நந்தனாருக்காக விலகிய நந்தி


நந்தனாருக்காக விலகிய நந்தி
x
தினத்தந்தி 5 Oct 2018 6:56 AM GMT (Updated: 5 Oct 2018 6:56 AM GMT)

பக்தனுக்காக நந்தியை விலகி இருக்கச் செய்த இறைவன் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும்.

மேல ஆதனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் நந்தனார். மிகச் சிறந்த சிவபக்தர். இவர் சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜப்பெருமானை தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனாலும் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்லமுடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைத்த பாடில்லை. ‘நாளை போகலாம்.., நாளை போகலாம்’ என்றே இருந்தார். அதனால் அவருக்கு ‘திருநாளைப்போவார்’ என்று கூட பெயர் உண்டு.

ஒரு நாள் நந்தனார் சிதம்பரம் செல்வதற்கு, முதலாளியின் அனுமதி கிடைத்தது. இதையடுத்து அவர் சிதம்பரம் புறப்பட்டார். வழியில் திருப்புன்கூர் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது.

நந்தனாருக்கு ‘இறைவனை தரிசிக்க முடியவில்லையே’ என்ற மனவருத்தம் ஏற்பட்டது. ‘என்ன செய்வேன் இறைவா?’ என்றபடி மனமுருக வேண்டினார். தன் மனவலியைச் சொல்லி இறைவனைப் பாடினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவார பாலகர்களும் இறைவனிடம் ‘சுவாமி! நந்தனார் வந்திருக்கிறார்’ என்றனர்.

இன்னொருவர் சொல்லித்தான், இறைவனுக்கு தன் பக்தனின் பக்தியைப் பற்றித் தெரிய வேண்டுமா? நந்தனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான், தனக்கு முன்பாக இருந்த நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்தார். நந்தியும் அதன்படியே விலகிக்கொண்டது. இப்போது இறைவனின் திருக்காட்சி நந்தனாருக்கு நன்றாகத் தெரிந்தது. இப்படி பக்தனுக்காக நந்தியை விலகி இருக்கச் சென்ற இறைவன் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும்.

இப்போதும் இந்த ஆலயம் சென்றால், இறைவனின் கருவறைக்கு நேராக இல்லாமல், சற்று ஒதுங்கி இருக்கும் நந்தியை நாமும் தரிசிக்கலாம். எல்லாக் கோவில்களிலும் நந்திக்கு நாக்கு வெளியே தெரிந்தபடி இருக்கும். ஆனால் இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு உள்ளமைந்தபடி இருக்கும். துவார பாலகர்கள் எல்லாக் கோவில்களிலும் நேராக இருப்பார்கள். ஆனால் இங்கு தலை சாய்த்து காணப்படுவார்கள். இறைவனிடம், நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறுவது போல் அமைந்த தோற்றம் இது என்று சொல்லப்படுகிறது.

புங்க மரம் நிறைந்த காட்டுப்பகுதியில் இருந்ததால், இந்த கோவிலுக்கு புங்கூர் கோவில் என்று பெயர் வந்தது. புங்க மரக்காட்டுப் பகுதியில் இறைவன் புற்று வடிவமாக உள்ளார். இத்தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான லிங்கமே. அதன்பிறகே வந்தது நந்தி. இவை இரண்டும்தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். புற்று வடிவமாக மூலவர் வீற்றிருக்கிறார். இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பதாகும்.

புற்று வடிவாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு, வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புணுகு சட்டம் சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பக்தர்கள் பூஜைகள் நடத்துகிறார்கள். நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்ப வர்கள் தங்கத்தில் நாகத் தகடு செய்து உண்டியலில் போடுகி றார்கள். இவ்வாறு செய்தால் திருமணத்தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது. திருமண வரம் வேண்டுவோர் அர்ச்சனை மாலை சாத்துவது என்பது இத்தலத்தில் விசேஷம். மேலும் பரிகார அர்ச்சனை என்பதும் இத்தலத்தில் விசேஷமானது.

இத்தலத்தில் உள்ள மூர்த்திகளான சுவாமி, அம்பாள், பிள்ளையார், முருகன், அகத்தியர் ஆகியோருக்கு செய்யப்படும் பஞ்ச அர்ச்சனைகள், பூர்வ ஜென்ம பாவங்களை விலக்கி அருள்புரியும் என்று கூறுகிறார்கள்.

இங்குள்ள அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி என்பதாகும். இந்த அன்னைக்கு புடவை சாத்துதலும், அபிஷேகம் செய்தலும், சந்தனகாப்பு சாத்து தலும் பக்தர் களின் முக்கிய நேர்த்திகடன் களாக உள்ளது. சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா, மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி, பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய லாம். தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப் பணிக்கு பொருளுதவி செய்ய லாம்.

நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம் உள்ளவர்கள் இத்தலத் தில் வழிபட்டால், அவர்களின் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. புற்று வடிவாய் வீற்றிருக்கும் மூலவர் சிவலோக நாதர் சுவாமியை வணங்குவோரு க்கு துயரம் நீங்கி மன அமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக் காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இத்தல இறைவன், தன்னுடைய பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களுக்கும் நிச்சயம் செவிசாய்ப்பார்.

இந்த ஆலயத்தில் ‘குளம் வெட்டிய பிள்ளையார்’ மிகவும் பிரசித்தம் பெற்றவர். நந்தனார் இத்தல இறைவனை தரிசிக்கும் முன்பாக நீராடுவதற்காக, ஒரே இரவில் பூதங்களை கொண்டு இங்கு திருக்குளம் அமைந்தார் விநாயகர். இதனால் இத்தல விநாயகர் ‘குளம் வெட்டிய பிள்ளை யார்’ என்று அழைக்கப்படுகிறார்.

இந்த ஆலயத்தின் தல விருட்சம் புங்கமரம். எனவே தான் இந்த ஊருக்கு ‘திருப்புன்கூர்’ என்ற பெயர் வந்தது. மிகவும் பழமையான கோவில் இது. ராஜேந்திர சோழன் காலத்தில் கோவில் திருப்பணிகள் நடந்துள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலய ங்களில், இது 20-வது தேவாரத் தலம் ஆகும்.

வைகாசி விசாகம், 10 நாள் பிரம்மோற்சவம் இங்கு விமரிசையாக நடைபெறும் விழாக்களாகும். திருவிழாவில் பத்து நாட்களும் சுவாமி வீதியுலா வரும். மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோவிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி, பொங்கல், தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அமைவிடம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைதீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, திருபுங்கூர் சிவலோகநாதர் சுவாமி திருக்கோவில்.

Next Story