தீர்ப்புகள் திருத்தப்படலாம்


தீர்ப்புகள் திருத்தப்படலாம்
x
தினத்தந்தி 10 Oct 2018 8:08 AM GMT (Updated: 10 Oct 2018 8:08 AM GMT)

“தாவூதையும், சுலைமானையும் நபியாக அனுப்பி வைத்தோம். ஒருவருடைய ஆடுகள் மற்றொருவரின் பயிரை மேய்ந்து விட்டது பற்றி தாவூது, சுலைமான் ஆகிய இருவரும் தீர்ப்பு கூற இருந்த சமயத்தில், அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

தீர்ப்பு கூறுவதில் இவர்கள் இருவருக்குமே கல்வியையும், ஞானத்தையும் நாம் கொடுத்திருந்த போதிலும், சுலைமானுக்கு நியாயத்தை விளக்கி காண்பித்தோம்”. (திருக்குர்ஆன் 21:78-79)

அல்லாஹ், உலகில் தன் தூதுவத்தை எடுத்துச் சொல்வதற்காக கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 24 ஆயிரம் நபிமார்களை அனுப்பி வைத்தான். ஆனால் ஒரு சில நபிகள் குறித்த விவரங்கள் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக திருக்குர்ஆனில் சொல்லப் பட்டிருக்கின்றன. அவற்றை கோர்வையாக சேர்த்து படிக்கும் போது தான், முழு வரலாற்றையும் தெரிந்து கொள்ள முடியும்.

அப்படி படைக்கப்பட்ட நபிமார்களில் ஒரு சிலரை குடும்பமாகவும், கோத்திரமாகவும் இறைவன் அங்கீகரித்துள்ளான். உதாரணமாக, நபிகள் இப்ராகிம்-இஸ்மாயில், யாகூப்-யூசுப் ஆகியோரை குறிப்பிடலாம். அந்த வரிசையில் தாவூது-சுலைமான் ஆகியோரை தந்தை-தனயனாக நபி பட்டம் கொடுத்து பூமிக்கு அனுப்பி வைத்தான் இறைவன்.

தாவூது நபிகள் மன்னராக இருந்தபோது, சுலைமான் நபிகளும் அரசவையில் ஓர் அங்கத்தினராக வீற்றிருந்தார்கள். அவருக்கு அப்போது வயது பதினொன்று.

தாவூது நபிகள், தன் கையால் இரும்பை தொட்டால் அது மெழுகாய் இளகி ஓடும் தன்மையை அல்லாஹ் கொடுத்திருந்தான். அதன் மூலம் அவர்கள் சங்கிலி வளையங்கள், போரில் பயன் படுத்தும் உருக்கு சட்டை கவசம் போன்றவற்றை செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருந்தார்கள். அவர் இறை வணக்கத்தில் ஈடுபடும் போது, அவரோடு சேர்ந்து மலைகளும், பறவைகளும் அல்லாஹ் விற்கு சிரம் பணிந்தன என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

சுலைமான் நபிகளுக்கு, காற்றை வசப் படுத்தி கொடுத்ததோடு, பல உயிரினங்களின் பரிபாஷையை தெரிந்து கொள்ளும் ஆற்ற லையும் இறைவன் கொடுத்திருந்தான். காற் றின் உதவியுடன் பல மைல் தூரங்கள், நொடி யில் பயணம் செய்யும் ஆற்றலும் அவருக்கு இருந்தது.

ஒருமுறை அவரது அரசவையில் ஒரு விசித்திரமான வழக்கு ஒன்று வந்தது. வாதியும் பிரதிவாதியும் முறையிட்டார்கள். வாதி சொன்னார், “எனது சொந்த நிலத்தில் நான் பாடுபட்டு பண்படுத்தி பயிர் விளைவித்திருந்தேன். அது நன்றாக பருவம் எய்தியபோது, பிரதிவாதியின் ஆட்டு மந்தை கள் எனது நிலத்தில் புகுந்து அத்தனை பயிர் களையும் தின்று நாசம் செய்து விட்டன” என்றார்.

பிரதிவாதியும், “ஆம்! உண்மை அரசே! நான் எனது மந்தையை விட்டு அகன்று பிறிதொரு இடத்திற்கு சென்று விட்டதால் எனது கவனக்குறைவின் காரணமாக என் மந்தை அந்த நாச வேலைகளைச் செய்து விட்டது. அது மட்டுமல்ல, இதற்காக எந்த நியாயமான தீர்ப்புக்கும் நான் கட்டுப்படுகிறேன்” என்று உறுதிமொழியும் அளித்தார்.

தாவூது நபிகள் பிரதிவாதியால் வாதிக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டிருக்கும் என்பதை கணக்கிட்டே தீர்ப்பு வழங்க ஆர்வம் காட்டினார். வாதியின் உழைப்பும், அதில் அவர் செலவிட்ட தொகையும், பயிர் விளைந்ததால் அவருக்கு கிடைத்திருக்க வேண்டிய முறையான லாபம் எவ்வளவு என்பதை கணக்கிட்டார்.

