இறைவன் தரும் சோதனைகளின் பொழுது...


இறைவன் தரும் சோதனைகளின் பொழுது...
x
தினத்தந்தி 26 Oct 2018 2:30 AM GMT (Updated: 25 Oct 2018 11:22 AM GMT)

மனிதர்களைப் படைத்த இறைவன், மனிதர்கள் நன்றியுள்ளவர்களாக நடந்து கொள்கிறார்களா என்பதற்காகவும், எந்நிலையிலும் அவனை மட்டுமே சார்ந்திருக்கிறார்களா என்பதற்காகவும், அவர்களை, பல வழிகளில் சோதித்துப் பார்க்கிறான்.

நமக்கு அருளியுள்ள பொருட்செல்வத்தின் மூலமாகவும், குழந்தைச்செல்வத்தின் மூலமாகவும் நம்மை, நம் நம்பிக்கையைப் பரிசோதிக்கிறான். இச்செல்வங்கள் குறைவாகக் கொடுக்கப்பட்டிருப்பது மட்டுமல்ல, நிறைவாகக் கொடுக்கப்பட்டிருப்பதும் சோதனைதான்.

செல்வம் குறைவாகக் கொடுக்கப்பட்டவர்கள், தங்கள் வறுமை நிலையிலும் இறைவன் தங்களுக்கு அளித்திருப்பவைகளைக் கொண்டும், தங்கள் மீதான இறைவனின் கருணை குறித்தும் திருப்தி கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். தங்களின் முழு நம்பிக்கையையும் இறைவனின் மீதே வைத்து தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.

இன்னும் இறைப்பொருத்தத்தை வேண்டி தங்களால் முடிந்த நல்ல காரியங்களை செய்யக்கூடியவர்களாக இருக்க வேண்டும். இல்லை, இல்லை என்று குறைபட்டுக் கொண்டிருப்பவர்களின் வாழ்க்கை என்றுமே நிறைவாக இருக்காது என்பதுடன், அவர்கள் நிம்மதி இன்றித் தவித்துக் கொண்டிருப்பர்.

செல்வம் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டிருப்பது மற்றவர் பார்வைக்கு பெரிதாகத் தோன்றலாம். ஆனால் செல்வம் கொடுக்கப்பட்டவர் களுக்கு இறைவனின் கேள்விக்கணக்கு அதிகமாக இருக்கும். இறைவன் அளித்தவற்றிலிருந்து, இறைவனின் பாதையில் செலவழிக்காதவர்களுக்கு தண்டனை கடுமையாக இருக்கும்.

குழந்தைகள் இல்லாமலிருப்பது ஒரு சோதனை என்றால், குழந்தைகள் இருப்பதும் சோதனையாகத்தான் நம் மீது ஏவப்பட்டுள்ளது. எத்தனையோ பெற்றோர்கள் தாம் பெற்ற குழந்தைகளால் மனம் வெறுத்து, நொந்து போயிருக்கிறார்கள் என்பதை நாம் அறிவோம்.

இது மட்டுமின்றி அருட்கொடையாக இறைவன் வழங்கிய குழந்தைகளை தாங்கள் என்றுமே எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் இழந்து தவிக்கும் பெற்றோர்களையும் நாம் பார்க்கிறோம்.

நம் செல்வத்தை இழந்தாலும் சரி அல்லது எல்லா செல்வங்களுக்கும் மேலான குழந்தைகளை இழந்தாலும் சரி, நாம் பொறுமையை மேற்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயர்ந்த கூலி உண்டு என்பதை அல்லாஹ் தன் திருமறையில் வாக்களிக்கிறான்.

இன்னும் இப்படிப்பட்ட இழப்புகளின் போது இவ்வுலக வாழ்வில் அனைத்தும் அழியக்கூடியவையே என்றும், என்றுமே நிலையான செல்வம் அவனிடமே உள்ளன என்பதை நாம் அறியக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

‘’நிச்சயமாக, ‘உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில்தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்’’. (திருக்குர்ஆன் 8:28).

பொருட்சேதம், உயிர்சேதம், நோய், விபத்து போன்ற எண்ணற்ற சோதனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. அதுவும் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் இவை ஏற்படுவது இறைவனின் புறத்தில் இருந்து, அவன் நாடுவதால்தான் நிகழ்கிறது.

