ஆன்மிகம்

இறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார்? + "||" + Who is the most beloved of God?

இறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார்?

இறைவனுக்கு மிகவும் பிரியமானவர் யார்?
‘மக்களில் இறைவனுக்கு மிகவும் பிரியமானவர், அவர்களில் மக்களுக்கு அதிகம் பயன்தருபவரே ஆவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: தப்ரானீ)
‘ஒரு இறைவிசுவாசி மக்களுடன் நெருங்கி இனிமையாக பழகக்கூடியவராகவும், மக்களும் அவருடன் நெருங்கி பழகுபவர்களாகவும் இருக்க வேண்டும். எவரிடம் இவ்விரு அம்சங்கள் இல்லையோ, அவரிடம் எந்த நன்மையும் கிடையாது. மேலும், மக்களில் சிறந்தவர் மக்களுக்கு மிகவும் பயனளிப்பவரே’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: தப்ரானீ)

இஸ்லாம் என்பது பன்முகத்தன்மை வாய்ந்த மார்க்கம். அதில் ஆன்மிகச் சிந்தனையும் உண்டு, அரசியல் பார்வையும் உண்டு. தர்ம சிந்தனையும் உண்டு, பொருளியல் கோட்பாடும் உண்டு. இறை வணக்க வழிபாடுகளும் உண்டு, மக்கள் இணக்க செயல்பாடுகளும் உண்டு. இல்லறம் சார்ந்த நல்லறமும் உண்டு. இதன் வரிசையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் செயல்பட வேண்டிய செயல்திட்டங்களும் அவற்றை விவரமான முறையில் விளக்கும் போதனைகளும் உண்டு.

ஒரு நாளைக்கு ஐந்து வேளைத் தொழுகை, ஆண்டுக்கு ஒருமுறை ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது, தான தருமங்கள் செய்வது, ஆயுளில் ஒரு தடவை ஹஜ் செய்வது, ஆகியவற்றுடன் மட்டும் ஒரு முஸ்லிமுடைய நற்செயல் முடிந்து விடக்கூடியவை அல்ல.

அதையும் தாண்டி மக்களுக்கு நன்மை செய்வதிலும், அவர்களுக்கு பயன்தரும் வகையில் நடப்பதிலும் தான் ஒரு முஸ்லிம் பரிபூரணம் அடைகின்றான்.

மக்களுக்கு பயனளிப்பதின் வாயிலாக இஸ்லாம் பரிபூரணம் பெறுகிறது. இதுகுறித்து இறைவன் பேசுவதை பார்ப்போம்:

‘நம்பிக்கை கொண்டோரே! குனியுங்கள், சிரசை தாழ்த்துங்கள், மேலும் உங்கள் இறைவனை வணங்குங்கள், நன்மையைச் செய்யுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்’. (திருக்குர்ஆன் 22:77)

இந்த வசனத்தில் தொழுகை, வணக்கம், நன்மை புரிவது ஆகிய மூன்று அம்சங்கள் இடம் பெறுகிறது. இங்கே நன்மை புரிவது என்பது மக்களுடன் சம்பந்தப்பட்டது. மற்ற இரண்டும் இறைவனுடன் சம்பந்தப்பட்டது ஆகும்.

நன்மை புரிவது என்றால், ‘உறவுகளுடன் சேர்ந்து வாழ்வது மற்றும் நற்குணங்களுடன் வாழ்வது ஆகும்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கம் கூறுகிறார்கள். இதனால் ஏற்படும் பயன் என்பது வெற்றி ஆகும். இந்த வெற்றி என்பது சாதாரணமானது அல்ல, சொர்க்கமே கிடைக்கும் என்பதுதான் உண்மையான வெற்றி எனவும் அவர் விளக்கம் தருகிறார்.

ஒரு முஸ்லிம் தமது நற்குணங்களின் வாயிலாகவும், தமது நற்சேவையின் வழியாகவும் மக்களுக்கு பயன்தரும் வகையில் நல்லதை செய்யும் போது அவர் சிறந்த மனிதராகவும், வெற்றி வாகை சூடியவராகவும் போற்றப்படுகிறார்.

