உங்கள் துக்கங்களை மாற்றும் தேவன்
இப்பூவுலகில் வாழும் மாந்தர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் ஏதாவது ஒரு நேரத்தில், ஏதாவது ஒரு விஷயத்தில் அல்லல்பட்டு வேதனைப்படுகிறது உண்டு.
அவர்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்து கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது உண்டு.
எங்கள் துக்கங்களை யார் போக்குவார்?, எங்கள் கண்ணீரை யார் துடைப்பார்?, எங்களுக்கு யார் உதவி செய்வார்?, எங்கள் பிரச்சினைகளும் போராட்டங்களும் எப்பொழுதுதான் தீருமோ? என்று கலங்கி தவித்து புலம்புவது உண்டு.
இப்படி மனுக்குலம் புலம்பி தவித்து வேதனைப்படுகிறதற்கு பலவித காரணங்கள் உண்டு. சிலருக்கு கடன்களின் நிமித்தம் வருகிற துக்கம், சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என்கிற துக்கம், சிலருக்கு அவர்கள் மிகவும் நேசித்த நபர் இப்பூவுலகத்தை விட்டு கடந்து போனதினிமித்தம் ஏற்பட்ட துக்கம், சிலருக்கு தங்கள் கணவர், சம்பாதித்த பணத்தையெல்லாம் குடித்தே செலவு செய்கிறாரே என்கிற துக்கம்.
சிலருக்கு தங்கள் பிள்ளைகள் நன்றாக ஒழுக்கத்தில் வளரவில்லையே என்கிற துக்கம், சிலருக்கு, நான் என்ன செய்தாலும் அதில் ஒரு முன்னேற்றம் இல்லையே, தொழில்கள், வியாபாரங்கள் முடங்கி விட்டதே என்கிற துக்கம், சிலருக்கு சரீரத்தில் உள்ள வியாதிகள், பலவீனத்தினால் ஏற்படுகிற சரீரப் பிரயாசமனிமித்தம் உள்ள துக்கம், தங்கள் பணம் எல்லாம் மருத்துவமனைக்கே செலவு செய்கிறோமே என்கிற துக்கம்... இப்படி துக்கங்களை குறித்து எழுதிக்கொண்டே போகலாம்.
இப்படி துக்கத்தில் சிக்கி தவித்து கண்ணீரோடு வாழுகிற மனுக்குலத்தை இரட்சித்து காப்பாற்றவே இயேசு பிரான் பூமிக்கு மனு அவதாரம் எடுத்து வந்தார். ஆகவேதான் திருமறை கூறுகிறது அவர் உலக இரட்சகர் என்று.
அவர் பூமியில் வாழ்ந்து, மனுக்குல மீட்பிற்காக அநேக சொற்பொழிவுகளை ஆற்றி அவர் பரிசுத்தமான ஒரு வாழ்க்கை வாழ்ந்து சிலுவையில் தன் ஜீவனை விட்டு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த தெய்வம்.
அவர் தன் சொற்பொழிவுகளிலே இப்படி திருவுள்ளம் பற்றினார். “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். (யோவான் 16:20). மெய்யாகவே இதை வாசிக்கின்ற உங்களுடைய துக்கத்தை மாற்றும் சர்வ வல்ல தேவனவர்.
பரிசுத்த வேதகாமத்திலே அன்னாள் என்கிற ஒரு சகோதரியின் வாழ்க்கை வரலாறு சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த அன்னாளுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை என்கின்ற வேதனை கண்ணீர். குழந்தை பாக்கியம் இல்லையென்கிறத்தினிமித்தம் அவளை ‘மலடி’ என்கிற வார்த்தையினால் அவளுக்கு மலடி பட்டம் கட்டினர் ஜனங்கள்.
இந்த துக்கம் தாங்காமல் வேதனையின் மிகுதியினால் அவள் தேவாலயத்திற்கு சென்று தன் இருதயத்திலுள்ள பாரங்களை, வேதனைகளை கண்ணீராக வடித்து ஊற்றினார். இறுதியாக அவள் இப்படி ஒரு பொருத்தனை செய்தாள் கடவுளிடம்.
‘என் ஆண்டவரே, நீர் எனக்கு ஒரு ஆண் குழந்தையை கொடுத்தால் அதை நான் உமக்கே திரும்ப கொடுக்கிறேன் என்று’. அதாவது கடவுளின் தொண்டு செய்வதற்கு கடவுளுடைய தேவாலயத்தில் ஒப்படைத்து விடுகிறேன் என்று.
கடவுள் அவளுடைய ஜெபத்தை கேட்டார், அவளுடைய கண்ணீரை கண்டார், அவளுக்கு அழகான ஒரு ஆண் குழந்தையை கட்டளையிட்டார். அவளுடைய துக்கம் மாறி சந்தோஷம் அடைந்தாள்.
இதை வாசிக்கின்ற எனக்கருமையானவர்களே, உங்களுடைய குறைவு என்ன? உங்களுடைய துக்கம் என்ன? இன்றே கடவுளிடம் தெரிவியுங்கள். அன்னாளைப் போல் தேவாலயத்தில் சென்று தான் பிரார்த்தனை செய்யவேண்டும் என்கிற அவசியம் இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்கள் இருதயத்தில் உள்ள கவலைகளை, துக்கங்களை தெய்வத்திடம் தெரிவியுங்கள். நிச்சயம் கடவுள் உங்களுக்கு அற்புதம் செய்வார்.
ஆம், உங்களுக்காக ஜீவனையே கொடுத்த தெய்வம் அல்லவா?. அவர் கூறினார்: ‘என் நாமத்தினாலே நீங்கள் எதை கேட்டாலும் அதை நான் செய்வேன்’ என்று (யோவான் 14:14). ‘நிச்சயமாய் உங்களுக்கு ஒரு அற்புதம் நடக்கும், நிச்சயமாகவே முடிவு உண்டு. உன் நம்பிக்கை வீண் போகாது’ (நீதி 23:18) என்று திருமறையில் எழுதப்பட்டுள்ளது.
இந்த வார்த்தையின் படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் பிரார்த்தனைகளை கேட்டு உங்களுக்கு நன்மை செய்வார். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். ஆமென்.
- சகோ. சி. சதீஷ், வால்பாறை.
Related Tags :
Next Story