கவலைகளை நீக்கி அருளும் கண்ணம்புழா பகவதி


கவலைகளை நீக்கி அருளும் கண்ணம்புழா பகவதி
x
தினத்தந்தி 2 Oct 2018 7:45 AM GMT (Updated: 2 Oct 2018 7:45 AM GMT)

மனக்கவலைகள் அனைத்தையும் நீக்கி, மனமகிழ்ச்சி தரும் கோவிலாகக் கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி எனுமிடத்தில் அமைந்திருக்கும் கண்ணம்புழா பகவதி கோவில் அமைந்திருக்கிறது.

இக்கோவிலில் வழிபடும் பக்தர்களுக்கு எதிரிகளின் தொல்லைகள் நீங்கி, அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் என்கின்றனர்.

தல வரலாறு

முன்னொரு காலத்தில், ஒருவர் தனக்குத் தேவையான சில மூலிகைச் செடிகளைத் தேடிக் காட்டிற்குள் சென்றார். அங்கே வழியில், ஓரிடத்தில் செடிகள் அடர்ந்து வளர்ந்து புதராக மண்டிக் கிடப்பதைக் கண்டார். அந்தப் புதரை அகற்றுவதற்காக, தனது கையில் வைத்திருந்த அரிவாளை அங்கிருந்த ஒரு பாறையில் தேய்த்துக் கூர் தீட்டத் தொடங்கினார்.

அப்போது, அந்தப் பாறையில் இருந்து ரத்தம் வழியத் தொடங்கியது. அதனைக் கண்டு அச்சமடைந்த அவர், அங்கிருந்து ஊருக்குத் திரும்பி வந்து, தான் கண்ட காட்சியை ஊர்ப் பெரியவர்களிடம் தெரிவித்தார். அவர்களும் அந்த இடத்திற்குச் சென்று பார்த்தனர். அப்பாறையிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

அதனைக் கண்டு அச்சமுற்ற அவர்கள், அருகிலுள்ள ஊரிலிருந்து ஜோதிடர் ஒருவரை அழைத்து வந்து விளக்கம் கேட்டனர். ஜோதிடர் சில குறிப்புகளைக் கொண்டு, அந்த இடத்தில் பகவதியம்மன் தோன்றியிருப்பதைத் தெரிவித்தார். அந்த இடத்தில் இருக்கும் அம்மனுக்குப் பூஜை செய்து வழிபட்டு வந்தால், ரத்தம் வழிவது தானாக நின்றுவிடும் என்றும் தெரிவித்தார்.

ஊர்க்காரர்களும் அந்தப் பாறையைப் பகவதியம்மனாக நினைத்து வழிபடத் தொடங்கினர். அந்தப் பாறையில் இருந்து வழியும் ரத்தமும் நின்றது. அதன் பிறகு, அந்தப்பாறை சிறிது சிறிதாக வளர்ந்து அம்மன் சிலையாக உருமாறியதாக கோவில் வரலாறு சொல்லப்படுகிறது.

கண்ணன்புழா பகவதி

பிற்காலத்தில், இக்கோவிலில் தெக்கேடத்து மனையைச் சேர்ந்த நம்பூதிரிகள் பூஜைகளைச் செய்யத் தொடங்கினர். அவர்களது நிர்வாகத்தில் இருந்தபோது இந்த அம்மன், ‘தெக்கேடத்து முல்லைக்கல் பகவதி’ என்று அழைக்கப்பட்டாள். மலையாள நாட்காட்டியின்படி 1096-ம் ஆண்டில் இந்தக் கோவில் சீரமைக்கப்பட்டு, கோவிலைச் சுற்றிலும் பிரகாரங்கள் அமைக்கப்பட்டது என்கின்றனர்.

இக்கோவிலுக்குள் உயர்வகுப்பினர் மட்டுமின்றி அனைத்து வகுப்பினரும் சென்று வழிபடலாம் என்கிற நுழைவு அனுமதி வழங்கப்பட்ட பிறகு, இக்கோவில் இப்பகுதி மக்களின் வழிபாட்டுக்குரிய முதன்மைக் கோவிலாகவும் மாற்றம் பெற்றுவிட்டது. முல்லைக்கல் பகவதி என்றழைக்கப்பட்டு வந்த இக்கோவில், கண்ணன் கோவிலுக்கு அருகில் அமைந்திருப்பதால் ‘கண்ணன்புழா பகவதி கோவில்’ என்று பெயர் மாற்றம் பெற்று, அதுவே ‘கண்ணம்புழா பகவதி அம்மன்’ என்றாகிப்போனது.

