ஒரே நாளில் நவக்கிரக ஆலய வழிபாடு


ஒரே நாளில் நவக்கிரக ஆலய வழிபாடு
x
தினத்தந்தி 14 Sept 2018 6:15 AM IST (Updated: 13 Sept 2018 3:08 PM IST)
t-max-icont-min-icon

ஒருவரின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் நவக்கிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களின் செயல்பாடுகளே காரணமாக இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியாக அமைந்த ஆலயங்கள் கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால் பகுதியைச் சுற்றி அமைந்திருக்கின்றன. அந்த ஒன்பது கிரகங்களின் ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வதற்கு ஏதுவான அட்டவணையை இங்கே கொடுத்திருக்கிறோம். அதன்படி சென்று வழிபட்டு நவக்கிரகங்களின் அருளையும் பெறுங்கள்.

திங்களூர் (சந்திரன்)


ஒன்பது நவக்கிரக ஆலயங்களில் முதலில் வழிபட வேண்டியது திங்களூர் தான். இது நவக்கிரகங்களில் சந்திரனுக்குரியது. கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5 மணிக்கெல்லாம் கும்பகோணத்தில் இருந்து புறப்பட வேண்டும். பின்னர் திங்களூர் கயிலாசநாதர் கோவிலில் சுவாமி தரிசனத்தை, ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு, காலை 7 மணிக்கு அடுத்த தலமான ஆலங்குடிக்கு புறப்படலாம்.

ஆலங்குடி (குரு)

திங்களூரில் இருந்து ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். இது நவக்கிரகங்களில் உயர்ந்த கிரகமான குரு பகவானுக்குரிய தலமாகும். அங்குள்ள ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம். இதற்கிடையில் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவையும் முடித்துக் கொள்ளலாம்.

திருநாகேஸ்வரம் (ராகு)


கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது திருநாகேஸ்வரம். இது நிழல் கிரகங்களில் ஒன்றான ராகுவுக்குரிய தலம். கும்பகோணத்தில் இருந்து 10 அல்லது 15 நிமிட பயணம் தான். நாம் ஆலங்குடியில் இருந்து செல்வதால், 40 நிமிடங்கள் தேவைப்படலாம். தோராயமாக காலை 10 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோவிலை அடைந்து விட முடியும். அங்குள்ள நாகநாதசுவாமி ஆலயம், மிகப் பெரிய கோவில் என்பதால், ஆலயத்தை தரி சனம் செய்து முடிக்க, எப்படியும் 1 மணி நேரம் ஆகும். அதன் பிறகு அங்கிருந்து கும்ப
கோணம் வழியாக அடுத்த தலமான சூரியனார் கோவிலுக்குச் செல்லலாம்.

சூரியனார் கோவில் (சூரியன்)


கும்பகோணம் வழியாக 21 கிலோமீட்டர் சென்றால் சூரியனார் கோவில் உள்ளது. இது சூரிய பகவானுக்குரிய ஆலயம். நீங்கள் 11.30 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரிய நாராயண கோவில், மற்ற நவக்கிரக கோவில்களை போல் அல்லாமல், சூரியனை முதன்மையாக கொண்டு, நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த ஆலயம் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன், 12 மணி அளவில் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

கஞ்சனூர் (சுக்ரன்)

சூரியனார் கோவிலில் இருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. எனவே அந்த தலத்தை 15 நிமிடங்களில் சென்றடைய முடியும். இது சுப கிரகங்களில் ஒன்றான சுக்ரனுக்குரிய தலமாகும். இந்த ஆலயத்தில் பகல் 1.15 மணி அளவில் கோவில் நடை சாத்தப்படும் என்பதால், இங்கு எழுந்தருளி இருக்கும் அக்னீஸ் வரரை ஒரு மணி நேரத்திற்குள்ளாக தரிசித்து முடிக்க வேண்டும். பின்னர் அங்கிருந்து அடுத்த தலமான வைத்தீஸ்வரன் கோவில் செல்லலாம்.

வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்)


நவக்கிரக கோவில்கள் அனைத்துமே, பகல் 1.15 மணிக்கு நடை சாத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்குத் தான் கோவில் நடை திறக்கப்படும். எனவே நாம் 1.30 மணிக்கு கஞ்சனூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறையை 2 மணி அளவில் அடைந்து விடலாம். அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு, கொஞ்சம் ஓய்வு எடுத்து விட்டு, சுமார் 3 மணி அளவில் புறப்பட்டால், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலை 3.30 மணியளவில் அடைந்து விட முடியும். இது செவ்வாய் கிரகத்திற்குரிய தலம். மாலை 4 மணிக்கு கோவில் நடை திறந்ததும், வைத்தீஸ்வரன் ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து திருவெண்காட்டிற்கு 5 மணி அளவில் புறப்பட வேண்டும்.

திருவெண்காடு (புதன்)

வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது திருவெண்காடு திருத்தலம். இது புதன் கிரகத்திற்குரிய தலமாகும். 16 கிலோமீட்டர் இடைவெளி தான் என்பதால், 5.15 மணிக்கெல்லாம் ஆலையத்தை அடைந்து விடலாம். அங்குள்ள வேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானையும், புதன் பகவானையும் தரிசித்து விட்டு, மாலை 6 மணிக்குள் கீழ்பெரும்பள்ளம் புறப்பட வேண்டும்.

கீழ்பெரும்பள்ளம் (கேது)

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கேது பகவானுக்குரிய தலமான கீழ்பெரும்பள்ளம். இந்த ஆலயத்தை 15 நிமிடங்களில், அதாவது மாலை 6.15 மணி அளவில் அடைந்து விட முடியும். கேது தோஷம் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பரிகாரம் செய்து கொள்வார்கள். அந்த ஆலயத்தில் தரிசனத்தை முடித்துக் கொண்டு, இரவு 7 மணிக்குள், கடைசி நவக்கிரக ஆலயமான திருநள்ளாறுக்கு புறப்பட வேண்டியது அவசியம்.

திருநள்ளாறு (சனி)

நவக்கிரக தல சுற்றுலாவில் இறுதியாக நாம் சென்றடையும் திருத்தலம் திருநள்ளாறு. இது சனி பகவானுக்குரிய சிறப்பு மிக்க தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் கீழ் பெரும்பள்ளத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக இரவு 7 மணிக்கு புறப்பட்டால் தான், 8 மணிக்குள் திருநள்ளாறு திருத்தலத்தை அடைய முடியும். பின்னர் அங்குள்ள தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சிவபெருமானையும், சனி பகவானையும் தரிசித்து முடிக்கலாம்.

இப்படி ஒரே நாளில் ஒன்பது கிரகங்களின் ஆலயங்களையும் தரிசனம் செய்து, மன நிறைவையும், புண்ணியத்தையும் சேர்க்கலாம்.

Next Story