சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ


சிவனுக்கு உகந்த நாகலிங்கப் பூ
x
தினத்தந்தி 21 Nov 2018 10:25 AM GMT (Updated: 21 Nov 2018 10:25 AM GMT)

சிவலிங்க பூஜைக்கு உதவும் பொருட்களில் வில்வம், தாமரை, செவ்வரளி போல நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப் பங்கு உண்டு.

நாகலிங்கப் பூவுக்கு 21 ரிஷிகள் தங்களுடைய தவ ஆற்றல்களை அளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 21 ரிஷிகளும், ‘மாத்ருகா ரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

நாகலிங்கப் பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறை சொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில் எடுத்தப் பின்னர், 21 பேருக்கு அன்னதானம் செய்ய வேண்டும். அப்படி 21 பேருக்கு அன்னதானம் செய்யும் போது, 21 மாத்ருகா ரிஷிகள் சூட்சுமமாக அந்த அன்னதானத்தைப் பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை. அதன் பிறகு தான் நமது கையில் இருக்கும் நாகலிங்கப் பூவை சிவலிங்கத்தின் தலையில் வைக்க வேண்டும்; இப்படிச் செய்தால் மட்டுமே நாகலிங்கப் பூவால் சிவலிங்கத்திற்கு பூஜை செய்த புண்ணியம் நமக்குக் கிட்டும்.

நாகலிங்கப் பூவை ஈசனுக்கு சாற்றி வழிபட்ட பிறகு, அது வாடியப் பின்னரும் கூட, நாம் குளித்து விட்டுத்தான் அதனை எடுக்க வேண்டும். வாடிய நாகலிங்கப் பூவை எடுத்து ஓடும் ஆற்றில் போட்டு விட வேண்டும். அல்லது கடலில் போட வேண்டும்.

நாகலிங்கப் பூவையே சிவலிங்கமாக எண்ணி வீட்டில் தினமும் பூஜை செய்யலாம். இப்படி ஒரு வழிபாட்டு முறை கலியுகத்தின் ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

சிவலிங்கத்திற்கு சாற்றிய நாகலிங்கப் பூவை, பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்கு கொண்டு வரவேண்டும். நமது வீட்டுப் பூஜை அறையில் சுவாமி படத்தின் முன்பாக அதனை வைத்துக்கொள்ள வேண்டும். நீண்டகாலமாக இருக்கும் நோய் தீரவோ அல்லது நீண்டகாலமாக இருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோ மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். நமது நோய் தீரும் வரை தினமும் வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லது தேவாரப் பாடல்கள் பாடி வழிபட வேண்டும். நமது வேண்டுதல்கள் நிறை வேறிய பிறகு, நாகலிங்கப் பூவை ஓடும் நதி அல்லது கடலில் போடலாம். அதுவரை அது எவ்வளவு காய்ந்து போனாலும், அதற்கு நமது வேண்டுதலை நிறைவேற்றும் சக்தி உண்டு.

Next Story