கருட சேவைக்கு தயாராகும் திருப்பதி ஏழுமலையான் கோவில்


கருட சேவைக்கு தயாராகும் திருப்பதி ஏழுமலையான் கோவில்
x
தினத்தந்தி 16 Sept 2018 5:49 PM IST (Updated: 16 Sept 2018 5:49 PM IST)
t-max-icont-min-icon

இடைவிடாமல் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து குவிந்து கொண்டே இருப்பதால், திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் விழாக்கோலம் தான்.

ஆனாலும் அங்கு நடைபெறும் விழாக்களில் மிகவும் கொண்டாடப்படுவது பிரம்மோற்சவ விழா.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த வியாழக்கிழமை தொடங்கியது.

இந்த விழாக்களில் கலந்துகொள்ள பக்தர்கள் அணி அணியாக வந்து கொண்டே இருக்கிறார்கள்.

பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்ச்சியான கருட சேவை, நாளை (17-ந் தேதி) நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

கருட சேவை நடைபெற இருப்பதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் தொடர்பான சில ருசிகர தகவல்களை இங்கே பார்க்கலாம்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைப்பை கார்ப்பரேட் கம்பெனி நிர்வாகத்திற்கு சற்றும் குறைவில்லாத நிர்வாக அமைப்பு என்று கூறினால் அது மிகையாகாது.

ஆதிகாலத்தில் யாரால் எப்படி நிர்வகிக்கப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் தெரியவராத திருப்பதி ஏழுமலையான் கோவில் கி.பி.1932 வரை இஸ்லாமிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள், மகந்துக்கள் என்று கூறப்படும் வடநாட்டு சாமியார்கள் ஆகியோரின் நிர்வாகத்தில் இருந்தது.

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

1932-ம் ஆண்டு சென்னை மாகாண அரசு திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் நிர்வாக அமைப்பை ஏற்படுத்தியது.

தற்போது தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும் அவருக்கு கீழ் திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க மற்றொரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், திருப்பதியில் உள்ள கோவில்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள், வெளியூர்கள் ஆகியவற்றில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக உள்ள கோவில்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றை நிர்வாகம் செய்ய என ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று தேவஸ்தானத்தில் 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நேரடியாக பணியில் உள்ளனர்.

தேவஸ்தான நிர்வாகத்திற்கு ஆலோசனை கூற நியமிக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுவில் அறங்காவலர் குழு தலைவர் என்ற நிலையில் ஒருவரும், குழு உறுப்பினர்களாக 19 பேரும் உள்ளனர்.

அறங்காவலர் குழு உறுப்பினர் 19 பேரில் ஆந்திர மாநில அறநிலையத்துறை ஆணையர், அறநிலைய துறையின் வருவாய் பிரிவு முதன்மை செயலாளர் ஆகிய 2 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

எனவே எப்போதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேரின் நேரடி கட்டுப்பாட்டில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

தேவஸ்தானத்தின் பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவை தொடர்பான பணிகளை ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் கவனித்து வருகிறார்.

தேவஸ்தான நிர்வாகத்தில் அரசு நிர்வாகத்தில் இருப்பது போல் பல்வேறு துறைகள் உள்ளன. ஒவ்வொரு துறைக்கும் ஒரு கூடுதல் நிர்வாக அதிகாரி அந்த துறையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். அவருக்கு கீழ் தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையில் உதவி நிர்வாக அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள் ஆகிய அதிகாரிகள் பணியில் உள்ளனர். தேவஸ்தானத்தில் இருக்கும் 16 துறைகளிலும் சேர்த்து 8500-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோர் நிரந்தரமாக பணியில் உள்ளனர்.

இவர்கள் தவிர சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒப்பந்த ஊழியர்களாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

3 கோடி பக்தர்கள் தரிசனம்

ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வருமானத்துடன் கார்ப்பரேட் கம்பெனி நிர்வாகத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் மிகவும் திறம்பட செயல்பட்டு வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.