ஆலய அமைப்பு

சாலக்குடி ஆற்றின் வடகரையில், தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கில் அமைந்திருக்கும் இக்கோவில் கருவறையில், பகவதி அம்மன் நான்கு கரங்களுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள். ஆலய வளாகத்தில், சிவபெருமான், ஐயப்பன், விஷ்ணு, பத்திரகாளி, துர்க்கா மற்றும் நாகராஜா, நாகதேவதை ஆகியோருக்கும் தனித்தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மலையாள நாட்காட்டியின்படி, விருச்சிகம் (கார்த்திகை) மாதம் 21-ம் நாள் முதல் சபரிமலை விரதக் காலத்தில், வரநாட்டுக் குறுப்பின் களம் எழுத்து பாட்டு சடங்கு நடத்தப்பெறுகிறது. இந்நாட்களில் தினசரி நிறமாலையும் உண்டு.

கன்னி (புரட்டாசி) மற்றும் துலாம் (ஐப்பசி) மாதங்களில் வரும் நவராத்திரி நாட்களில் நிறமாலை மற்றும் குருதி எனப்படும் வண்ணக்கலவை ஊற்றும் சடங்கும் நடைபெறுகிறது. மகரம் (தை) மாதம் வரும் செவ்வாய்க்கிழமைகளிலும், கோவில் நிறுவப்பட்ட நாளான மகரம் (தை) மாத ஹஸ்தம் நட்சத்திர நாளிலும் அம்மனுக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்நாளில் தீபக்காட்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பெறுகின்றன.

கும்பம் (மாசி) மாதம், இரவு நேரம் அதிகமாக வரும் அஸ்வதி நட்சத்திர நாளில் இக்கோவிலின் சிறப்புத் திருவிழா நடக்கிறது. இந்நாளில் ஐந்து அல்லது ஏழு யானைகளுடன் அம்மன் தெக்கேடத்து மனையை நோக்கி ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் கோவிலுக்குக் கொண்டு வரப்படுகிறார்.

இக்கோவில் இறைவியான பகவதியை வழிபடுபவர்களுக்கு, அவர்கள் மனதிலுள்ள அனைத்துக் கவலைகளும் நீங்கி, மனத்துணிவுடன் மகிழ்ச்சியும் சேர்ந்து கிடைக்கிறது. இங்கு வழிபடும் பக்தர்கள், எதிரிகளின் தொல்லைகள் அனைத்தும் நீங்கி, அவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியும் என்கின்றனர். இக்கோவிலில் திருமணத்தடைகள் நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும் பக்தர்கள் வேண்டிச் செல்கின்றனர்.

இந்த ஆலயம் காலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

அமைவிடம்

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி நகரிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்திருக்கிறது. திருச்சூர் நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சாலக்குடி நகருக்குச் செல்ல, திருச்சூர் பேருந்து நிலையத்திலிருந்து அதிக பேருந்து வசதிகள் இருக்கின்றன.

பாறைப்புறத்து பகவதி

கண்ணம்புழா கோவிலின் வடக்குப் பகுதியில், தெக்கேடத்து மனையின் வளாகத்தில், கண்ணம்புழா பகவதி கோவிலின் துணைத்தேவதை எனப் போற்றப்படும் ‘பாறைப்புறத்து பகவதி அம்மன் கோவில்’ ஒன்று உள்ளது. இக்கோவில் இங்கு அமைக்கப்பட்டது ஏன்? என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.



முந்தைய காலத்தில் ஒரு நாள், தெக்கேடத்து மனையைச் சேர்ந்த அர்ச்சகர் ஒருவர் கொட்டியூர் கோவிலில் நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு, வீடு திரும்பச் சிறிது காலதாமதமாகி விட்டது. அடர்த்தியான காட்டுப்பகுதி வழியாக, இரவு நேரத்தில் திரும்பி வந்து கொண்டிருந்த அவர், அச்சத்தில் நடுங்கியதுடன், வழி தெரியாமலும் தடுமாறினார்.

உடனே அவர், கண்ணம்புழா பகவதியை மனதில் நினைத்து வணங்கியபடி சென்றார். அப்போது, சிறிது தொலைவில் அவருக்கு முன்பாக ஒரு பெண் கையில் விளக்கு ஏந்திச் சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அர்ச்சகரும், அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்து நடந்து சென்றார்.

எந்த ஆபத்தும் இல்லாமல் காட்டில் இருந்து பாதுகாப்பாக வீட்டிற்குச் சென்ற அவர், தனக்கு வழிகாட்டியாய் வந்த பெண், கண்ணம்புழா பகவதி என்பதை அறிந்து, தனக்கு வழிகாட்டிய உருவத்தை மனதில் கொண்டு தேவி உருவச்சிலை ஒன்றைச் செய்து, தனது வீட்டு வளாகத்தில் இருந்த பாறையின் மீது நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். பிற்காலத்தில் அந்த அம்மனே ‘பாறைப்புறத்து பகவதி அம்மன்’ என்று அழைக்கப்பட்டார்.

இந்தக் கோவிலில், மலையாள நாட்காட்டியின்படி, ஒவ்வொரு மாதமும் முதல் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைதிறக்கப்பட்டு பூஜை செய்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

Next Story