ஆன்மிகம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது + "||" + For the magalaya amavasai Temple Samayapuram The meeting of the devotees was awaited

மகாளய அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

மகாளய அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வணங்கினர். இரவு ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். தமிழ்நாட்டில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டம் அதிகம் வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான்.


இக்கோவிலுக்கு வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களிலும், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களிலும் அம்மனை தரிசனம் செய்வதற்காகவும், நோய் நொடியில்லாத வாழ்க்கை அமையவும், செல்வ செழிப்போடு குடும்பம் விளங்கவும், வேண்டிக்கொண்டு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகவும், கார், வேன் போன்ற வாகனங்களிலும், சமயபுரம் வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.

அதன்படி, நேற்று புரட்டாசி மகாளய அமாவாசை என்பதால் அதிகாலை 5 மணியில் இருந்தே பக்தர்கள் கூட்டம் சமயபுரம் கோவிலில் அலைமோதியது. அவர்கள் கட்டண வரிசையிலும், பொது தரிசன வரிசையிலும் நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர். மேலும் நெய்தீபங்கள் ஏற்றியும், கோவிலின் நுழைவு வாயிலில் தீபம் ஏற்றி தேங்காய் உடைத்தும், ஏராளமான பெண்கள் வணங்கினர். சில பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் பொருட்டு குழந்தையை கரும்பு தொட்டிலில் சுமந்து வந்தும், அக்னி சட்டி ஏந்தி வந்தும் அம்மனை வழிபட்டனர்.

மாலை 5 மணிக்கு உற்சவ மண்டபத்தில் அம்மனுக்கு சந்தனம், பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகமும், பூக்களால் அலங்காரமும் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இரவு அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதி வழியாக வாணவேடிக்கைகளுடன், மேளதாளங்கள் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் திருச்சி மற்றும் துறையூரில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி, சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் மேற்பார்வையில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் ஏராளமான போலீசாரும், ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதே போல் இனாம்சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவில், போஜீஸ்வரர் கோவில், மாகாளிக்குடி உஜ்ஜயினி மாகாளியம்மன் கோவில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஆகிய அனைத்து கோவில்களிலும் மகாளய அமாவாசையையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.