ஆன்மிகம்

முக்தியை வழங்கும் நவ கயிலாயம் + "||" + Nava Kayilayam

முக்தியை வழங்கும் நவ கயிலாயம்

முக்தியை வழங்கும் நவ கயிலாயம்
சிவபெருமான் வீற்றிருக்கும் இடத்தினை ‘கயிலாயம்’ என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. நம் நாட்டில் கயிலாயத்திற்கு ஒப்பான திருத்தலங்கள் பல இருக்கின்றன.
தென் மாவட்டங்களில் நவ கயிலாயங்கள் எனப்படும் ஒன்பது ஆலயங்கள் சிறப்பு வாய்ந்தவையாக பார்க்கப்படுகின்றன. இந்த ஒன்பது சிவாலயங்களையும் வழிபடும் பக்தர்களுக்கு, ஆரோக்கியமும், செல்வவளமும் கிடைப்பதாக சொல்லப்படுகிறது.

தென் தமிழகத்தின் எல்லையாகவும், சிறப்புகளில் ஒன்றாகவும் திகழ்வது பொதிகை மலை. அங்கு அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் ‘மீண்டும் பிறவாத வரம் வேண்டி’ (முக்தி வேண்டி) சிவ பெருமானை வணங்கி வந்தார். இதை அறிந்த அகத்திய முனிவர் ‘தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு, பின்னர் நவக்கோள் வரிசையில் சிவனை வணங்க வேண்டும்’ என்று உரோமச முனிவருக்கு ஆலோசனை வழங்கினார்.

அதோடு நவகோள்களின் வரிசையை அறிவதற்காக ஒன்பது மலர்களை ஆற்றில் விட்டு, இவை எந்தெந்த கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவலிங்கத்தை வைத்து வழிபடுமாறும் அகத்தியர் அறிவுறுத்தினார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்தார். ஒன்பது மலர்களில் முதல் மலர் பாபநாசத்திலும் (சூரியதலம்), இரண்டாவது மலர் சேரன்மாதேவியிலும் (சந்திரன்), மூன்றாவது மலர் கோடகநல்லூரிலும் (செவ்வாய்), நான்காவது மலர் குன்னத்தூரிலும் (ராகு), ஐந்தாவது மலர் முறப்பநாட்டிலும் (குரு), ஆறாவது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும் (சனி), ஏழாவது மலர் தென் திருப்பேரையிலும் (புதன்), எட்டாவது மலர் ராஜபதியிலும் (கேது), ஒன்பதாவது மலர் சேர்ந்தபூமங்கலத்திலும் (சுக்ரன்) கரை ஒதுங்கியது. இந்த ஒன்பது இடங்களுமே இப்போது நவ கயிலாயங்களாக பக்தி மணம் வீசி வருகின்றன.

இந்த ஒன்பது ஆலயங்களையும் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்க்கலாம்.

சூரிய தலம்

தலம்: பாபநாசம்

அம்சம்: சூரியன்

நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்

மூலவர்: பாபநாசர் என்ற கயிலாயநாதர்

அம்பாள்: உலகாம்பிகை

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோமீட்டர் தொலைவில் பாபநாசம் உள்ளது.

சந்திர தலம்

தலம்: சேரன்மாதேவி

அம்சம்: சந்திரன்

நட்சத்திரம்: ரோகிணி, ஹஸ்தம், திருவோணம்

மூலவர்: அம்மைநாதர்

அம்பாள்: ஆவுடைநாயகி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சேரன்மாதேவி.

செவ்வாய் தலம்

தலம்: கோடகநல்லூர்

அம்சம்: செவ்வாய்

நட்சத்திரம்: மிருகசிரீஷம், சித்திரை, அவிட்டம்

மூலவர்: கயிலாயநாதர்

அம்பாள்: சிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே, ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோடக நல்லூர் இருக்கிறது.

புதன் தலம்

தலம்: தென் திருப்பேரை

அம்சம்: புதன்

நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி

மூலவர்: கயிலாயநாதர்

அம்பாள்: அழகிய பொன்னம்மை

இருப்பிடம்: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் தென்திருப்பேரை உள்ளது.

குரு தலம்

தலம்: முறப்பநாடு

அம்சம்: வியாழன் (குரு)

நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

மூலவர்: கயிலாயநாதர்

அம்பாள்: சிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலை வில் முறப்பநாடு இருக்கிறது.

சுக்ரன் தலம்

தலம்: சேர்ந்தபூமங்கலம் (சேர்ந்தமங்கலம்)

அம்சம்: சுக்ரன்

நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம்

மூலவர்: கயிலாயநாதர்

அம்பாள்: சவுந்தர்ய நாயகி

இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில், ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் சேர்ந்தபூமங்கலம் என்ற ஊர் அமைந்துள்ளது.

சனி தலம்

தலம்: ஸ்ரீவைகுண்டம்

அம்சம்: சனி

நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி

மூலவர்: கயிலாயநாதர்

அம்பாள்: சிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது.

கேது தலம்

தலம்: ராஜபதி

அம்சம்: கேது

நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம்

மூலவர்: கயிலாயநாதர்

அம்பாள்: அழகிய பொன்னம்மை என்ற சிவகாமி

இருப்பிடம்: தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை கோவிலில் இருந்து, அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் ராஜபதி உள்ளது.

ராகு தலம்

தலம்: குன்னத்தூர் (சங்காணி)

அம்சம்: ராகு

நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்

மூலவர்: கோத்த பரமேஸ்வரர் என்ற கயிலாயநாதர்

அம்பாள்: சிவகாமி

இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது குன்னத்தூர். இந்த இடம் சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

இந்த ஒன்பது ஆலயங்களையும், ஒரே நாளில் தரிசனம் செய்து வந்தால், கயிலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமின்றி இந்த நவ கயிலாயங்களையும் தரிசனம் செய்தால், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்தி நிலையை அடையலாம் என்பதும் ஐதீகம்.

-கடகம் ராமசாமி