ஆன்மிகம்

சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார் + "||" + God of peace will be with you

சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்

சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்
தேவன் அருளுகிற ஆசீர்வாதங்களில் மிக மிக முக்கியமானது சமாதானம் ஆகும். இந்த சமாதானத்தைத் தேடி இன்று கோடிக்கணக்கான மக்கள் பல வழிகளை நாடுகிறார்கள். ஆனால் உண்மையான, நிரந்தரமான சமாதானத்தை அருளுகிறவர் நம் அருமை ஆண்டவராகிய இயேசு மட்டும் தான்.
இந்த மெய்யான சமாதானத்தை பெறுவதற்கான ஆலோசனையை ஜெபத்தோடு வாசித்துப் பெற்றுக்கொள்ளுங்கள்.

மீகா 5:5 சொல்லுகிறது, ‘கர்த்தர் சமாதான காரணர்’. மேலும் ஏசாயா 53:5 சொல்லுகிறது, ‘சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது’ என.

எல்லாவற்றுக்கும் மேலாக ‘என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன், உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக’ என யோவான் 14:27 -ல் வாசிக்கிறோம்.

எனவே சமாதானத்தை அருளுகிற நம் அருமை ஆண்டவரை விசுவாசத்தோடு நோக்கிப் பாருங்கள்.

கூப்பிடுங்கள்

‘நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்கு என்று அவரை வருந்திக் கேட்டுக் கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார்’. (லூக்கா 24:29)

அன்றைக்கு எம்மாவூருக்குப் போன சீடர்கள் இயேசுவை வருந்திக் கூப்பிட்டபோது அவர்கள் வீட்டில் தங்கும்படி இயேசு உள்ளே போனார். அப்போது அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து அவர்களுக்குக் கொடுக்கையில் அவர்கள் கண்கள் திறக்கப்பட்டு இயேசுவை அறிந்தார்கள் என லூக்கா 24:29-31 வரையுள்ள வசனங்கள் தெளிவுபடுத்துகிறது.

அன்பானவர்களே, ‘அவரை நோக்கிக் கூப்பிடுதல்’ என்பது ஜெபத்தைக் குறிக்கிறது. உங்கள் வீட்டில் ஒரு சிலராய் இருந்தாலும் நீங்கள் கூடி தேவனை நோக்கிப் பாருங்கள். மத்தேயு 18:19,20-ன் படி ‘அவர் உங்கள் நடுவில் வருவார், ஆச்சரியமான சமாதானத்தைக் காண்பீர்கள்’. ஆகவே உங்கள் வீட்டை ஜெபத்தினால் கட்டி எழுப்புங்கள்.

சத்தத்திற்குக் கீழ்ப்படியுங்கள்

‘இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன், ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்’. (வெளிப்படுத்தின விசேஷம் 3:20)

அருமை ஆண்டவர் உங்கள் இதயக்கதவைத் தட்டும்போது அவருடைய சத்தத்திற்கு செவி கொடுத்து உங்கள் இருதயத்தில் அவருக்கு இடங்கொடுங்கள். அப்போது அவர் உங்களுக்குள்ளே பிரவேசிப்பார்.

அன்றைக்கு மரியாள் தேவ சத்தத்திற்கு செவி கொடுத்து தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைப் பெற்றாள். அவள் சகோதரியாகிய மார்த்தாளும் அதே வீட்டுக்குள்ளே இருந்தாலும் சமாதானமின்றி தவித்தாள். காரணம், ஆண்டவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்காத காரியம் தான்.

இச்செய்தியை வாசிக்கிற நீங்கள் தேவ சத்தத்திற்கு செவி கொடுக்க உங்களை அர்ப்பணியுங்கள். நிச்சயம் உங்கள் இருதயம் சமாதானத்தினால் நிரம்பும்.

தேவனோடு ஐக்கியம்

‘நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும், அதினால் உமக்கு நன்மை வரும்’. (யோபு 22:2)

தேவனுடைய அளவற்ற சமாதானத்தைப் பெற கிறிஸ்துவோடுள்ள ஐக்கியத்தை எப்போதும் காத்துக்கொள்ள வேண்டும். அந்த ஐக்கியம் தான் சமாதானத்திற்கு மூலகாரணம் ஆகும். தேவனோடுள்ள ஐக்கியம் பெலவீனப்படாதபடி உங்கள் ஆவியை மிகுந்த கவனமாய் காத்துக்கொள்ளுங்கள். முடிந்த அளவுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் நிரம்பி அடிக்கடி ஜெபம் பண்ணுங்கள்.

‘எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது’. (I யோவான் 1:3)

ஆகவே, தேவன் அருளுகிற சமாதானத்தை அனுதினமும் பெற்றுக் கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள். நிச்சயமாய் கர்த்தருடைய அளவற்ற சமாதானத்தைக் காண்பீர்கள்.

‘உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர், உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்’. (யோபு 5:24)

சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,
இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்,
சென்னை-54.