ஆன்மிகம்

புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர் + "||" + Kovilpatti Boovananathar

புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர்

புண்ணியம் கொடுக்கும் கோவில்பட்டி பூவனநாதர்
திருமங்கை நகர், பொன்மலை, கோயில்புரி, கோயில்பட்டி என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஊர் தற்போது ‘கோவில்பட்டி’ என்றழைக்கப்படுகிறது.
கோவில்பட்டியிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வெம்பக்கோட்டை பகுதியை அரசாண்ட செண்பகமன்னன் என்பவன், களாக்காட்டினை வெட்டித் திருத்தி, கோவிலும், ஊரும் எழுப்பினான் என்கிறது கோயில்புரி வரலாறு. ஆனால் அவருடைய காலத்தை அறிய இயலவில்லை.

இவ்வூருக்கு தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மந்தித்தோப்பிலுள்ள சங்கரபாரதி திருமடத்தில் ஒரு செப்புப் பட்டயம் உள்ளது. அது குலசேகர பாண்டியனால் கலி4131 சாலிவாகன சகாப்தம் 952-ல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளதால், கோயில்புரி கலி 4131-க்கு முற்பட்டது எனத் தெரிகிறது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள ஆலயத்தை உள்ளமுடையான் என்பவர் புதுப்பித்தார் என்பதும், அதற்கு 148 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட மந்தித்தோப்பு பட்டயத்தில் இவ்வூர் குறிக்கப்பட்டுள்ளதாலும், சுமார் 950 ஆண்டுகளுக்கு முன்னரே இவ்வூர் இருந்ததென்பது தெளிவாகிறது. இத்திருக்கோவிலைப் புதுப்பித்த உள்ளமுடையான் சிலை ஒன்று, சுவாமி சன்னிதி மகாமண்டபத்தின் தூண் ஒன்றில் உள்ளது.

தல வரலாறு

சிவனார் மனம் மகிழ தவமியற்றிய பார்வதி தேவிக்கு, இறைவன் காட்சி கொடுத்து திருமணம் முடிக்க வந்து சேர்ந்தார். ஈடிணையில்லா ஈசன் திருமணம் காண யாவரும் ஒருங்கே கயிலை மலையில் கூடினர். இதனால் உலகின் வடபுலம் தாழ்ந்து, தென்புலம் உயர்ந்தது. அதனைச் சமம் செய்ய இறைவன், கடல் குடித்த குடமுனியாம் அகத்தியரைத் தென்புலம் செல்லப் பணித்தார். அதன்படி தெற்கு நோக்கி வரும் வழியில் அகத்தியர் பொன்மலைக்கு வந்தார்.

அங்கு களாமரக் காட்டில் லிங்கத் திருமேனியாய் எழுந்தருளியுள்ள ஈசன் பூவனநாதரை வழிபட்டு, அங்கேயே தவமியற்றி வந்த முனிவர்களைக் கண்டார். அம்முனிவர்களின் வேண்டுக்கோளுக் கிணங்க அகத்தியர் சிவலிங்கத்திற்கு வடகிழக்கில் பொன்மலையில் தட்டியவுடன் அருவி ஒன்று ஓடி வரலாயிற்று. அதுவே ‘அகத்தியர் தீர்த்தம்’ என்று பெயருடன் விளங்கும், இந்தத் திருக்கோவிலின் தீர்த்தக் குளம் ஆகும்.

அதன் பின்னர் அகத்தியர் பொன்மலை முனிவர்களுடன் பூவனநாதரை வழிபட, இறைவன் அகத்தியர் முன்பாக தோன்றினார். ‘நீ என்னுடைய பெருமைகளை இங்குள்ள முனிவர்களுக்கு எடுத்துரைத்து விட்டு, இங்கிருந்து பொதிகை மலை சென்று என்னுடைய திருமணக் காட்சியை கண்டு தரிசிப்பாயாக’ என்று அருளினார். அதன்படி பொன்மலை முனிவர்களுக்கு, பொன்மலை பூவனநாதரின் பெருமைகளை எடுத்துரைத்த அகத்தியர், அங்கிருந்து பொதிகை மலைக்கு புறப்பட்டார். அகத்தியர் பொதிகை மலையை அடைந்ததும், உலகம் சமநிலையை அடைந்தது.

முன்பு ஒரு காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு பாம்புத் தலைவர்களுக்கு, சிவன், திருமால் இருவரில் யார் பெரியவர் என்ற ஐயம் ஏற்பட்டது. ஐயம் தெளிவு பெற களாக் காட்டிடையே லிங்க வடிவில் எழுந்தருளி இருந்த ஈசனை, பூவனப் பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். அவர்கள் முன் இறைவன் தோன்றி காட்சி கொடுத்து இன்று முதல் இச்சிவலிங்கம் ‘பூவனநாதர்’ என்று பெயர் பெறும். புன்னைக்காவலில்(சங்கரன்கோவில்) உங்கள் ஐயம் தீர்ப்போம் என்று கூறி மறைந்தார்.

