கால சக்கரத்தை இயக்கும் கால பைரவர்


கால சக்கரத்தை இயக்கும் கால பைரவர்
x
தினத்தந்தி 28 Sep 2018 7:12 AM GMT (Updated: 28 Sep 2018 7:12 AM GMT)

சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றான தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில், சிவ கணங்களுக்கு தலைவராக விளங்குபவர்.

ஆணவம் கொண்ட பிரம்ம தேவனின் தலையைக் கொய்தவர். முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்திரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர். மன்மதனின் கர்வம் அடங்கச் செய்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளைக் கொண்ட பைரவமூர்த்தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள்.

பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். பஞ்ச தீபம் என்பது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது. ஒவ்வொரு தீபத்தையும் தனித்தனியாக ஏற்ற வேண்டும். இப்படி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

பைரவர் என்ற பெயருக்கு ‘பயத்தை அளிப்பவர்’ என்று பொருள். அதாவது தன்னை அண்டியவர்களின் குறைகளைக் களைய அவர்களின் எதிரிகளுக்கு பயத்தை அளிப்பவர். ‘பாவத்தை நீக்குபவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை போக்குபவர்’ என்றும் பொருள் உண்டு.

பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்காக சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். சிவ பெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘கால பைரவர்’. காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிகளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவரது மூச்சுக் காற்றில் இருந்து தான் திருவாக்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங்கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற்றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம்.

கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்களை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவ வழிபாட்டில் முன்னேற்றம் காண கால பைரவரின் அருள் மிகவும் அவசியம் ஆகும்.

உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியைத் தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம் மற்றும் புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்றதோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெருவாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.

வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம். 

Next Story