அதன் அடிப்படையில் பிரதிவாதியின் ஆட்டு மந்தையின் ஆடுகளின் எண்ணிக்கையையும், அதன் விலை எவ்வளவு என்பதையும் கணக்கிட்ட தாவூது நபிகள், அந்த இரண்டு கூட்டுத்தொகையும் ஒன்றாக இருந்ததின் காரணத்தால் கீழ்க்கண்டவாறு தீர்ப்பு வழங்கினார்:

“நான் கணக்கிட்ட வகையில் வாதிக்கு ஏற்பட்ட நஷ்டமும், பிரதிவாதியின் ஆட்டு மந்தையின் மொத்த மதிப்பும் ஒன்றாக இருக்கின்ற காரணத்தால், வாதிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய பிரதிவாதி தன் ஆட்டு மந்தை முழுவதையும் வாதியிடம் ஒப் படைத்து விட வேண்டும்”.

இவ்வாறு அவர் தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பு இருதரப்பினருக்கும் நியாயமாகப் படவே இருவரும் அந்த தீர்ப்பை ஒத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்த சிறுவர் சுலைமான், தாவூது நபிகளை நோக்கி, “என்னருமை தந்தையே, இந்த தீர்ப்பை இருவரும் ஏற்றுக்கொண்டாலும் சற்று ஆழமாக சிந்திக்கும் போது பிரதிவாதிக்கு நிரந்தரமான இழப்பு ஏற்பட்டுள்ளதை யாரும் மறுப்ப தற்கில்லை. காரணம் ஒட்டு மொத்த ஆட்டு மந்தையையும் அவர் இழந்து விடுகிறாரே?. அதற்கு பதிலாக, நான் இதற்கு மாற்றமான, அதே சமயம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளும் படியான இன்னுமொரு தீர்ப்பை வழங்கலாமா? அதற்கு அனுமதியுண்டா தந்தையே?” என்று வினவி நின்றார்.

இந்த நிகழ்வின் மூலம், அரசரே ஆனாலும், நபியாக இருந்தாலும், தந்தையாக இருந்தாலும், ஒரு பிரச் சினையில் அவர் தீர்ப்பு சொல்லி விட்ட பிறகு அந்த தீர்ப்புக்கு ஒரு மாற்று கருத்தைச் சொல்வதற்கு வயது வரம்பின்றி எல்லோருக்கும் உரிமை உண்டு என்பதையும், அதனை வழங்கியது இஸ்லாமிய கோட்பாடு என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

தாவூது நபிகள் புன்னகை பூத்தவர்களாக, “இதை விட நல்ல தீர்ப்பு ஒன்றிருந்தால் நீ என்ன? சாதாரண குடிமகனுக்கும் அதைச்சொல்ல உரிமை உண்டு. எங்கே உன் தீர்ப்பைச் சொல் பார்க்கலாம்” என்றார்.

சுலைமான் நபிகள் இவ்வாறு தனது தீர்ப்பை கூறினார்.

வாதிக்கு நிலம் சொந்தம், பிரதிவாதிக்கு ஆட்டு மந்தை சொந்தம். இரண்டு சொந்தத்திற்கும் பங்கம் விளைவிக்க கூடாது. அதே சமயம் நடந்து விட்ட அநீதிக்கு நீதி வழங்கியாக வேண்டும்.

எனவே பிரதிவாதி தன் ஆட்டு மந்தையை வாதி யிடம் ஒப்படைத்து விட வேண்டும். வாதி தன் நிலத்தை பிரதிவாதியிடம் கொடுத்து விட வேண்டும்.

ஆட்டு மந்தை குறிப்பிட்ட காலம் வரை வாதியிடம் இருக்க வேண்டும். அதனை அவர் முறையாக பராமரிக்க வேண்டும். அதே சமயம் அதிலிருந்து கிடைக்கும் பால், ரோமங்கள், குட்டிகள் ஆகிய பலன் களை அவர் முழுமையாக அனுபவித்து கொள்ளலாம்.

பிரதிவாதி அந்த நிலத்தை பண்படுத்தி உரமிட்டு நன்றாக பயிரிட்டு அந்த குறிப்பிட்ட கால அவகாசத்தில் விளைச்சலைப் பெருக்க வேண்டும். ஆடுகள் மேயும் போது பயிர்கள் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலையை எட்டும் போது நிலத்தை வாதியிடம் ஒப்படைத்து விட்டு ஆட்டு மந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தீர்ப்பு வழங்கினார்.

இந்த தீர்ப்பின் மூலம் மிக துல்லியமாக நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த தாவூது நபிகள், மகன் சுலைமானை ஆரத்தழுவி “சரியான தீர்ப்பை வழங்கினாய்” என்று வாழ்த்துச் சொன்னார்.

சற்று கால இடைவெளியில் இருவருக்குமே எந்த வித பாதிப்பும் இல்லாமல் இழந்தவை சரி செய்யப் பட்டது. இப்படிப்பட்ட நியாயமான தீர்ப்புகள் தான் இஸ் லாம் கூறும் சமத்துவம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்.

எனவே தீர்ப்புகள் ஒரு நியாயத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டாலும், நியாயத்தையும் தாண்டி தொலை நோக்கு சிந்தனையில் அந்த தீர்ப்புகள் திருத்தப் படலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணமாக அமைகிறது. குறுகிய கால நன்மையைத் தாண்டி, நிரந்தரமாக நீண்ட காலம் நன்மை தரும் தீர்ப்பே சாலச் சிறந்தது என்பதையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற வரலாற்றை தெரிந்து கொள்வதோடு சந்தர்ப்பங்கள் வாய்க்கும் போது நீதியின் பக்கம் உறுதியாக நிற்க கூடிய சக்தியை நம் எல்லோருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள் புரிவானாக, ஆமின்.

(தொடரும்)

Next Story