ஆன்மிகம்

நலம் அருளும் நடு பழனி நாதன் + "||" + Gives wellness Nadu Palani Nathan

நலம் அருளும் நடு பழனி நாதன்

நலம் அருளும் நடு பழனி நாதன்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.
முத்துசுவாமி சித்தரால் எழுப்பப்பட்ட மலைக்கோவில், நடுபழனி என காஞ்சிப் பெரியவரால் பெயர் சூட்டப்பட்டத் தலம், மரகத மூலவரைக் கொண்டு விளங்கும் திருக்கோவில், மணப்பேறு, மகப்பேறு அருளும் ஆலயம், 45 அடி உயர முருகன் சிலை கொண்ட கோவில் என பல்வேறு சிறப்புகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, காஞ்சீபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள, நடுபழனி தண்டாயுதபாணி திருக்கோவில்.


தல வரலாறு

சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு, பொள்ளாச்சியைச் சார்ந்த முத்துசுவாமி என்ற மிராசுதாரர், முருகப்பெருமானின் திருவருளால் வடஇந்திய யாத்திரையை முடித்து, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெரும்பேர் கண்டிகை என்ற திருப்புகழ் தலத்திற்கு வந்தார். மலை மீது சுமார் நான்கு ஆண்டுகள் தவமிருந்தார்.

அங்கு தங்கியிருந்த காலத்தில் அவரது கனவில் குழந்தை வடிவத்தில் தோன்றிய முருகப்பெருமான், ‘பெருங்கரணையில் உள்ள மலையில் எனக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டார்.

அதன்படி, அச்சிறுபாக்கம் அருகேயுள்ள பெருங் கரணை ஊரில் உள்ள மலையைக் கண்டறிந்தார். அதன் உச்சியில் வேலாயுதத்தை நிறுவி வழிபாடு செய்யத் தொடங்கினார். செடிகள், பாறைக் கற் களைச் சரிசெய்து, அதன்பிறகு அங்கேயே முருகன் சிலையை வைத்து சிறிய கொட்டகை அமைத்து வழிபாடு தொடங்கினார். இதற்கு ஊர் மக்கள் பெரும் ஒத்துழைப்பு தந்தனர்.

ஒருநாள் பெருத்த மழையால் கீற்றுக்கொட்டகை விழுந்துவிட, தனி ஆலயம் எழுப்ப தீர்மானித்து, சிறிய ஆலயம் எழுப்பினர். இந்த மலையைச் சீரமைக்க முத்துசுவாமி சித்தர் பெரும்பாடுபட்டுள்ளார். அருகில் உள்ள ஊர்களுக்கு காவடியெடுத்து ஆடி, அவர்கள் தரும் அரிசி உள்ளிட்ட காணிக்கைகளைப் பெற்றார். அதனைக் கொண்டு மலையைச் சீரமைக்கும் பணியாட்களுக்குச் சமைத்து தந்தார். பக்தர்கள் தரும் காணிக்கைகளைத் திருப்பணிக்கு பயன்படுத்தினார். எவரிடமும் கையேந்தி நன்கொடை கேட்டதில்லை. குறையோடு வருபவர்களுக்கு திருநீறு தந்து குணமாக்கும் வல்லமையும், முத்துசுவாமி சித்தருக்கு முருகன் திருவருளால் கிடைத்துள்ளது. இப்படி முத்துசுவாமி சித்தரின் ஐம்பது ஆண்டு கால உழைப்பில் உருவானதே நடுபழனி திருக்கோவில்.

இந்த சமயத்தில் காஞ்சிப் பெரியவர் ஒருமுறை வருகை தந்தார். அவருக்கு இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமான், பழனி பாலதண்டாயுத பாணியாகவே காட்சி தர, இந்தத் தலத்தை ‘நடு பழனி’ என்று அழைத்தார் காஞ்சிப் பெரியவர். அதன்பிறகு, முருகப்பெரு மானின் மூலவர் சிலையை, மரகத சிலையாக வடித்து, புதிய தண்டாயுதபாணியாக பிரதிஷ்டை செய்து, 1993-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தமது பூவுலக நிறைவுக்காலம் வருவதை உணர்ந்த முத்துசுவாமிகளின் கனவில், மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் உருவம் வந்தது. அதே போல் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் கனவில், முத்துசுவாமி சித்தரின் உருவம் தோன்றியிருக்கிறது. அதன்பிறகு ஒரு முறை நடுபழனிக்கு, மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகள் வருகை தந்தார். அவரைக் கண்ட முத்துசுவாமி சித்தருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. இருவரும் தங்களுக்கு தோன்றிய கனவைப் பற்றி பேசிக்கொண்டனர். அப்போதுதான் இருவருக்குமே ஒரே நேரத்தில் இதுபோன்ற கனவு வந்திருப்பது தெரியவந்தது.ஆலய அமைப்பு

நடுபழனி மலை, பசுமையான பெருங்கரணை கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 300 அடி உயரமுள்ள கனக மலையான நடுபழனி, வடக்கில் 128 படிகள் கொண்டு மலையேற வசதியாக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. மேற்குப்புறம் வாகனங்கள் மலையேறும் சாலை வசதியும் இருக்கிறது. அங்கே மலேசியாவில் பத்துமலைப் பகுதியில் உள்ள முருகப்பெருமான் சிலையைப் போலவே, 45 அடி உயர முருகப்பெருமான் கம்பீரமாய் மேற்கு நோக்கி காட்சியளிக்கின்றார். மலை உச்சியில் இந்த கோவில் உருவாக மூலக்காரணமான முத்துசுவாமி சித்தரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அவரது சமாதி முன்மண்டபத்தோடு எழிலாக ஆலய வடிவில் கட்டப்பட்டுள்ளது.

