ஆன்மிகம்

பாக்கியத்தை இழக்கச் செய்த ரத்தம் + "||" + The blood that lost the privilege

பாக்கியத்தை இழக்கச் செய்த ரத்தம்

பாக்கியத்தை இழக்கச் செய்த ரத்தம்
உலகின் முதல் மனிதன் ஆதாமும், அவர் மனைவி ஏவாளும் இறை வனின் ஏதேன் தோட்டத்தில் இன்பமாக வாழ்கின்றனர். சாத்தானின் சூழ்ச்சியால் அவர்கள் பாவத்தின் வலையில் விழுந்து விடுகின்றனர்.
ஏதேன் தோட்டம் அது ஒரு இன்ப வனம். ஆனால் இழப்புகளைச் சந்தித்த இடமும் அது தான். நீர்க்கால்களின் ஓரமாய் இருந்த மனித வாழ்வு, வறண்ட நிலத்தில் விடப்பட்ட அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட இடமும் ஏதேன் தான்.

தேவ பிரசன்னத்தில் திளைத்திருந்த வாழ்வும் ஏதேனில் தான் நிகழ்ந்தது. துண்டு துணியோடு துண்டுபட்ட வாழ்வும் ஏதேனில் தான் நிகழ்ந்தது.


ஆளுமையை கொடுத்த இடமும் ஏதேன் தான். பாவத்தினாலே ஆளுகையை இழந்த இடமும் ஏதேன் தான்.

நாளாகமம் நூல் விவிலியத்திலுள்ள பழைய ஏற்பாட்டு நூல்களில் மிக முக்கியமான நூல். ஏதேனுக்கும், நாளாகமத்துக்கும் என்ன தொடர்பு? ஏதேனில் இழந்த நம்பிக்கை, எருசலேமில் கட்டி எழுப்பப்படுகிறது. எருசலேம் தேவாலயம் எதிர்கால நம்பிக்கையின் அடையாளமாக உருவாகிறது.

இந்த நூல் ஆதாமில் தொடங்கிய பயணத்தை மேசியாவை நோக்கி வழி நடத்துகிறது. எபிரேய வேதாகமத்தில் நாளாகமம் ஒன்று, இரண்டு என இரண்டு பாகங்களும் சேர்ந்து ஒரே நூலாகத் தான் இருக்கிறது. பழைய ஏற்பாட்டின் கடைசி நூலும் அது தான்.

இதை ஒரு குட்டி பழைய ஏற்பாடு என்று சொல்வார்கள். காரணம், பழைய ஏற்பாட்டின் சுருக்கமும், புதிய ஏற்பாட்டின் ஒரு சின்ன அறிமுகமும் இதில் உண்டு.

பாக்கியத்தை இழந்தவராக நாம் தாவீதைப் பார்க்கிறோம். உலகத்தில் லட்சியத்தோடு வாழ்பவருக்கு செய்து முடிக்க ஏராளமான காரியங்கள் உண்டு. லட்சியம் இல்லாமல் வாழ்பவர்களுக்கு பொழுது போகவும் வழியில்லை.

தாவீது தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்டும் தனது லட்சியத்தை முழுமையாய் செய்து முடிக்க முடியவில்லை. அவரால் கடவுளுக்கான ஆலயத்தைக் கட்டி முடிக்க முடியவில்லை. அதற்குக் காரணம் அவரது கரங்கள் சிந்திய ரத்தம். ரத்தம் சிந்திய கைகளினால் இரக்கத்தின் அரண்மனையைக் கட்ட இறைவன் அனுமதிக்கவில்லை.

‘எனக்கான ஆலயத்தை உன் மகன் கட்டுவான்’ என கடவுள் தாவீதிடம் சொன்னார். தாவீது அதைப் பற்றி பொறாமைப்படவில்லை. ஆலயம் கட்டத் தேவையான அனைத்தையும் சேர்த்து வைத்தார். ஒரு லட்சம் தாலந்து பொன் அவர் சேகரித்தார்.