அவர்களில் ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் இரண்டரை கோடியாகும்.

இது தவிர ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பல்வேறு திருமண மண்டபங்களும் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக உள்ளன. மேலும் திருப்பதியில் ஆதரவற்றோர் சரணாலயம், மாற்றுத்திறனாளிகளுக்கான விடுதியுடன் கூடிய இலவச பள்ளிக்கூடம், ஆரம்ப பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், கலை, அறிவியல் கல்லூரிகள், சங்கீத கல்லூரி ஆகியவற்றையும் தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது.

ஆந்திராவுக்கு வெளியே தமிழ்நாட்டின் வேலூரில் உயர்நிலைப்பள்ளி, டெல்லியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி ஆகியவையும் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக உள்ளன.

இவை தவிர ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களும் உள்ளன.

டன் கணக்கில் தங்க கட்டிகள்

திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரம் கோடி பணம், சுமார் நூறு கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை சுவாமிக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில்களுக்கு பக்தர்கள் காணிக்கையாகவும், நன்கொடையாகவும் வழங்கிய பணத்தில் செலவு போக எஞ்சிய 11 ஆயிரத்து 800 கோடி ரூபாயையும், தங்கத்தில் பயன்படுத்தியது போக எஞ்சிய ஐந்தரை டன் தங்கத்தையும் தேவஸ்தான நிர்வாகம் வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்துள்ளது.

இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தேவஸ்தானத்திற்கு வட்டியாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பணமும், 100 கிலோ தங்கமும் வருமானமாக கிடைத்து வருகிறது.

இது தவிர தேவஸ்தானத்திடம் சுமார் 40 டன் அளவிற்கு தங்க ஆபரணங்கள் இருப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

பழங்காலம் தொட்டு மாமன்னர்கள், மன்னர்கள், நிலச்சுவான்தார்கள், ஜமீன்தார்கள், பக்தர்கள் ஆகியோர் திருப்பதி ஏழுமலையானுக்கு தங்க ஆபரணங்கள், தங்க கட்டிகள் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். காணிக்கையாக கிடைத்த தங்கத்தில் பயன்பாட்டிற்கு போக மீதி இருக்கும் தங்க ஆபரணங்களை தேவஸ்தான நிர்வாகம் திருப்பதியில் தனக்கு சொந்தமாக இருக்கும் கருவூலத்தில் பத்திரப்படுத்தி வைத்துள்ளது.

தேவஸ்தான கருவூலத்தில் பாதுகாப்புகளுக்கு இடையே இருப்பு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளில் பெரும்பாலானவை மிகவும் தொன்மையானவை என்று கூறப்படுகிறது. எனவே தற்போதைய விலை மதிப்பு மார்க்கெட் மதிப்பை விட மிகவும் அதிகமாக இருக்கும்.

எனவே தேவஸ்தானத்திடம் இருப்பில் இருக்கும் தங்க ஆபரணங்களின் விலையை மதிப்பிடுவது மிகவும் கடினமான பணியாகும்.

தங்க நகைகளில் ஏராளமான அளவில் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. எனவே நவரத்தின கற்களின் மதிப்பையும் சேர்த்துப் பார்த்தால் மட்டுமே தேவஸ்தானத்திடம் இருக்கும் ஆபரணங்களின் உண்மையான விலை மதிப்பு தெரியவரும்.

சுயம்பு மூர்த்தி

ஏழுமலையான் கோவில் கருவறையில் தங்க விமானத்தின் கீழ் ஆனந்த நிலையத்தில் மூலவர் ஏழுமலையான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். மற்ற கோவில்களுக்கு மாறாக திருமலை கோவிலில் மூலவர் சுயமாக எழுந்தருளிய சுயம்புமூர்த்தியாக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.

