இறைவன் அருளும் பிரகாசமான ஆயுட்காலம்
ஆயுட்காலம் நீடித்திருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவரின் ஆசையாக உள்ளது. அதற்கேற்ற வகையில் உடல், சுற்றுச்சூழலை போன்றவற்றை மனிதன் பராமரித்துக் கொண்டிருக்கிறான். இதற்காக பல்வேறு பயிற்சிகள், உணவுப்பழக்க வழக் கங்களை பலரும் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற பழக்கங்கள் மூலம் அதிக வயது வாழ்ந்தவர்களை முன்னுதாரணமாக வைத்துக்கொள்கின்றனர்.
நீண்ட நாட்கள் வாழ்வதற்கு எடுக்கும் இந்த முயற்சிகள் ஒரு அளவுக்கு பலனை அளித்தாலும், ஆயுள்காலம் என்பது இறைவனின் கையில் உள்ளது என்பதை பெரும்பாலானோர் உணர்ந்து கொள்வதில்லை. ஒரு வயதான நோயாளி நீண்டகாலம் வாழ்ந்துகொண்டிருப் பதும், ஒரு இளைஞன் திடீரென்று நோய் வாய்ப்பட்டு இறப்பதும், ஆயுள் விஷயத்தில் இறைவனின் செயல்பாட்டை அனைவருக்கும் நினைவுபடுத்துகின்றன.
ஆனால் காரணமில்லாமல் இறைவனால் ஒருவரது ஆயுள்காலம் குறைக்கப்படுவதும், கூட்டப்படுவதும் இல்லை. அந்தக் காரணத்தை உணர்ந்தறியும் ஞானம் இல்லாததால் மனிதன் தனக்கு தோன்றிய அறிவின்படி ஆயுளைப்பற்றிய கருத்தை ஏதோ ஒரு கணிப்பில் கூறுகிறான். இறைவனின் சித்தம் இல்லாமல், எந்தப் பயிற்சியின் மூலமாகவும் ஆயுள்காலத்தை யாருமே நீட்டித்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் நிஜம்.
‘மகாஅயோக்கியனாய் இருக்கிறான், நல்ல ஆயுட்காலத்தை அவன் அடைந்திருக்கிறானே’ என்று சிலரைப் பற்றி நாம் சிந்திக்கிறோம். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ‘அயோக்கியனாக மனிதர்களால் கருதப்படுகிறவர்களுக்கும் இறைவனின் கருணை உண்டு’ (சங்.25:8).
அப்படிப்பட்ட நபர்களால் வேறு சிலருக்கு நன்மைகள் கிடைப்பதற்காகவோ அல்லது முன்பு செய்திருந்த பாவங்களுக்கான பிரதிபலனை அவனது பிள்ளைகள் அனுபவிப்பதை பார்ப்பதற்காகவோ அல்லது ஏற்கனவே செய்த குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவர்த்திகளை செய்வதற்காகவோ அல்லது மனந்திரும்பி இறைப்பாதையை நோக்கி வருவதற்கான வாய்ப்பாகவோ, அவர்களின் ஆயுளை இறைவன் நீட்டிக்கச் செய்திருக்கலாம். காலங்கள்தான் அதை நமக்கு வெளிப்படுத்தும்.
ஆயுள்காலத்தில் அளவு எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அந்த நாட்களை எப்படி அனுபவித்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். பல நல்ல அம்சங்கள் நம்மைச்சுற்றி இருந்தாலும் நியாயமான முறையில் அவற்றை அனுபவிக்கும் தகுதியை நமக்கு இறைவன் அளித்திருக்கிறாரா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அப்படிப்பட்ட தகுதி இல்லை என்றால், ஏன் அதை இழந்துவிட்டோம்? எதனால் அதற்குத் தடை வந்தது? என்பதையும் வேத வசனங்கள் மூலம் ஆராய்வது அவசியம். வறுமை, வியாதி போன்ற தகுதி இழப்புகள் என்பது தனது பாவங்களினால் ஏற்பட்ட தண்டனையா? மூதாதையரின் முன்வினைகளினால் வந்த தடையா? என்பதை அறிய முற்படுவது அவசியம்.
