கலங்காதிருங்கள் கர்த்தர் வழி நடத்துவார்


கலங்காதிருங்கள் கர்த்தர் வழி நடத்துவார்
x
தினத்தந்தி 23 Aug 2018 9:15 PM GMT (Updated: 23 Aug 2018 10:03 AM GMT)

உங்களுக்கு முன்பாக பலவிதமான சவால்கள் உங்களைக் கலங்கப்பண்ணிக் கொண்டிருக்கலாம்.

குடும்பத்தைக் குறித்த பாரம், பொருளாதாரப் பிரச்சினை மற்றும் சரீர பலவீனங்கள்... இப்படி அநேக காரியங்கள் உங்களைக் கலங்கப்பண்ணிக் கொண்டிருக்கலாம். இந்த செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும் என நம்புகிறேன்.

நெருக்கத்திலும் உங்களை நடத்துவார்

‘நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார்’ (சங்கீதம் 118:5).

இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் பலவிதமான நெருக்கடிக்குள்ளே நீங்கள் போய்க் கொண்டிருப்பதை தேவன் அறிவார். அதே நேரத்தில் நீங்கள் நெருக்கத்தில் இருப்பது தேவசித்தமில்லை என்பதை முதலாவது அறிந்து கொள்ளுங்கள்.

அன்றைக்கு பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களாகிய இஸ்ரவேல் மக்கள் கானானை நோக்கி பயணம் செய்யும் போது பார்வோன் அவர்களை விடாமல் துரத்திக் கொண்டு வந்தான். அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்குப் பின்னாக பார்வோன் வருகிறதைக் கண்டு பயந்தார்கள், என பின்வரும் வசனம் தெளிவாக நமக்குக் கூறுகிறது.

‘பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்: அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்’ (யாத்திராகமம் 14:10)

பார்வோன் சேனை இஸ்ரவேல் ஜனங்களை துரத்திக் கொண்டு வந்தாலும் கர்த்தரை நோக்கி மோசே கூப்பிட்டபோது ‘இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்’ (யாத்திராகமம் 14:13).

‘கர்த்தர் உங்களுக்காக யுத்தம் பண்ணுவார்: நீங்கள் சும்மாயிருப்பீர்கள்’ (யாத்திராகமம் 14:14) என்ற வாக்குத்தத்தங்களைக் கூறி தேவன் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை நெருக்கத்திலும் வழிநடத்தினார்.

சாத்தான் உங்களை நெருக்குகையில் சற்றே மனம் தளராமல் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள், அவர் தமது வாக்குத்தத்தங்களின்படியே உங்களை கிருபையாக வழிநடத்துவார்.

அதிசயமாய் நடத்துவார்

நம் ஆண்டவர் அதிசயங்களைக் காணப்பண்ணுகிற தேவன். நாம் எதிர்பார்க்கிறதைவிட அவர் நடத்துகிற பாதை மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இன்றைக்கு உங்கள் முன்பாக இருக்கிற உபத்திரவங்களை அல்ல இனி நீங்கள் காணப்போகிற அதிசயத்தை நம்பிக்கையோடு விசுவாசியுங்கள். சத்துரு உங்களை மேற்கொள்வது போல இப்போது உங்களுக்குத் தோன்றலாம். மேலும் உங்கள் பிரச்சினைக்கு எவ்விதத்திலும் தீர்வு கிடைக்காது என நீங்கள் எண்ணக்கூடும்.

ஆனால் இப்போது நான் ஒரு சம்பவத்தை வேதத்தில் இருந்து குறிப்பிடுகிறேன். அச்சம்பவம் நடந்தது எத்தனை உண்மையோ அப்படியே உங்களுக்கும் ஆண்டவர் அதிசயங்களைச் செய்வார்.

யாத்திராகமம் 14:19-21 ஆகிய வசனங்களை உங்கள் வேதத்தை திறந்து வைத்து வாசித்துப் பாருங்கள். பார்வோனின் சேனை இஸ்ரவேல் ஜனங்களை துரத்திக்கொண்டு வரும்போது அந்த பார்வோனின் சேனை இஸ்ரவேலின் சேனையை நெருங்க முடியாதபடிக்கு மேக ஸ்தம்பமும் அக்னி ஸ்தம்பமும் ஆச்சரியமாய் தேவபிள்ளைகளை பாதுகாத்தது.

‘பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்னிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை’ (யாத்திராகமம் 13:22)

இவ்விதமாய் கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்காக யுத்தம் பண்ணி சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே தம்முடைய ஜனங்களை அதிசயமாய் நடக்கப்பண்ணினார்.
அன்றைக்கு மட்டுமல்ல, அதிசயமானவர் இன்றைக்கும் உங்களுக்கு நீங்கள் எதிர்பார்த்திராத அதிசயங்களைச் செய்வார். ஆகவே கலங்காமல் கர்த்தரையே சார்ந்து கொள்ளுங்கள். மனம் தளராமல் அவரையே நம்பியிருங்கள்.

சில வேளைகளில் நாம் நடந்து போகிற பாதை நமக்கு வறட்சியாகவும் வனாந்தரமாகவும் இருக்கலாம். இதனால் மனம் உடைந்து சோர்வினாலும், அவிசுவாசத்தினாலும் பயந்து கலங்கி நிற்கலாம். ஆனால் தேவனுடைய பிள்ளையே, கர்த்தர் தம்முடைய ஜனமாகிய நம்மை ஒருநாளும் கைவிடமாட்டார். இன்று நீங்கள் செல்லுகிற பாதை ஒரு வனாந்தர பாதையாக இருக்கலாம்.

‘பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பயணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாட்கள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது: அதனால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது’ (யாத்திராகமம் 15:22,23)

மேற்கண்ட வசனங்களில் மூன்று நாட்கள் தண்ணீரில்லா வனாந்தரத்தில் தேவபிள்ளைகள் நடந்து சென்றதாகவும், மாராவின் தண்ணீர் அவர்களுக்கு கசப்பாக இருந்ததாகவும் வேதம் கூறுகிறது.

இதைக் கண்ட தேவ ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து என்ன குடிப்போம் என்றார்கள். ஆனால் கர்த்தருடைய தாசனாகிய மோசேயோ கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது கர்த்தர் ஒரு மரத்தை மோசேக்கு காண்பித்தார். அதை அவன் தண்ணீரில் போட்ட உடனே அது மதுரமான தண்ணீராய் மாறிற்று.

உங்கள் வனாந்தர பாதையில் ஒருநாளும் கர்த்தரை முறுமுறுக்காதீர்கள். அன்றைக்கு மோசே கர்த்தரை நோக்கினான். கர்த்தர் மரத்தைக் காட்டினார்.

இன்றைக்கு உங்களுக்காகவும், எனக்காகவும் சிலுவை மரம் இருக்கிறது. அந்த கல்வாரியின் சமூகம் கசந்த வாழ்வை நிச்சயம் மதுரமாய் மாற்றும். ஆகவே கலங்காதிருங்கள். கர்த்தர் நித்தமும் உங்களை நடத்துவார்.

‘கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்மாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்: நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்’ (ஏசாயா 58:11).

சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54.

Next Story