‘இறைவனுக்கு சில அடியார்கள் உண்டு. அவர்கள் மக்களுக்கு பயன்கள் அளிப்பதற்காக அவர்களுக்கு இறைவன் தமது அருட்கொடைகளை பிரத்யேகமாக வழங்குகிறான். அவர்கள் மக்களுக்கு பயன்தரும் காலமெல்லாம் இறைவன் அவர்களுக்கு தமது அருட்கொடைகளை நீட்டித்து கொடுக்கிறான். அவர்கள் பயன்தர மறுத்தால், அவர்களிடமிருந்து இறைவன் தமது அருட்கொடைகளை நிறுத்திவிட்டு மற்றவர்களுக்கு அவைகளை மாற்றிக் கொடுக்கிறான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) நூல்: தப்ரானீ).

‘மக்களில் சிலர் நன்மையின் கதவுகளை திறந்த வண்ணமும், தீமையின் கதவுகளை அடைத்த வண்ணமும் உள்ளனர். மேலும் சிலர் தீமையின் கதவுகளை திறந்தும், நன்மையின் கதவுகளை அடைத்து இப்படியும் உள்ளனர். யாருடைய கரத்தின் வழியே இறைவன் நன்மையின் கதவுகளை திறந்து வைத்துள்ளானோ, அவருக்கு சுப சோபனம் உண்டாகட்டும். மேலும், யாருடைய கரத்தின் வழியே இறைவன் தீங்கின் கதவுகளை திறந்து வைத்துள்ளானோ அவனுக்கு நாசம் ஏற்படட்டும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: இப்னுமாஜா)

‘எந்த ஒரு தலைவன் தேவையுடையவருக்கும், நலிந்தவருக்கும், வறுமையில் வாடுபவருக்கும் தமது கதவை அடைத்துக் கொள்கிறானோ, அவன் தேவையாகும் பட்சத்தில், அவன் வறுமையில் வாடும் பட்சத்தில், அவன் நலிந்து போகும் பட்சத்தில் வானத்தின் கதவுகளை இறைவன் அடைத்து விடுகின்றான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : முஆவியா (ரலி) நூல்: திர்மிதி)

பலவிதமான மக்கள் வாழும் உலகில் பலவிதமான தேவைகளும் ஏற்படுகிறது. பிறரின் தேவை அறிந்து அவருக்கு நம்மால் இயன்றளவு சேவையாற்றி பயனளிக்க வேண்டும்.

ஒருவருக்கு உதவி தேவைப்படும். இன்னொருவருக்கு பரிந்துரை தேவைப்படும். வேறு சிலருக்கு பொருள் தேவைப்படும். இவ்வாறு மனிதர்கள் மாறுபட மாறுபட தேவைகளும், சேவைகளும் மாறுபட்டுக் கொண்டேயிருக்கும். நம்மால் முடிந்தால் யாருக்கும் எந்தவிதத்திலும் பயன்அளிக்க முடியும்.

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறும் போது, ‘காலையில் எனது வாசலில் தேவையுடையவர் எவரும் வராதபட்சத்தில் அப்போது நான் அறிந்து கொள்வேன், ‘இது எனக்கு ஏற்பட்ட சோதனைகளில் ஒன்று. இவற்றிலிருந்து விடுபட நான் இறைவனை வேண்டிக்கொள்வேன்’ என்கிறார்.

தேவையுடையவர் நமது வீட்டுக்கு வருவது நமக்கு சோதனையாகத் தெரிகிறது. ஆனால், வராமல் இருப்பது அந்த பெரியவருக்கு சோதனையாகத் தெரிந்தது. இவர்தான் மக்கள் பயனில் முழு அக்கறை கொண்டவர்.

அதாஉ பின் அபி ரபாஹ் (ரஹ்) கூறும்போது, ‘நீங்கள் உங்களின் சகோதரனை மூன்று தினங்களுக்கு மேலே கண்டு கொள்ளாவிடின், ஒன்று அவர்கள் நோயாளிகளாக இருப்பார்கள். எனவே, அவர்களிடம் சென்று நலம் விசாரியுங்கள். அல்லது ஏதேனும் செயல்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பார்கள். எனவே, அவர்களுக்கு உதவிடுங்கள். அல்லது அவர்கள் மறந்து இருப்பார்கள். அவர்களுக்கு நினைவூட்டுங்கள்’ என்று குறிப்பிடுகிறார்.

