அமாவாசையையொட்டி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்


அமாவாசையையொட்டி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள்
x
தினத்தந்தி 7 Nov 2018 10:30 PM GMT (Updated: 7 Nov 2018 8:36 PM GMT)

ஐப்பசி மாத அமாவாசையையொட்டி அமணலிங்கேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.

தளி,

உடுமலை அருகே திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார்கள். இங்குள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும், மும்மூர்த்திகளை தரிசனம் செய்யவும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.

அமணலிங்கேஸ்வரர் கோவிலில் மகாசிவராத்திரி, பிரதோஷம், கிருத்திகை, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் மும்மூர்த்திகளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களில் மட்டுமின்றி, வெளியூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களும் திருமூர்த்திமலைக்கு வருகை தருவார்கள்.

இந்த நிலையில் நேற்று ஐப்பசி மாத அமாவாசையையொட்டி மும்மூர்த்திகள், விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் உள்ளிட்ட கடவுள்களுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருமூர்த்திலைக்கு வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

அதைத் தொடர்ந்து மலைமீதுள்ள பஞ்சலிங்க அருவிக்கு சென்று உற்சாகத்தோடு குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அடிவாரப்பகுதியில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கலந்து கொண்டனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. மேலும் அமாவாசையை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் உடுமலையில் இருந்து திருமூர்த்திமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதே போன்று உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோடந்தூர் கட்டளை மாரியம்மன் கோவிலும் அமாவாசை பூஜை நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story