முப்பெரும் தேவியின் வடிவம் ‘மூகாம்பிகை’


முப்பெரும் தேவியின் வடிவம் ‘மூகாம்பிகை’
x
தினத்தந்தி 21 Aug 2018 9:58 AM GMT (Updated: 21 Aug 2018 9:58 AM GMT)

கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது கொல்லூர். கோல மகரிஷி தவம் செய்த இடம் என்பதால் ‘கொல்லூர்' என்று அழைக்கப்படுகிறது.

கவுமாசுரன் என்னும் அசுரன், தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என்று சிவபெருமானிடம் வரம்பெற்றான். தான் பெற்ற வரத்தினால் தேவர்களை அச்சுறுத்தி வந்தான். தேவர்கள், அசுரனின் பார்வையில் படாமல் மறைவாக இருந்து வந்தனர்.

ஒரு நாள் அசுர குருவான சுக்ராச்சாரியார், கவுமாசுரனிடம் ‘உனக்கு பார்வதி தேவியால் மரணம் ஏற்படும்’ என்று எச்சரித்தார்.

இதையடுத்து அந்த அசுரன் ஈசனை நினைத்து மீண்டும் தவம் இருந்தான். அவன் முன் தோன்றிய சிவபெருமான், ‘இறப்பு கிடையாது என்ற வரத்தை அருள முடியாது. பிறந்தவர் இறந்தே ஆக வேண்டும்’ என்று கூறி மறைந்தார்.

சிவபெருமான் கூறிய வார்த்தை தந்த அதிர்ச்சியில் கவுமாசுரன் பேசும் தன்மையை இழந்தான். இதனால் அவன் ‘மூகன்’ என்று பெயர் பெற்றான். மூகன் என்பதற்கு ‘ஊமை’ என்று பொருள். மூகாசுரனை வரம் செய்ததால், பார்வதி தேவி ‘மூகாம்பிகை’ என்று அழைக்கப்பட்டாள்.

கொல்லூர் தலத்தில் அருளும் இந்த அன்னையானவள், மும்மூர்த்திகளின் சக்தியோடு லிங்கத்தில் இணைந்து மூகாம்பிகையாகக் காட்சியளிக்கிறாள். கோல மகரிஷியால் வணங்கப்பட்ட லிங்கத்தின் தெய்வீக சக்தியோடு இணைந்து, துர்கை, லட்சுமி, சரஸ்வதி வடிவமாய் அடியவர்களுக்கு மூகாம்பிகை அருள்புரிகிறாள். இத்தல இறைவியான மூகாம்பிகை, மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் கையில் சங்கு, சக்ரம் ஏந்தி பத்மாஸனத்தில் அமர்ந்து அபய ஹஸ்தத்துடன் காட்சி தருகிறாள்.

ஆலயத்தை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தம் ‘சவுபர்ணிகை நதி’ ஆகும். இது குடசாத்ரி மலையில் இருந்து ஓடிவருகிறது. இது கோவிலின் பின்பக்கம் உள்ளது.

சுபர்ணா என்ற கருடன், சவுபர்ணிகா நதிக்கரையில், தன் தாய் தொடர்ந்து அனுபவித்து வரும் கஷ்டங்களிலிருந்து நிவாரணம் பெற இத்தல இறைவியை நோக்கி தவம் செய்தான். மூகாம்பிகை அவன் எதிரில் தோன்றி அருள்செய்ய, தனக்குப் பின் இந்த நதி ‘சவுபர்ணிகா' என்னும் பெயருடன் விளங்க வேண்டும் என்று கருடன் வரம் கேட்டான். அவ்வாறே தேவி அருள்செய்தாள். கருடன் அமர்ந்த இடம் ‘கருடன் குகை' என அழைக்கப்படுகிறது. நதியின் கீழ்ப்பகுதியில் இரண்டு நதிகள் கலக்கின்றன. மலைகளின் வழியாக நதிகள் பாய்ந்து வருவதால், இந்த நதி புனிதமாகவும், அங்கு வளரும் இயற்கை மூலிகைகளின் மருத்துவகுணம் உடையனவாகவும் உள்ளன.

இத்தல இறைவியை, ஆதிசங்கரர் சவுபர்ணிகை நதிக்கரையில், கோவிவில் நடுநாயகமாக லிங்கத்திற்குப் பின்னால் ஸ்ரீசக்கரத்தோடு ஸ்தாபித்தார். கோவில் சிறந்த கலையழகுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நான்கு தூண்களைக் கொண்ட, 135 அடி உயரமுள்ள லட்சுமி மண்டபத்தில் தெய்வச் சிலைகள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. விநாயகர், சுப்பிரமணியர், நாகர், மகிஷாசுரமர்த்தினி ஆகியோரின் திருமேனிகளும் சிறப்புற அமைந்துள்ளன.

இங்குள்ள உயரமான தீப ஸ்தம்பத்தின் அடிப்பாகம், முதலையின் தலை வடிவில் காணப்படுகிறது. மேல்புறம் 21 அழகான வட்டங்கள் உள்ளன. எல்லா தீபங்களும் ஏற்றப்படும்போது தொலைவில் இருந்து பார்த்தால் மகரஜோதியைப் போல் பிரகாசிக்கிறது. கருவறைக்கு அடுத்ததாக நான்குவித கணபதி சிலைகள் உள்ளன. இவற்றுள் தசபுஜ கணபதி, பாலமூரி கணபதி ஆகியவை வெள்ளைச் சலவைக் கற்களால் மிக அழகுற வடிக்கப்பட்டுள்ளன.

வெளிப்பிரகாரத்தில் முருகன், சரஸ்வதி, பிராண லிங்கேஸ்வரர், பிரார்த்தேஸ்வரர், முக்யப்ராணர் ஆகியோர் காட்சி தருகின்றனர். இந்த ஆலயத்தின் காவல் தெய்வமான வீரபத்திர சுவாமி, உக்கிரமான தோற்றத்தில் காட்சி தருகிறார்.

ஆலயத்தில் தினம் நான்குகால பூஜை நடக்கின்றன. நவராத்திரி ஒன்பது நாளும் சண்டிஹோமம், நவதுர்க்கா அலங்காரம் செய்யப்படுகின்றன. மகாநவமியன்று தேவி புஷ்பரத அலங்காரம், விஜயதசமி அன்று அட்சராப்யாச சேவை, தனுர்மாத பூஜை, சிவராத்திரி, தெப்போற்சவம், பிரம்மோற்சவம் யாவும் சிறப்புற நடைபெறுகின்றன.

அமைவிடம்

உடுப்பி மற்றும் மங்களூரில் இருந்து செல்ல நிறையப் பேருந்துகள் உள்ளன. தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து ெரயில் மூலம் இத்தலத்தை அடையலாம்.

Next Story