அதாவது, சுமார் 37 லட்சத்து 50 ஆயிரம் கிலோ பொன், 3 கோடியே 75 லட்சம் கிலோ வெள்ளி, கணக்கில்லாத அளவுக்கு வெண்கலம், மரம், கல், இரும்பு போன்றவை.

எல்லாவற்றுக்கும் மேலாக, கர்த்தரால் வரையப்பட்ட மாதிரி வரைபடம் என அனைத்தையும் சேகரித்து மகனிடம் கொடுத்தார் தந்தை.

கட்டிடம் முழுவதும் சாலமோனின் ஞானத்தின் அழகு தெரியும். தாவீதின் ஆசையின் ஆழமும் தெரியும்.

ஆலயத்தில் சாலமோனின் மூளையைக் கண்டு வியந்தவர்கள், தாவீதின் இதயத்தைக் காணாமல் இருக்க முடியாது. எப்படிப்பட்ட பெரிய காரியங் களுக்கெல்லாம் சொந்தக்காரர் தாவீது. ஆனால் அவரால் அதைக் கட்ட முடியவில்லை.

ஆலயம் என்பது வாழ்வோடு தொடர்புடையது. நாமே கடவுளின் ஆலயம். அதில் தூய்மை அவசியம். பரிசுத்தம் அவசியம். எருசலேம் தேவாலயத்தைக் கட்ட பரிசுத்தம் தேவையென கடவுள் விரும்பினார்.

அதே போல, கடவுள் வாசம் செய்யும் இந்த உடலாகிய ஆலயமும் மிகவும் பரிசுத்தமானது. தூய்மையாய் இருக்க வேண்டியது.

எருசலேம் தேவாலயத்தைக் கட்டியெழுப்பும் பாக்கியத்தை தாவீது இழந்தது போல, கடவுள் வாசம் செய்யும் இந்த உடலாகிய ஆலயத்தை கட்டி யெழுப்பும் பாக்கியத்தை நாம் இழந்து போகக் கூடாது.

அதற்கு இரண்டு விஷயங்கள் முக்கிய தேவை. ஒன்று விசுவாசம், நம்பிக்கை. இரண்டாவது நல்ல நடத்தை. ‘செயலில்லாத விசுவாசம் செத்த விசுவாசம், விசுவாசம் இல்லாத செயல் வீண்’ என விவிலியம் சொல்கிறது.

நமது வாழ்க்கையில், நம்பிக்கையும் நடத்தையும் மிகவும் அவசியம். இறைவன் தருகின்ற பாக்கியத்தை இழக்காமல் இருக்க வேண்டுமெனில் இவை இரண்டும் நிச்சயம் வேண்டும்.

அவர் மேல் நம்பிக்கை வைத்திருக்கும் எவனும், அவர் தூயவராய் இருப்பது போல தம்மையே தூயவராக்கிக் கொள்ள வேண்டும். அப்போது தான் பாக்கியத்தை இழக்காமல் இருக்க முடியும். சுத்த ரத்தம் மட்டுமே நமக்கு தூய வாழ்க்கையை தர முடியும். தெளிந்த புத்தி, நீதி தேவ பக்தி உள்ளவர்களாய் வாழ முடியும்.

நாம் அழிகின்ற இந்த உலகிலிருந்து, அழியாத கடவுளின் நாளுக்காகக் காத்திருக்க வேண்டும். அவர் வரும் போது நம் வாழ்வு தூய வாழ்வாக இருக்க வேண்டும் என்பது தான் நமது எண்ணம். அதற்காக பரிசுத்த நடத்தை உள்ளவர்களாய் நாம் இருக்க வேண்டும்.

நமது வாழ்விலும், நமது உடலாகிய ஆலயத்தைக் கட்டி எழுப்புவோம். இறை விசுவாசமும், நடத்தையும் இருகண்களென பேணுவோம்.

(நிறைவு பெற்றது)