சிறப்புகள் மிகுந்த சிதம்பரம்


சிறப்புகள் மிகுந்த சிதம்பரம்
x
தினத்தந்தி 1 Nov 2018 10:30 PM GMT (Updated: 1 Nov 2018 9:59 AM GMT)

ஆன்மிக ரீதியாக சிவபெருமானின் பஞ்ச பூத தலங்கள் இருக்கின்றன.

 காஞ்சீபுரம் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (நெருப்பு), சிதம்பரம் (ஆகாயம்).

 பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது. பஞ்சபூத தலங்களை வழிபட விரும்புபவர்கள், அந்த பயணத்தை சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது.

 சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது, சிதம்பரம் நடராஜர் ஆலயம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளை கொண்ட அற்புத தலம் இது.

 இங்குள்ள நடராஜ பெருமானின் சன்னிதிக்கான, கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

 இத்தலத்தில் நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் இறைவன் அருள்பாலிக்கிறார். நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங் களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.

 சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி, தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

 திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சிதம்பரம் திருத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். எனவே அந்த நால்வரின் குரு பூஜையும், இந்த ஆலயத்தில் பெரிய திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

 சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழா மிகவும் முக்கியமானது.

 முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, நட ராஜரை துதித்து வழிபடுவார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுப்பாராம்.

 சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் ‘காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகிறது.

 சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்த்த குளம் அருகில் சிறு தூண் நடப்பட்டிருக்கும். அங்கிருந்து பார்த்தால், ஆலயத்தின் 4 ராஜ கோபுரங்களையும் தரிசிக்க முடியும்.

 சிதம்பரம் ஆலயம் என்றதுமே நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, அந்த ஆலயத்தின் மூலவர் நடராஜர் என்பதாகத்தான் நினைப்பு வரும். அனைவரும் ஆலயத்திற்குள் நுழைந்ததும் நடராஜரைத் தேடியே ஓடுவார்கள். ஆனால் உண்மையில் இந்த ஆலயத்தின் மூலவர், லிங்க வடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

Next Story