ஒருவர், ஹஸன்பின் ஸஹ்ல் (ரஹ்) அவர்களிடம் வந்து, தமது தேவை நிறைவேறிட பரிந்துரை செய்யும்படி வேண்டுகிறார். அந்தப் பெரியவரும் அவருக்கு பரிந்துரை செய்து, அவரின் தேவையை நிறைவேற்றி கொடுத்து விடுகிறார்.

இதற்கு அவர் பெரியவருக்கு நன்றி தெரிவித்தபோது, ஹஸன் பின் ஸஹ்ல் (ரஹ்), ‘நீர் நன்றி கூறுகிறீர். பொருளாதாரத்திற்குரிய சேவை வரியாக ‘ஜகாத்’ இருப்பது போன்று, முயற்சிக்குரிய ஜகாத்தாக இது போன்ற சேவை உள்ளது. இப்படித்தான் நாம் இதை காணுகிறோம்’ என கூறினார்.

‘முயற்சிக்குரிய ஜகாத் மக்களுக்கு பயன்தரும்படி நடப்பதே’ என்று ஒற்றை வரியில் ஒரு உன்னதமான உதாரணத்தை அவர் குறிப்பிட்டது வைர வரிகளால் உலக வரலாற்றில் பதியப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

உமர் (ரலி) அவர்கள் ஆதரவு இல்லாத, பார்வையற்ற, வயதான சில விதவைப் பெண்களுக்கு தான் சேவையாற்றுவதாக உறுதிமொழி எடுத்திருந்தார். இதன் அடிப்படையில் இரவு நேரத்தில் அவர்களுக்கு தண்ணீர் புகட்டுவது உட்பட ஏராளமான சேவைகளை அவர் மனதார செய்து வந்தார். சில பெண்களின் வீட்டிற்கு உமர் (ரலி) இரவில் செல்வதை தல்ஹா (ரலி) கண்டுகொண்டு, அதை தெரிந்து கொள்ள அந்தப் பெண்களின் வீடுகளுக்கு பகல் பொழுதில் சென்றார். அப்போது அங்கு பார்வையற்ற வயதான பெண்கள் இருப்பதை கண்டு கொள்கிறார்.

‘உங்களிடத்திலே உமருக்கு என்ன வேலை? இங்கு வந்து அவர் என்ன செய்கிறார்?’ என தல்ஹா (ரலி) விசாரிக்கிறார். அதற்கு அந்தப்பெண்கள், ‘உமர் (ரலி) எங்களை பராமரிப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். அதை நிறைவேற்ற எங்களிடம் வருகிறார். எங்களுக்கு பயன்தரும் சேவையில் அவர் ஈடுபடுகிறார். எங்களுக்கு நோவினை தருபவற்றை அவர் அகற்றிவிடுகிறார். குடிக்க தண்ணீரும் புகட்டுகிறார்’ என்றார்கள். இதைக்கேட்ட தல்ஹா (ரலி) உமரின் அடிச்சுவடுகளை பின்பற்றி தானும் நடக்க வேண்டும் என்று உறுதிபூண்டார்.

ஒரு நாள் உமர் (ரலி) இரவில் தூங்கிவிட்டார். எனவே, அந்தப்பெண்களுக்கு உதவிசெய்யச் செல்வதில் தாமதம் ஆகிறது. அந்த வீடுகளுக்கு அவர் தாமதமாக சென்றபோது, அங்கே அபூபக்கர் (ரலி) அவர்கள் உமரின் சேவையை செய்து கொண்டிருந்தார். உடனே உமர் (ரலி) ‘இந்த சேவையிலும் அபூபக்கர் (ரலி) என்னை முந்திவிட்டார்’ என்றார்.

‘யாருக்கு என்ன தேவை என அறிந்து அவர்களுக்கு பயனுள்ள சேவையை செய்திடவேண்டும்’ என இஸ்லாம் கூறுகிறது. ‘மக்களுக்கு செய்யும் பயனுள்ள சேவை இறைவனுக்கு செய்யும் சேவை’ என இஸ்லாம் புகழாரம் சூட்டுகிறது. அவர்தான் மக்களில் உயர்ந்தவர், சிறந்தவர், உன்னதமானவர்.

-மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.