ஏனென்றால், நாம் மேலும் பாவங்களை செய்யாமல் இருப்பதற்கும், செய்த பாவங்களுக்கான நிவர்த்திகளை செய்து இறைவனின் வழிக்குள் வருவதற்கும் இந்த சுய ஆராய்ச்சிகள் தூண்டுகோலாக இருக்கின்றன. மேலும், பாவங்களினால் வந்த சாபங்களில் இருந்து நீங்குவதோடு, வாரிசுகளின் வாழ்க்கையில் பல்வேறு சாப இடற்பாடுகள் வருவதையும் தவிர்க்க உதவுகின்றன.
ஆயுள்காலத்தின் அடிப்படை பற்றி வேதம் ஒரு விளக்கத்தை அளிக்கிறது (யோபு 11:13-17). 14-ம் வசனம், ‘உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும்’ என்று போதிக்கிறது. ஆயுசு காலங்கள் பட்டப்பகலைப் போல பிரகாசிப்பதற்கு இது காரணமாக உள்ளது என்பதை அந்த வசனம் மூலம் இறைவன் வலியுறுத்துகிறார்.
ஆயுட்காலம் பிரகாசிக்காமல் போவதற்கு இரண்டு அம்சங்களை அந்த வசனத்தில் இறை வன் சுட்டிக்காட்டுகிறார். முதலாவது, நமது கையினால் செய்யப்படும் அக்கிரமங்கள் அல் லது பாவங்கள் அல்லது குற்றங்கள். இரண்டா வதாக சுட்டிக்காட்டப்படுவது, அப்படிப்பட்ட அக்கிரமங்களால் வீட்டுக்குள் நுழைந்து கொண்ட அநியாயங்கள் அல்லது நியாயத்துக்கு புறம்பாக நடக்கும் செயல்பாடுகள் ஆகியவையே.
ஒரு குடும்பத்தில் ஒருவர் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி நல்ல வாழ்க்கையை அடையாமல் போவது, கொலை, கொள்ளை, விபசாரம் போன்றவை அந்தக் குடும்பத்தில் நடப்பது ஆகியவையெல்லாம், யாருக்கோ எங்கேயோ ஏற்கனவே செய்யப்பட்ட அநியாயங்களின் நுழைவுதானே தவிர வேறல்ல.
தகுதியுள்ள ஒருவருக்கு உதவி செய்யாமல் போனதினால் அவருக்கு ஏற்படும் அனைத்து பிரச்சினைகளும், உதவி செய்யாதவன் வீட்டுக்குள் அநியாயங்களாக நுழையும் என்பது நிஜம். பணமிருந்தும் சமாதானமில்லாத குடும்பங்கள் பல உள்ளன. இவர்களெல்லாம் அநியாயத்தை வரவழைத்துக் கொண்டவர்கள்.
இதுபோன்ற அநியாயங்களில் இருந்து நிவர்த்தி பெறுவது எப்படி? இதற்கு வேதம் மட்டுமே வழிகாட்டியாய் உள்ளது. மூதாதையர் செய்த பாவங்களில் ஒருசிலவற்றை நம்மால் நிவர்த்தி செய்ய முடியும். மற்றவர்களின் சொத்துகள், பொருட்கள் எதுவும் மூதாதைகள் மூலம் அநியாயமாய் நம்மிடம் வந்திருந்தால் அதை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம்.
இதுபற்றி இயேசுவும் நேரடியாகவே போதித்துள்ளார். அவர், ‘நீ பலி பீடத்தினிடத்தில் (ஆலயத்தில்) உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன் பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவு கூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து’ என்று கூறியிருக்கிறார் (மத்.5:23,24).
நமக்கு தெரிந்தவரை நம்மிடம் இருக்கும் அநியாயங்களை நாம் இந்த வகையில் திரும்பச் செலுத்தினோம் என்றால் மட்டுமே, சாபங்கள் நீக்கப்பட்ட பிரகாசமான வாழ்க்கையை இறைவன் அருளுவார். இல்லாவிட்டால், எல்லாம் இருந்தும் திருப்தியற்றே வாழ்க்கை முடியும்.
அநியாய பொருட்களை உரியவரிடம் திருப்பிச் செலுத்திவிடலாம். ஆனால் சரீர ரீதியான கள்ள உறவுகளை எப்படி நிவர்த்தி செய்வது? அதுபற்றி இறைவனிடம் மட்டுமல்ல, தனது வாழ்க்கைத் துணையிடமும், கள்ள உறவில் இணைந்தவரின் வாழ்க்கைத் துணையிடமும் மன்னிப்பு கேட்டாக வேண்டும். எனவே அநியாயங்களை செய்து அநியாயங்களுக்கு பலியாக வேண்டாம்.
Related Tags :
Next Story