ஆன்மிகம்

மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ‘திருவண்ணாமலை’ + "||" + The biggest Swayambu Sivalingam 'Thiruvannamalai'

மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ‘திருவண்ணாமலை’

மிகப்பெரிய சுயம்பு சிவலிங்கம் ‘திருவண்ணாமலை’
23-11-2018 திருக்கார்த்திகை தீபம்
“செங்கணானும் பிரம்மனும் தம்முள்ளே
எங்கும் தேடி திரிந்தவர் கான்கிலார்
இங்குற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான்
பொங்கு செஞ்சடை புண்ணிய மூர்த்தியே”

அப்பர் என்று அன்போடு அழைக்கப்படும் திரு நாவுக்கரசரின் இந்த திருமுறைப்பதிகமே, திருவண்ணாமலையின் வரலாற்றை அழகாக விளக்கி விடும்.

ரமண மகரிஷியை சந்தித்த அடியவர் ஒருவர், அவரை கயிலாய யாத்திரைக்கு அழைத்தார். அதைக் கேட்டு புன்சிரிப்பை உதிர்த்த ரமணர், ‘அங்கே அப்படி என்ன விசேஷம்?’ என்று கேட்டார்.

‘திருக்கயிலாய மலை சிவன் வசிக்கும் பூமி. சிவபெருமான்... பூத கணங்கள் சூழவும் ரிஷிகள் சூழவும் இருக்கும் இடம்’ என்று ரமணரிடம் கூறினார் அந்த அன்பர்.

அதற்கு ரமணர், ‘அன்பனே! கயிலாயம் சிவன் வசிக்கும் தலம். ஆனால் திருவண்ணாமலையில் இருக்கும் மலையே சிவன் தான். சிவபெருமான் இங்கே இருக்க, அவரின் வீட்டை போய் பார்த்து வருவானேன்?' என்றார்.

உண்மையை உணர்ந்த அந்த அன்பரும் திருக்கயிலாய யாத்திரையை விடுத்து, திருவண்ணாமலையை கிரிவலம் வந்து தொழுதார்.

ஆம்! இங்கு மலையே சிவபெருமான்தான்.

ஒருமுறை விஷ்ணுவும், பிரம்மாவும் தங்களில் யார் பெரியவர்? என்று வாதிட்டர். ஒரு கட்டத்தில் வாதம் சச்சரவில் முடிய, இருவரும் சிவபெருமானிடம் வந்து நின்றனர்.

ஈசனோ, ‘எமது அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறீர்களோ, அவர்களே பெரியவர்' என்று கூறி, இருவரின் நடுவிலும் பெரும் தூண் போன்று அருட் பெரும் ஜோதிப் பிழம்பாக எழுந்தருளினார்.

ஈசனின் அடியைத் தேடி வராக (பன்றி) உருவம் கொண்டு, பூமியைப் பிளந்தபடி விஷ்ணுவும், ஈசனின் முடியைத் தேடி அன்னமாக உருக்கொண்டு ஆகாயத்தில் பறந்தும் சென்றனர். பல ஆண்டுகள் பயணித்தும் இருவராலும் அடியையும், முடியையும் காணமுடியவில்லை. மகாவிஷ்ணு தோல்வியை ஒப்புக்கொண்டு திரும்பி விட்டார்.

ஆனால் பிரம்மனோ, ஈசனின் திருமுடியைக் காண முடியாமல், ஈசனின் சிரசில் இருந்து பல்லாயிரம் வருடங்களுக்கு முன் விழுந்து பயணித்துக்கொண்டிருந்த தாழம்பூவை பொய் சாட்சியாக தயார் செய்தார். தாழம்பூவும், பிரம்மன் ஈசனுடைய முடியைக் கண்டுவிட்டதாக பொய் சொன்னது. இதனால் கோபம் கொண்ட ஈசன், பொய்யுரைத்த பிரம்மனுக்கும், தாழம்பூவுக்கும் சாபமும், மஹாவிஷ்ணுவுக்கு அனுக்கிரகமும் செய்தார். சிவபெருமான் தோன்றிய அந்த ஜோதிப்பிழம்பு அக்னிமலையாய் நின்றது. விஷ்ணுவும், பிரம்மனும், அந்த அக்னி மலையை வணங்கி நின்றனர். இதையடுத்து மலை குளிர்ந்தது.