கோவில் கருவறையில் உள்ள சுமார் 18 அங்குல அகலம் கொண்ட கல்லால் செதுக்கப்பட்ட தாமரை மீது பத்தடி உயரம் உள்ளவராக ஏழுமலையான் எழுந்தருளியிருக்கிறார்.

நெற்றியில் திருநாமத்துடன் காணப்படும் ஏழுமலையானின் நான்கு கரங்களில் மேல் வலது கரம் மகாவிஷ்ணு சங்குவான பாஞ்சஜன்யத்தையும், மேல் இடது கரம் மகாவிஷ்ணுவின் ஆயுதமான சுதர்சன சக்கரத்தை தாங்கியும் காணப்படுகிறது.

கீழ் வலது கரம் அபய முத்திரையுடன் காணப்படும் நிலையில், கீழ் இடது கரம் பக்தர்களுக்கு திருவடிகளை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

சுமார் 40 அங்குல அகலம் கொண்டதாகவும் 26 அங்குலம் உயரம் உடையதாகவும் ஏழுமலையான் திருமார்பில் லட்சுமி தேவி எழுந்தருளி இருக்கிறார்.

ஓடி வர தயார் நிலையில்

பக்தர்களை கவர்ந்திழுக்கும் காந்த கண்கள், கூர்மையான மூக்கு, அழகிய உதடுகள் ஆகியவற்றுடன் தங்க பூஜை கீர்த்தி, தங்க பூணூல், நவரத்தின மணிகளுடன் கூடிய பல்வேறு வகையான திருவாபரணங்கள் ஆகியவற்றுடன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருக்கும் மகாவிஷ்ணுவின் கலியுக அவதாரமாக அருள்பாலித்து வருகிறார்.

ஆபத்பாந்தவன் என்று பக்தர்களால் அழைக்கப்படும் அவருடைய முழங்கால்கள் இரண்டும் ஆபத்து காலத்தில் அழைத்தவுடன் ஓடோடி வருபவர் என்பதற்கு சான்றாக சற்றே வளைந்த நிலையில் காணப்படுகின்றன.

திருப்பதி ஏழுமலையான் பற்றி பல அதிசய தகவல்களும் உள்ளன. இவை எந்த அளவுக்கு உறுதியானவை என்பன சொல்வதற்கு இல்லை.

எப்போதும் வெப்பத்தை வெளிப்படுத்தும் ஏழுமலையான் சிலையில் இருந்து தொடர்ந்து வியர்வை போல் தண்ணீர் வெளியேறுகிறது என்று கோவில் அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அட்லாண்டிக் கடலில் பெர்முடா, புளோரிடா, போர்ட்டோரிகா ஆகிய பிரதேசங்களுக்கு இடையே உள்ள முக்கோண வடிவ கடல் பகுதி பெர்முடா முக்கோணம்.

இந்த வழியாக செல்லும் கப்பல்கள், மேலே பறக்கும் விமானங்கள் மாயமாக மறைவதும், விபத்துக்குள்ளாவதும் இன்றளவும் புரியாத புதிர் ஆகும். அதேபோல, பக்தர்களின் மூளை, மனம், எண்ணம் ஆகியவற்றை செயல் இழக்கச் செய்யும் ஒரு பகுதி ஏழுமலையான் கோவிலுக்குள் உள்ளது.

ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அவரிடம் வேண்டிக் கொள்வதற்காக மனதில் ஒரு பெரிய பட்டியலையே வைத்திருப்பது வழக்கம்.

ஆனால் கோவிலுக்குள் சென்ற பின் அந்த பட்டியல் மூளையில் இருந்து மறைந்துவிடும். சாமி கும்பிட்ட பின் அவருடைய திருவுருவம் கூட பக்தர்களின் மனதில் பதிந்து இருக்காது.

ஏழுமலையான் கோவில் தங்க வாசலை தாண்டிச் சென்ற பின் இந்த உணர்வு ஏற்பட்டதை கோவில் கருவறை பகுதியிலிருந்து வெளியே வந்தபின் மட்டுமே பக்தர்கள் உணர முடியும்.

