத்தலத்தில் நிறைவேற்ற இறைவன் சித்தம் கொண்டார்.

திருப்பனந்தாள் ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு, தாடகை என்ற பெண் தினமும் மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தாள். அன்று அப்படித்தான், இறை வழிபாடு முடிந்த பிறகு மாலையை அணிவிக்க முற்பட்ட சமயத்தில், அந்தப் பெண்ணின் மேலாடை விலகியது. இரு கையாலும் ஆடையை பிடித்திருந்த தாடகையால், இறைவனுக்கு மாலையை அணிவிக்க முடியவில்லை. அப்போது ஆலயத்தில் இருந்த சிவலிங்கம் சற்றே சாய்ந்து கொடுத்தது. இதையடுத்து அந்தப் பெண் இறைவனுக்கு மாலையை சமர்ப்பித்தாள். ஆனால் சாய்ந்த லிங்கம், மறுபடி நேராகவில்லை.

இந்த நிலையில் திருப்பனந்தாள் ஆலயத்தில் சோழ மன்னன் திருப்பணி செய்தான். சாய்ந்த லிங்கத் திருமேனியை நிமிர்த்த முயற்சித்தான். யானைகளைக் கொண்டு சிவலிங்கத்தின் மீது கயிறு கட்டி இழுக்கச் செய்தான். எதுவும் பலன் கொடுக்கவில்லை. மன்னனின் மனம் வாடியது.

ஊர் முழுவதும் பரவிய இந்தச் செய்தி, குங்கிலியக் கலயனாரின் காதுகளுக்கும் எட்டியது. அவர் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு, பஞ்சாட்சர மந்திரம் சொல்லி, இறைவனின் கருவறை முழுவதும் குங்கிலிய தூபம் காட்டினார். பின்னர் ஒரு கயிற்றை எடுத்து, பாசத்தோடு அதை லிங்கத்திருமேனியில் பிணைத்து, மறு பக்கத்தை தமது கழுத்தில் கட்டிக் கொண்டு பலமாக இழுத்தார். கயிறு இறுகி உயிர்போகும் என்பது பற்றிக்கூட கலயனார் கவலைப்படவில்லை.

என்ன ஆச்சரியம்.. லிங்கத் திருமேனி கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்தது. குங்கிலிய கலயனாரின் பக்தியையும், அன்பின் திறனையும் கண்டு மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர். சோழ மன்னன் கலயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அரசன் ஆலயத்திற்குத் திருப்பணிகளும் திருவிழாக்களும் நடத்தினான். கலயனாருக்கு மானியங்கள் கொடுத்து கவுரவப்படுத்தினான்.

புதுகை பொ.ஜெயச்சந்திரன்