தொழுகையைப் பாதிக்கும் பாவம்


தொழுகையைப் பாதிக்கும் பாவம்
x
தினத்தந்தி 2 Oct 2018 1:23 PM IST (Updated: 2 Oct 2018 1:23 PM IST)
t-max-icont-min-icon

“நம்பிக்கையாளர்களே, நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும் சமயத்தில் தொழுகைக்கு செல்லாதீர்கள்.” (திருக்குர்ஆன் 4:43)

பாவங்களில் எல்லாம் பெரும் பாவம் மது அருந்துதல் ஆகும். அதனால்தான் இஸ்லாத்தில் மது மட்டுமல்ல, போதை தரும் எந்த பொருளையும் அருந்துவது, உட்கொள்வது, வியாபாரம் செய்வது, பிறரை உட்கொள்ளத் தூண்டுவது போன்ற அத்தனை செயல்பாடுகளுமே ‘ஹராம்’ (முற்றிலும் விலக்கப்பட்ட ஒன்று) என்று கட்டளையிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, பாவங்களில் முதன்மையானது, மற்ற பாவங்களின் ஆணிவேராக இருப்பது மது குடிக்கும் பழக்கம். மதுவின் ஆதிக்கத்தில் கட்டுப்பட்டு இருக்கும் மனிதன், கொலை- கொள்ளை-விபச்சாரம் போன்ற குற்றங்களையும் செய்யத்தயங்குவதில்லை.

சாதாரண நிலையில் இயங்கி கொண்டிருக்கும் மனிதனின் சிந்தனையை சீரழித்து, மூளையை கலங்கச்செய்து, நிலை தடுமாறும் நிலைக்குத் தள்ளிவிடும் ஆபத்து நிறைந்தது, மது போதை.

மதுவின் போைதயால் சிறிது நேரம் மதிமயங்கி இருக்கும்போது, தன்னுடைய கவலை, துக்கம், தொல்லைகளின் தீவிரம் குறைகிறது என்று மனிதன் தப்புக் கணக்கு போடுகின்றான். சிறிது சிந்தித்துப் பார்த்தால் எந்த அளவிற்கு மனிதன் தன்னையே ஏமாற்றிக் கொள்கிறான் என்பது புரியும். இதனால் அவனது உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.

இஸ்லாம் உலகில் தோன்றிய காலகட்டத்தில் அரேபியர்கள் வீண் விளையாட்டுகளிலும், கேளிக்கைகளிலும், கூத்துகளிலும் தங்கள் நேரங்களை விரயம் செய்து கொண்டிருந்தார்கள்.

அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள், ஏக இறைக்கொள்கையை எடுத்தியம்பும் போது, நற்குணங்கள் பற்றிய பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தினார்கள். நற்குணங்கள், நற் செயல்கள் மூலம் இறைவனின் அருளைப்பெற முடியும் என்று மக்களிடம் விளக்கினார்கள்.

இதுதொடர்பாக இறைவசனம் ஒன்றையும் அல்லாஹ் எடுத்துக்கூறினான். மதுவைப் பற்றிய வசனங்களை அருளும்போது மக்கள் மனதில் அதன் தீமைகள் ஆழப்பதிய வேண்டும் என்பதற்காக மிக எச்சரிக்கையாக வசனங்களைத் தெளிவுபடுத்துகின்றான்.

“(நபியே!) மதுவைப் பற்றியும், சூதாட்டத்தைப் பற்றியும் உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: “அவ்விரண்டிலும் பெரும் பாவங்களும் இருக்கின்றன; மனிதர்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. ஆனால், அவைகளில் உள்ள பாவம், அவைகளிலுள்ள பயனைவிட மிகப் பெரிது”. (திருக்குர்ஆன் 2:219)

மதுவில் பாவங்கள் தான் அதிகமாக உள்ளன என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, அந்த செய்தியை உள்வாங்கியவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் திருந்த ஆரம்பிப்பார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் இந்த வசனம் மூலம் வெளிப்படுகிறது.

இந்த வசனம் இறங்கிய பிறகும் கூட சிலர் மதுவை விடுவதற்கு தயக்கம் காட்டினார்கள். காரணம் அப்போது அது முற்றிலும் தடை செய்யப்படவில்லை.