இதற்கு காரணம், சுயம்புவாக தோன்றி திருப்பதி மலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மூலவர் ஏழுமலையானிடம் இருந்து வெளியேறும் அளவிடற்கரிய நேர்மறை சக்தியே ஆகும்.

மேலும் நாள்தோறும் மூலவர் கருவறையில் பல்வேறு விதமான மிகவும் சக்தி வாய்ந்த வேத மந்திர உச்சாடனங்களை கோவில் அர்ச்சகர்கள் செய்கின்றனர். வேத மந்திர உச்சாடனங்கள் மூலம் வெளிப்படும் நேர்மறை சக்திகளும், ஏழுமலையான் இடமிருந்து வெளிப்படும் நேர்மறை சக்தியும் கோவிலுக்குள் நிறைந்து இருக்கும்.

மிகவும் பலமான இந்த நேர்மறை சக்தி அங்கு செல்லும் அர்ச்சகர்கள், கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், பக்தர்கள் ஆகியோரின் மூளை, மனம் ஆகியவற்றில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

மிகவும் சக்தி வாய்ந்த நேர்மறை சக்தி ஏழுமலையான் கருவறையிலிருந்து வெளிப்படுவதன் காரணமாகவே இந்த இடத்தை பாசிட்டிவ் எனர்ஜி பாயிண்ட் என்று அனுபவித்து உணர்ந்த மூத்த அர்ச்சகர்கள் கூறுகின்றனர்.

எனவே இந்த இடத்திற்கு ஜீரோ பாயிண்ட் என்ற பெயரும் உள்ளது என்று திருப்பதி பக்தர்கள் தெரிவிக்கிறார்கள்.

திருப்பதி மலையின் வயது கூறும் சிலா தோரணம்

ஏழுமலையான் கோவில் பின்புறம் உள்ள மலையில் சக்கர தீர்த்தம் அருகே இயற்கையாக பாறைகளால் வரவேற்பு வளைவு அமைந்துள்ளது. இது சிலா தோரணம் என்று அழைக்கப்படுகிறது. மூன்று மீட்டர் உயரம், 8 மீட்டர் நீளமுள்ள சிலா தோரணம் மிகவும் பழமையானது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.



ஆதிசேஷன், சங்கு, சக்கரம், ஏழுமலையான் திருவடிகள் ஆகிய அம்சங்களுடன் இயற்கையாகவே அமைந்திருக்கும் சிலா தோரணத்தை கடந்த 1980-ம் ஆண்டு புவியியலாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த சிலா தோரணம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்று அவர்கள் அப்போது உறுதி செய்தனர். எனவே திருப்பதி மலையின் வயது பல லட்சம் ஆண்டுகளுக்கும் அதிகம் என்று இதன் மூலம் தெரியவந்துள்ளது.

ஏழுமலையான் அவதாரத்திற்காக திருப்பதி மலைக்கு வந்த மகாவிஷ்ணு முதலில் இந்த இடத்தில்தான் தடம் பதித்தார் என்ற கருத்து நிலவுகிறது.

திருப்பதி மலைக்கு செல்லும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் ஏழுமலையான் கோவில் பின்புறமுள்ள மலைமீது சக்கர தீர்த்தம் அருகே அமைந்திருக்கும் சிலா தோரணத்தைக் காணத் தவறுவது கிடையாது.

ஆனந்த நிலையம்

திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு ஏழுமலையான் கோவிலுக்குள் செல்லும் முன்னர் கண்டு தரிசிக்க விரும்புவது கோவில் கருவறை மீது அமைந்திருக்கும் ஆனந்த நிலைய விமானம் ஆகும்.