சங்கனும், பதுமனும் பூவன பூக்களால் இத்தல இறைவனை வழிபட்டதால், இறைவனுக்கு ‘பூவனநாதர்’ என்று பெயர் வந்தது. இத்திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் அம்பாள் செண்பகவல்லி, ஒரு முறை இறைவன் திருமுடியில் அமர்ந்திருக்கும் கங்கையை இகழ்ந்தாள். ஈசன் அம்பாளை அருவிக்கு அழைத்துச் சென்று, கங்கையை பேரழகுடைய பெண்ணாகவும், பின் சிவனாகவும் காட்டினார். அதனைக் கண்ட அம்பாளின் அகந்தை அழிந்தது. அம்பாள் அருள்தரும் அன்னையாக, செண்பகவல்லி என்ற பெயரில் 7அடி உயரத்தில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள்.

இவ்வன்னை இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் தெய்வமாக விளங்குகிறாள். எனவே தான் இத்திருக்கோவிலுக்கு வரும் அன்பர்கள், முதலில் அம்பாள் சன்னிதியில் வழிபாடு முடித்துவிட்டு, பின்னர் சுவாமி சன்னிதிக்குச் செல்கின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களிடையே, பெண் குழந்தைகள் பிறந்தவுடன் பெரும்பாலும் செண்பகவல்லி என்ற பெயர் வைக்கும் பழக்கம் இன்னும் நீடிக்கிறது. தென் தமிழ் நாட்டு திருக்கோவில்கள் பலவற்றில் தேவியருக்கே மகிமை அதிகம். மாமதுரை மீனாட்சி, நீலத்திரை கடல் ஓரத்திலே நித்தம் தவம் செய்யும் குமரி அன்னை, திருநெல்வேலியில் காந்திமதி, சங்கரன்கோவில் கோமதி. இந்த வரிசையில் செக்கிழுத்த செம்மல் செந்தமிழில் புகழ்ந்து பாடிய கோயில்புரியாம் கோவில்பட்டியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை செண்பகவல்லியின் அருள் அளவிடற்கரியது.

பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரமன், இத்திருத்தலத்தில் லிங்கத் திருமேனியுடன் பூவனநாதராகப் பக்தர்களுக்கெல்லாம் பேரருள் புரிந்து வருகிறார். பொன்மலை களாக்காட்டிடையே தோன்றிய மூர்த்தி என்பதால் இவருக்கு ‘களாவனநாதர்’ என்ற திருநாமமும் உண்டு.

ஆலய அமைப்பு

இத்திருக்கோவில் இறைவனும் இறைவியும் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி, கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சுவாமி- அம்பாள் இருவருக்கும் தனித் தனி திருவாசல்கள் அமைந்திருப்பது சிறப்பு. இதில் அம்பாள் திருவாசலில் சுவாமி அம்பாள் திருமணக் காட்சியுடன் கூடிய எழில் கொஞ்சும் சிறிய சாலைக்கோபுரம் உள்ளது. சுவாமி திருவாசலின் முன்பாக ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் கண்கொள்ளாக் காட்சி தருகிறது. அம்மன் சன்னிதி குடவரை வாசலில் தென்புறம் பஞ்சமிகு விநாயகர் சன்னிதியும், வடபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகர் சன்னிதியும் உள்ளன.

செண்பகவல்லி அம்மனின் சன்னிதி முன்புறம் அமைந்துள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் கடந்து செல்லும் வழியில், கருவறையின் இருபுறமும் துவார சக்திகள் உள்ளனர். அவற்றின் தென்புறம் விநாயகரும், வடபுறம் பாலசுப்பிரமணியரும் உள்ளனர். அம்பாள் சன்னிதி கருவறையின் பின்புறம் கிரியா சக்தி பீடமும், வடபுறம் சண்டிகேஸ்வரியின் தனி சன்னிதியும் உள்ளன. அம்பாள் திருக்கோவிலை அடுத்துள்ள தெற்குப் பலிச்சுற்றில் தென்கிழக்கு மூலையில் மடப்பள்ளியும், அதனை அடுத்து உக்கிராண அறையும் உள்ளன.

சுவாமி, அம்பாள் திருக்கோவில்களுக்கு நடுவே உற்சவமூர்த்திகள் சன்னிதி காணப்படுகின்றன. அதன் முன்புறம் கொலுமண்டபம் இருக்கிறது. பழங்காலத்தில் இந்த சன்னிதி பாலசுப்பிரமணியருக்கு தனி சன்னிதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. கொலுமண்டபத்தின் முன்புறம் அம்பாள் சன்னிதி கொடிமரத்தை அடுத்து, ஆலய தல விருட்சமான களா மரம் உள்ளது. இத்திருக்கோவில் வளாகத்தினுள் 32 சிறிய பலிபீடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தல இறைவனையும், இறைவியையும் வழிபட்டு வந்தால் தீராத பிணியெல்லாம் தீரும். எல்லா செல்வமும் நம்மை வந்து சேரும், பூவனநாதரை வேண்டி அபிஷேகம் செய்து வழிபட்டால் செய்த பாவங் களுக்கு புண்ணியம் கொடுப்பார் என்பது ஐதீகம்.

அமைவிடம்

தூத்துக்குடி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து அடிக்கடி கோவில்பட்டிக்கு பேருந்துகள் உள்ளன. அதைப்போல் குறிப்பிட்ட நேரங்களில் ெரயில் வசதிகளும் உள்ளன.

-பொ.ஜெயச்சந்திரன்