இத்தகைய சோதனைகளின் போது யார் ஒருவர் பொறுமையுடனும், இறைவனிடம் உதவி தேடிக்கொண்டும் இருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் நற்கூலியை வழங்குகிறான்.

“(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவைகளைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நீங்கள் நற்செய்தி கூறுங்கள்”. (திருக்குர்ஆன் 2:155).

“(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்களுக்கு எத்தகைய துன்பம் ஏற்பட்டபோதிலும், ‘’நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சயமாக நாம் அவனிடமே மீளுவோம்’’ எனக் கூறுவார்கள்”. (திருக்குர்ஆன் 2:156).

இன்னும் அல்லாஹ் தன் திருமறையில், சோதனைகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தன்னிடம் மகத்தான கூலி உள்ளதாகக் கூறுகிறான்.
மனிதர்கள் பலவீனமானவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். இந்த பலவீனத்தை சைத்தான் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளவே முற்படுவான்.

சோதனைகளின் போது மனிதர்களின் மனதில் வீணான எண்ணங்களை உருவாக்கி, இறைவனுக்கு மாறுசெய்யத் தூண்டுவான். நிராசையை ஏற்படுத்துவான். இன்னும் இறைவனின் மீதுள்ள நம்பிக்கையை சிதைத்து, நிந்திக்கத் தூண்டுவான்.

இம்மாதிரியான சந்தர்ப்பத்தில் ஒரு மனிதன், ‘இந்த சோதனை என் இறைவனிடம் இருந்தே வந்துள்ளது, இதில் எனக்கு நிச்சயமாக ஒரு நன்மையை நாடியிருப்பான்’ என்று உறுதியாக நம்பி, ‘நாம் இறைவனிடம் இருந்தே வந்திருக்கிறோம், இன்னும் அவனிடமே திரும்பிச்செல்ல வேண்டியிருக்கிறது’ என்றும், ‘நான் இழந்ததற்கு ஈடாக அதைப் போன்றோ அல்லது அதை விடச் சிறந்ததை எனக்குத் தருவதற்கு என் இறைவனே போதுமானவன்’ என்று அவனிடமே தன்னையும், தன்னுடைய காரியங்களையும் ஒப்படைத்து விட்டு பொறுமையுடன் காத்திருப்பது இறைவனுக்கு மிகவும் உவப்பைத் தரும்.

மேலும், வேறொரு வெகுமதியின் மூலம் அந்த மனிதருக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் இறைவன் தருவான், இன்ஷாஅல்லாஹ். இப்படிப்பட்ட மனிதர்கள் இறைவனின் சோதனையில் தேர்ச்சி பெற்று விட்டார்கள் என்று கொள்ளலாம்.

‘உங்களுடைய பொருள்களும், உங்களுடைய சந்ததி களும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கின்றது’ (திருக்குர்ஆன் 64:15).

சோதனைகள் ஏற்படும் காலங்களில் நபிமார்களையும், இறுதித்தூதர் நபி (ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இன்ஷாஅல்லாஹ், யாரெல்லாம் அதிகமாக சோதிக்கப்பட்டு, சோதனைகளில் வெற்றியும் பெறுகிறார்களோ அவர்களுக்கு, மறுமை வாழ்வை அல்லாஹ் இலேசாக்கித் தருவான். இவ்வுலகில் அவர்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சோதனையும் அவர்களைப் புடம் போடுகிறது. வாழ்க்கையைப் பற்றிய தெளிவான புரிதலை ஏற்படுத்துகிறது.

கடுமையான சோதனைகளும், அனுபவங்களும் அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருங்கச் செய்யும். அவனின் மீதான, மறுமையின் மீதான அச்சத்தை அதிகரிக்கும். இவ்வுலகில் சோதனைகளுக்கு ஆட்பட்டதால் மறுமை வாழ்வில் தன்னுடைய சோதனைகள் குறைக்கப்படும் என்ற ஆறுதல் அடியானின் மனதில் ஏற்படுகிறது.

மறுமை வாழ்வை மட்டுமின்றி, தொடர்ந்து சோதனைகளைத் தராமல் இவ்வுலக வாழ்க்கையையும் அல்லாஹ் இலேசாக்கித் தருவான் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.

- ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை-84

Next Story