சற்று மேலே இடும்பன் சன்னிதியைக் கடந்து சில படிகள் ஏறினால், நடுபழனி முருகன் ஆலயம் கிழக்கு முகமாய் காட்சி தருகின்றது. கணபதி, தத்தாத்ரேயர் சன்னிதிகள் சுற்றி அமைந் திருக்க, நடுநாயகமாக மரகதக் கல்லால் ஆன தண்டாயுதபாணி கிழக்கு நோக்கியபடி அருள்காட்சி தருகிறார். இவரின் வடிவம் நமக்கு பழனி மலையில் இருக்கும் பாலதண்டாயுதபாணியின் உருவத்தை நினைவுபடுத்துகிறது.

ஆலய மகாமண்டபத்தின் இடதுபுறம் வள்ளி- தெய்வானை சமேத சண்முகப்பெருமான், வலது புறம் விநாயகர், பிரம்மன், விஷ்ணு, ருத்திரன் வடிவமான தத்தாத்ரேயர், நாக தத்தாத்ரேயர், லட்சுமி, சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகா லட்சுமி, உற்சவர் விநாயகர், வள்ளி- தெய்வானை சமேத சுப்பிர மணியர் சிலா வடிவங்கள் அமைந்துள்ளன. மலை அடிவாரத்தில் விநாயகர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள், ராஜேஸ்வரி அம்மன், நவக்கிரகங்கள் சன்னிதி அமைந்துள்ளன.

சுவாமிகளின் நெருங்கிய நண்பராக விளங்கிய முறப்பாக்கம் சுவாமிகளின் சமாதி மலையடிவாரத்தில், நவக்கிரக சன்னிதி அருகே அமைந்துள்ளது. இதனை சுவாமிகளே செய்து முடித்தார். இத்தலம் திருமண வரம், குழந்தை வரம் அருளும் தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. தொடர்ந்து 6 செவ்வாய்க் கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பவருக்கும் பக்தர்களுக்கு, கைமேல் பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

விழாக்கள்

இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரத் திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. சஷ்டி உற்சவம் மற்றும் திருக்கல்யாணம், கார்த்திகை மாதம் கார்த்திகை தீபத்திருநாள், முத்துசுவாமி சித்தர் குருபூஜை வெகு சிறப்பாக நடைபெறுகிறது. இது தவிர, முருகனுக்குரிய கிருத்திகை உள்ளிட்ட விழாக்கள் சிறப்புடன் நடத்தப்படுகிறது. பவுர்ணமி தோறும் கிரிவலம் நடக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் தரி சனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம்

காஞ்சீபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா பெருங் கரணை கிராமத்தில் உள்ள சிறிய மலையே நடுபழனியாகும். மேல்மருவத்தூருக்குத் தெற்கே 2 கி.மீ. தூரத்தில் இடதுபுறம் முருகன் கோவில் வளைவு வரும். அதில் நுழைந்ததும் ரெயில் கிராசிங் வரும். அதில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது.

45 அடி உயர முருகன்

இம்மலையின் மேற்கு அடிவாரத்தில் 45 அடி உயர முருகன் சிலை, மலேசிய பத்துமலை முருகன் சிலையைப் போல அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை மைசூர் கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் அவதூத தத்த பீடத்தின் முயற்சியால் உருவாக்கப்பட்டு, சுவாமிகளின் திருக்கரங்களால் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்தச் சிலை கனகமலை எனும் நடுபழனியின் அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்திருக்கிறது.

எல்லப்ப சித்தர்

முத்துசுவாமி சித்தருக்கு முன்பாக, இம்மலை உச்சியில் எல்லப்ப சித்தர் என்பவர், வேல் ஒன்றை நிறுவி வழிபட்டு வந்ததாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இவரின் சமாதி, மலையடிவாரத்தில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. இங்கே, விரிவாக்கம் செய்த குளம், ஆலயத்தின் தீர்த்தக்குளமாக அமைந்துள்ளது.

முத்துசுவாமி சித்தர்

நடுபழனி தண்டாயுதபாணி மலைக்கோவிலை எழுப்பியவர் இவர்தான். இவர் முருகப்பெருமான் அருளால் பல சித்து விளையாட்டுகள் கை வரப்பெற்றிருந்தார். ஆனால் அந்த சக்திகளை எல்லாம் பக்தர்கள் நலம் பெறு வதற்காக மட்டுமே பயன்படுத்தினார். தன்னை நாடி வந்த அடியார்களுக்கு திருநீறு மட்டுமே தந்து அனைத்து வகை நோய் மற்றும் ஆபத்துக்களில் இருந்தும் காத்தருளியுள்ளதை பக்தர்கள் நினைவு கூருகின்றனர். இவர் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையில் வல்லவர் என்று இவரது சீடர்கள் பலரும் கூறுகின்றனர்.

- பனையபுரம் அதியமான்