மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை + "||" + Madurai Meenakshi Amman Temple
At the Atani Festival Soft car leaf for bit
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை நிகழ்ச்சி நடந்தது.
மதுரை,
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் சிவபெருமானின் திருவிளையாடல்களை சித்தரிக்கும் அலங்காரங்கள் தினமும் இடம் பெறுகின்றன. 9-ம் நாளான நேற்று ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை‘ அலங்காரத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் காட்சி அளித்தனர்.
இதையொட்டி, காலை 6 மணிக்கு வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து சாமியும், அம்மனும் நான்கு சித்திரை வீதி, கீழமாசி வீதி, யானைக்கல் வழியாக பொன்னகரம் பகுதியில் உள்ள புட்டுத்தோப்பு பகுதிக்கு சென்றனர். அங்கு பிட்டுக்கு மண் சுமந்த லீலை புராண வரலாற்றை கோவில் பட்டர்கள் நடித்துக் காட்டினர். அப்போது சுந்தரேசுவரர் சாமி தங்க மண்வெட்டி, தங்க மண்கூடையுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பிட்டுக்கு மண் சுமந்த லீலை புராணம் வருமாறு:- நரியை பரியாக்கிய லீலையின் போது மன்னனால் சுடுமணலில் இடப்பட்ட மாணிக்கவாசகரை காக்கும் பொருட்டு, இறைவன், வைகையாற்றில் வெள்ளப் பெருக்கெடுக்கச் செய்தார். அந்த வெள்ளத்தை தடுக்க வீட்டிற்கொருவர் வர வேண்டும் என்று மன்னன் ஆணையிடுகிறான். அப்போது வந்தி என்னும் பிட்டு விற்கும் கிழவிக்கு யாருமில்லை. இதை அறிந்த இறைவன் கூலியாளாக வடிவெடுத்து வந்தி கிழவியிடம் வந்தார். அவரிடம் இறைவன் நீ எனக்கு சாப்பிட பிட்டு கொடுத்தால், உனக்காக நான் மண் சுமக்கிறேன் என்று கூறுகிறார். அதன்படி
வந்தி கிழவியும் அவருக்கு பிட்டு கொடுக்கிறார். ஆனால் இறைவன் பிட்டு சாப்பிட்டு விட்டு, அவருக்கு உரிய பங்கு கரையை அடைக்காமல் அங்கு ஆடிப்பாடி ஆழந்த துயில் கொண்டார்.
அந்த நேரத்தில் மன்னன் பார்வையிட வந்த போது இறைவன் தூங்கி கொண்டிருப்பதை கண்டார். உடனே மன்னன் தன் கையில் இருந்த பிரம்பால் அவர் முதுகில் அடிக்க, அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் அந்த அடிவிழுந்தது. இதை பார்த்த மன்னன் உண்மையை உணர்ந்தான். அப்போது இறைவன் அசரீரியாக மாணிக்கவாசகர் பெருமையை விளக்கவும், வந்திக்கு சிவலோக பதவி தருவதற்காகவும் தாம் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். மன்னனும் மாணிக்கவாசகரை இறைப்பணிக்கு விடுவித்து, தானும் சிவலோக பதவியை தக்க காலத்தில் அடைந்தார். இவ்வாறு புராணம் கூறுகிறது.
விழாவில் சாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி புட்டுத்தோப்பு பகுதியில் இருந்து கிளம்பி பொன்னகரம், பிராட்வே, ஒர்க்ஷாப் ரோடு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாசி வீதி, அம்மன் சன்னதி வழியாக கோவிலை வந்தடைந்தனர்.