ஆன்மிகம்

மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல் + "||" + Mrs. Vinayaka, For uccippillaiyar Giant plate pad

மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்

மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்
திருச்சி மலைக்கோட்டை கோவிலில் மாணிக்க விநாயகர், உச்சிப்பிள்ளையாருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல் சிறப்பு பூஜை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது
மலைக்கோட்டை,

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று காலை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு மாணிக்க விநாயகர் மற்றும் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் சன்ன திகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.


விநாயகருக்கு படைப்பதற்காக 150 கிலோவில் ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நேற்று முன்தினம் காலை தொடங்கியது. 6 கிலோ தேங்காய் துருவல், 50 கிலோ பச்சரிசி மாவு, 60 கிலோ உருண்டை வெல்லம், 4 கிலோ ஏலக்காய், ஜாதிக்காய், எள் மற்றும் 30 கிலோ நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி சுமார் 24 மணிநேரம் ஆவியில் வேக வைத்து 150 கிலோ ராட்சத கொழுக்கட்டை தயாரிக்கும் பணி நடந்து வந்தது.

இந்த கொழுக்கட்டையை நேற்று காலை தாயுமானசுவாமி கோவில் மடப்பள்ளியில் இருந்து தொட்டில் போல கட்டி தலா 75 கிலோவாக பிரித்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கும், மாணிக்க விநாயகர் சன்னதிக்கும் கொண்டு சென்றனர். உச்சிப்பிள்ளையாருக்கு காலை 9.15 மணிக்கும், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கு காலை 9.45 மணிக்கும் நைவேத்தியம் செய்து படைத்தனர். இதில் கோவில் யானை லட்சுமி கலந்து கொண்டு கொழுக்கட்டைக்கு ஆசி வழங்கியது. தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜை முடிந்த பின்னர் கொழுக்கட்டை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவையொட்டி மாணிக்க விநாயகர் சன்னதியில் பல்வேறு வகையான பழங்களாலும், மலர்களாலும் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. வாழைமரம் கட்டியும், வெயிலுக்காக பக்தர்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது.

மலைக்கோட்டை கோவிலில் நேற்று காலை தொடங்கிய விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் முறையே பாலகணபதி, நாகாபரணகணபதி, லட்சுமிகணபதி, தர்பார்கணபதி, பஞ்சமுக கணபதி, மூஷிக கணபதி, ராஜ கணபதி, மயூர கணபதி, குமார கணபதி, வல்லப கணபதி, ரிஷ பாரூடர் கணபதி, சித்தி புத்தி கணபதி, நடன கணபதி ஆகிய அலங்காரம் செய்யப்படுகின்றது. இதில் 13-ம் நாள் அன்று மாணிக்க விநாயகர் சன்னதி எதிரே உள்ள மண்டபத்தில் உற்சவ விநாயகருக்கு 27 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். அன்று இரவு 8 மணிக்கு மாணிக்க விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 14-வது நாளில் ஏக தின லட்சார்ச்சனை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மண்டல இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் கல்யாணி, கோவில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து உள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவில் சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் நேற்று காலை கம்பத்தடி மண்டபத்தில் உள்ள விநாயகர் சன்னதி முன்பாக உலக நன்மைக்காகவும், ஆன்மிகம் சிறக்கவும், மழை பெய்து நாடு செழிக்கவும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் 1 லட்சத்து 8 தோப்புக்கரணம் போடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மலைக்கோட்டை கோவிலில் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கோவிலுக்கு வந்த பக்தர்கள் வைத்து இருந்த பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொண்டு தொண்டு நிறுவனம் சார்பில் துணியால் ஆன பைகள் கொடுக்கப்பட்டன.