கைரேகை அற்புதங்கள் : பெண்களின் வாழ்க்கை


கைரேகை அற்புதங்கள் : பெண்களின் வாழ்க்கை
x
தினத்தந்தி 28 Sep 2018 6:23 AM GMT (Updated: 28 Sep 2018 6:23 AM GMT)

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றோ, உச்சம் பெற்றோ அமைந்திருந்தால், அந்தப் பெண் அழகுள்ள பெண்ணாக இருப்பார்.

அதே நேரத்தில் ஆட்சி பலம், உச்சம் பெற்ற சந்திரனோடு சுக்ரன் பலம் பொருந்திய நிலையில் இணைந்திருந்தால் அந்தப் பெண் தேவதையின் அழகோடு மிளிர்வாள். அதேபோல் கையில் சுக்ர மேடு பலமுடன் அமைந்திருந்தால், அவர் இயற்கையிலேயே அழகுடன் திகழ்வார் என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் சந்திரன் அல்லது சுக்ரன் பலமுடன் அமைந்திருந்தால், அந்த பெண்ணுக்கு வாய்க்கும் கணவன் அழகான தோற்றம் கொண்டவராக இருப்பார். ஒரு பெண்ணின் ஜென்ம லக்னமும், சந்திரா லக்னமும் ஒற்றைப்படை ராசிகளாக அமையுமானால், அந்தப் பெண் ஓர் ஆண் மகனுக்குரிய தோற்றத்தைப் பெற்றிருப்பாள். (ஒற்றைப்படை ராசிகள் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை). ஏனெனில் ஒற்றைப்படை ராசிகளை ஆண் ராசிகள் என்று அழைப்பதுண்டு.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் லக்னத்தில் சந்திரனும், சுக்ரனும் சேர்க்கை பெற்று அமைந்திருந்தால், அந்தப் பெண் கவுரவமாகவும், சகல வசதிகளுடனும் வாழ்வார் என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. ஒரு பெண்ணின் ஜென்ம லக்னமும், சந்திர லக்னமும் ஒற்றை ராசிகளாக அமைந்து, அவர்களை சுப கிரகங்கள் பார்க்கும் நிலை இருந்தால், அந்தப் பெண் செல்வம் படைத்த வீட்டில் பிறந்தவர் என்பதை அறிய முடியும்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5-ம் வீட்டிற்குரியவன் சுக்ரனாக இருந்தால், அந்தப் பெண்ணுக்கு வரப் போகும் கணவருக்கு ராஜயோக பலன்கள் உண்டாகும். 8-ம் வீட்டில் பாப கிரகங்கள் ஒரு போதும் அமையக்கூடாது. அது கெடு பலன்களைக் கொடுத்து விட வாய்ப்புண்டு.

இனி கைரேகைப் படி ஒரு பெண்ணின் இல் வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை அறியலாம். பெண்கள் கையில் ஒரு போதும் சுக்ர மேடு அமுங்கி, தாழ்ந்து அமையக்கூடாது. அது விகார தோற்றத்தை தெரிவிக்கும் அறிகுறி. சுக்ர மேடு கையில் உப்பலாக இளம் சிவப்பு நிறத்தில் அமைந்திருக்க வேண்டும். சுக்ர மேட்டில் கிராஸ் குறி, வெட்டுகள் இருக்கக்கூடாது. சுக்ர மேட்டின் மேல் சிறிது இடைவெளியில் செவ்வாய் ரேகை சென்று இருப்பது நல்லது. அந்தப் பெண்ணுக்கு தீர்க்காயுள் யோகம் அமையும். அவரது மாங்கல்யமும் பலமாக அமையும். 8-ம் வீட்டில் என்பது தன் ஆயுளையும், தன் கணவனது ஆயுளையும் குறிக்கும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

- கடுக்கரை என்.செண்பகராமன், டி.ஏ. 

Next Story