அதுகண்ட பிரம்மனும் விஷ்ணுவும், ‘பரம்பொருளே! யாரும் நெருங்க முடியாத அண்ணலாகிய தாங்கள், எங்கள் பொருட்டு இங்கு அக்னிமலையாய் ஆகி குளிர்ந்து உள்ளீர்கள். இந்த அண்டத்திலேயே மிகவும் பெரிய சுயம்பு சிவலிங்கம் இந்த அக்னி அண்ணாமலை தான். உமக்கு பூச்சொரிய அண்ணா மலையில் வளரும் மரங்களால்தான் முடியும். உமக்கு அபிஷேகம் செய்விக்க மழை மேகங்களால் தான் முடியும். உமக்கு ஆரத்தி எடுக்க சூரிய, சந்திரர்களால் தான் முடியும். எனவே கலியுகத்தில் மக்களும் உம்மை தீப, தூப அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டு பயனுறும் பொருட்டு சிறிய வடிவில் குறுகி சிவலிங்கமாக காட்சி கொடுக்க வேண்டும்' என்றனர்.

உடனே அண்ணாமலையின் கீழ்புறம் அழகிய சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டது. அந்த சிவலிங்கமே இன்று நாம் ஆலயத்தில் வழிபடும் அருணாசலேஸ்வரர் எனும் அண்ணாமலையார். இதையடுத்து தேவ சிற்பியான தேவதச்சன் அழகிய ஆலயம் எழுப்பினான். பின்னாளில் பற்பல மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டு இன்று ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங் களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது திருஅண்ணா மலையார் திருக்கோவில்.

திருவண்ணாமலை ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டு, மலையை வலம் செய்வது சிறப்பானதாகும். திருவண்ணா மலையை கிரிவலம் செய்ய முடியாத நிலையில் உள்ளவர்கள், திருவண்ணாமலை ஆலயத்தின் தலமரமான மகிழ மரத்தையும், அதனுடன் திருவண்ணாமலையார் நம்பொருட்டு எழுந்தருளி இருக்கும் கருவறையையும் இணைத்து ஏழு முறை ஆலய வலம் வந்து நிறைவு செய்வது சிறப்பு தரும்.

‘அண்ணுதல்' என்றால் ‘நெருங்குதல்’ எனப்பொருள். ‘அண்ணா' என்பதற்கு ‘நெருங்க முடியாதது’ எனப்பொருள். அதாவது, மகாவிஷ்ணுவும், பிரம்மனும் ஈசனின் அடியையும் முடியையும் நெருங்க முடியாத மலை என்பதால், இத்தலம் ‘திருஅண்ணாமலை’ ஆயிற்று.

பிரம்மனுக்கும், விஷ்ணுவுக்கும் அடிமுடி கண்டறியா வண்ணம் ஜோதிப்பிழம்பாய் சிவபெருமான் நின்று குளிர்ந்த உருவமே லிங்கோத்பவர் என்னும் வடிவாகும். இந்நிகழ்வு நடந்த நன்னாள் ‘மகா சிவராத்திரி’ என்று சொல்லப்படுகிறது. பழமையான சிவாலயங் களின் கருவறை கோஷ்டத்தில் மூலவரின் பின்புறம் இந்த லிங்கோத்பவர் வடிவம் இருக்கும். இந்த லிங்கோத்பவர், திருவண்ணாமலையாரே.

இன்னும் சில சிவாலயங்களின் கருவறை கோஷ்ட பின்புறத்தில் லிங்கோத்பவருக்கு பதிலாக ஈசனின் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் இருக்கும். அதாவது சிவபெருமானின் உடம்பின் இடது பாதியில் அன்னை உமையவள் பாகம்பிரியாளாய் இருக்கும் வடிவமே அது. இந்த அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய திருத்தலமும் திருவண்ணாமலை தான்.

திருவண்ணாமலையை நினைக்க முக்தி என்பது நந்தி பகவான் வாக்கு. அதற்கேற்ப, திருமாலும் பிரம்மனும் தேடியும் கண்டுபிடிக்க முடியாத அந்த சிவபெருமானை ஜோதிவடிவில் தீபநாளில் மலை உச்சியிலும், நம் நெஞ்சுக்குள்ளும் அன்பால் கண்டு தொழுவோம். ‘அன்பே சிவம்' என்பதை உணர்வோம்.

அமைவிடம்

விழுப்புரத்தில் இருந்தும், திண்டிவனத்தில் இருந்தும் சுமார் 63 கிலோ மீட்டர் தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது.

- சிவ.அ.விஜய் பெரியசுவாமி