அப்துல் ரஹ்மான் ஆவ்ப் (ரலி) என்ற பெரும் சகாபி ஒருநாள் தன் நண்பர்கள் அனைவருக்கும் தன் வீட்டில் விருந்து வைத்தார். அதில் மது பானங்களும் பரிமாறப்பட்டன. இடையில் தொழுகையின் நேரம் வந்ததும், எல்லோரும் ஜமாத்தாக (கூட்டுத் தொழுகை) தொழ ஆரம்பித்தார்கள். தொழ வைத்த இமாமும்கூட மது அருந்தி இருந்தார். தொழுகையில் அல் காபிரூன் என்ற சூராவை ஓதிவரும் போது “நீங்கள் வணங்குபவைகளை நாங்கள் வணங்க மாட்டோம் என்ற பொருளில் ஓதுவதற்குப் பதிலாக நீங்கள் வணங்குபவைகளை நாங்களும் வணங்குவோம்” என்று ஓதிவிட்டார். மதுவின் ஆதிக்கத்தால் திருக்குர்ஆன் வசனத்தின் பொருளையே மாற்றிச்சொல்லும் அளவிற்கு சிந்தனையில் தடுமாறிவிட்டார்.

அதனைத் தடுக்கும் விதமாக கீழ்க்கண்ட திருக்குர்ஆன் வசனம் ‘வஹி’யாய் இறங்கியது. “நம்பிக்கையாளர்களே, நீங்கள் கூறுவது இன்னதென்று நீங்கள் அறிந்து கொள்ள முடியாதவாறு நீங்கள் போதையில் இருக்கும் சமயத்தில் தொழுகைக்கு செல்லாதீர்கள்.” (திருக்குர்ஆன் 4:43)

இந்த இறைவசனம் இறங்கியதுமே அத்தனை சகாபாக்களும் மது அருந்தி விட்டு தொழ வருவதை தவிர்த்தார்கள். ஒருநாளின் பல மணித்துளிகள் மது போதையிலிருந்து விடுபட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றம் நிகழ்ந்தது. மதுவிற்கும் அவர்களுக்கும் இருந்த இடைவெளியும் நாளடைவில் அதிகமாகியது.

இன்னுமொரு முறை அருமை சகாபா உவைஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் இதுபோன்று தம் நண்பர்களுக்கு விருந்து வைத்தார். அந்த விருந்திலும் மது பரிமாறப்பட்டது. அரேபியர்கள் கவி புனைவதில், கவி பாடுவதில் திறம்மிக்கவர்கள். விருந்து வைபவத்தைத் தொடர்ந்து கவி அரங்கம் அரங்கேறியது.

கவி பாடிக்கொண்டிருந்த அபி இப்னு வக்காஸ் (ரலி) அவர்கள் மதினத்து அன்சாரிகளை விட மக்கத்து குரைஷியர்கள் மிக உயர்ந்தவர்கள் என்ற பொருள் படும்படி கவிபாடினார். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத மதினத்து அன்சாரி ஒருவர் விருந்தில் பரிமாறப்பட்ட ஒட்டக எலும்பைத் தூக்கி அபி இப்னு வக்காஸ் (ரலி) அவர்களின் தலையில் பலமாகத் தாக்கினார். அங்கு ஒரு மிகப் பெரிய கலவரம் ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவானது. அப்போது இந்த இறைவனின் வசனம் இறங்கியது:

‘நம்பிக்கையாளர்களே, நிச்சயமாக மதுவும், சூதாட்டமும், சிலை வணக்கமும், அம்பெறிந்து குறிகேட்பதும் சைத்தானுடைய அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே இவைகளிலிருந்து நீங்கள் விலகி கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்’. (திருக்குர்ஆன் 5:90)

“மதுவாலும், சூதாட்டத்தாலும் உங்களிடையே பகைமையும், பொறாமையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடவே நிச்சயமாக சைத்தான் விரும்புகிறான். (ஆகவே) அவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 5:91)

இந்த வசனங்களின் மூலம் மது ‘ஹராம்’ என்று முற்றிலுமாக விலக்கப்பட்டது.

இந்த செய்தியைக் கேட்டதும் அத்தனை சகாபாக்களும் ஏற்கனவே தங்களைப் படிப்படியாய் பக்குவப்படுத்தி கொண்டிருந்தவர்கள் உடனே அதனை கைவிட்டார்கள். செய்தி கேட்ட போது மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் கூட கைகளை வாயில் விட்டு வாந்தி எடுத்து மதுவை வெளியேற்றினார்கள். தங்கள் வீடுகளில் ஆண்டாண்டு காலமாய் சேமித்து வைத்திருந்த மது புட்டிகளை உடைத்து எறிந்தனர். மதீனத்து வீதியில் மது ஆறு கரைபுரண்டு ஓடியது. அனைவருமே அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்தனர்.

அன்றுமுதல் இஸ்லாத்தில் போதையற்ற, தூய சிந்தனை ஒளிர்ந்தது. உடலையும், உள்ளத்தையும், ஆன்மாவையும் சீரழிக்கும் மது அன்றோடு அரபு பாலையில் குழி தோண்டி புதைக்கப்பட்டது.

மதுவின் தீமையை அனைவருக்கும் உணர்த்துவோம், போதையற்ற புது உலகை உருவாக்குவோம்.

Next Story