மூலவர் ஏழுமலையான் எழுந்தருளியிருக்கும் கோவில் கருவறையின் பெயர் ஆனந்த நிலையம். தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் வாழ்க்கையில் அனைத்து ஆனந்தங்களும் கிடைக்க செய்ய ஏழுமலையான் அங்கு எழுந்தருளியிருப்பதாலும், ஏழுமலையானை வழிபடும் பக்தர்களுக்கு அந்த கருவறையிலிருந்து அனைத்து ஆனந்தங்களும் கிடைப்பதாலும் ஏழுமலையான் கருவறைக்கு ஆனந்த நிலையம் என்று பெயர் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இந்த ஆனந்த நிலையம் மீது அமைக்கப்பட்டுள்ள தங்க கோபுரத்தின் பெயர் ஆனந்த நிலை விமானம் ஆகும்.

தொண்டைமான் சக்கரவர்த்தி கட்டியதாக கூறப்படும் ஆனந்த நிலைய விமானத்திற்கு கி.பி. 839-ம் ஆண்டு பல்லவ அரசரான விஜயதந்தி விக்ரம வர்மா முதலில் தங்க கவசம் அமைத்தார்.

பின்னர் 1262-ம் ஆண்டு சதவர்ம சுந்தர பாண்டிய தேவன் என்னும் பாண்டிய மன்னன் தங்க கவசம் பொருத்தினார்.

அதன் பின்னர் 1359-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி சாளுவ மன்னரான சாளுவ மங்கி தேவராஜ் கோவில் கோபுரம் மீது தங்க கலசம் ஒன்றை பொருத்தினார்.

1518-ம் ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண தேவராயர் 30 ஆயிரம் தங்க நாணயங்களை ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தி அந்த தங்க நாணயங்களை பயன்படுத்தி கோவில் கோபுரத்திற்கு தங்க முலாம் பூசினார்.

பின்னர் இடைப்பட்ட காலத்தில் வீர நரசிங்க தேவ யாதவராயர் என்ற அரசர் ஏழுமலையானுக்கு தன்னுடைய எடைக்கு எடையாக தங்க கட்டிகளை துலாபார காணிக்கையாக செலுத்தினார். அந்த தங்கத்தை பயன்படுத்தி அப்போது கோவிலில் தங்க வாசல் அமைக்கப்பட்டது.

பின்னர் 1630-ம் ஆண்டு காஞ்சீபுரத்தை சேர்ந்த தாத்தாச்சாரியலு என்பவர் ஏழுமலையான் கோவில் தங்க விமானத்திற்கு தங்க முலாம் பூசினார்.

1908-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி அப்போது ஏழுமலையான் கோவிலை நிர்வகித்து வந்த வட நாட்டு சாமியாரான பிரயகாதாசின் சீடரான ராமலஷ்மண தாஸ் ஏழுமலையான் கோவில் தங்க கோபுரம் மீது தங்க கலசம் பொருத்தினார்.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏற்பட்டபின் 1958-ம் ஆண்டு ஆனந்த நிலைய விமானம் மீது இருந்த பொன் முலாம் பூசப்பட்ட தகடுகள் அகற்றப்பட்டு 12 டன் எடையுள்ள புதிய செம்பு தகடுகள் பொருத்தப்பட்டன. மேலும் 12 ஆயிரம் துலாம் எடையுள்ள தங்கத்தை பயன்படுத்தி 18 லட்சம் ரூபாய் செலவில் ஏழுமலையான் கோவில் கோபுரத்திற்கு பொன் முலாம் பூசப்பட்டது.

அப்போது அதற்கு முன்னர் கோபுரத்தில் இருந்து அகற்றப்பட்ட தகடுகளிலிருந்த 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை தேவஸ்தானம் பெற்றுக்கொண்டது.

இதே காலத்தில் தான் ஏழுமலையான் கோவில் தங்க கிணறு, கருடாழ்வார் சன்னதி ஆகியவற்றிற்கு தங்க முலாம் பூசப்பட்டது. பக்தர்களின் மனதை கவர்ந்து இழுக்கும் இந்த ஏழுமலையான் கோவில் தங்க விமானம், ஆந்திர மாநிலத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. 

Next Story