ஆசீர்வாதங்களைத்தரும் குடும்ப ஜெபம்


ஆசீர்வாதங்களைத்தரும் குடும்ப ஜெபம்
x
தினத்தந்தி 27 Nov 2018 10:14 AM GMT (Updated: 27 Nov 2018 10:14 AM GMT)

‘உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார், அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார், அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார், அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்’. (செப்பனியா 3:17)

பிரியமானவர்களே, உங்கள் வாழ்க்கையின் மையத்தில் அருமை ஆண்டவரை நீங்கள் வைக்க வேண்டும். அப்போது அவருடைய அளவற்ற ஆசீர்வாதங்களை நீங்கள் காண முடியும். நம்மில் அநேகர் குடும்பம், பிள்ளைகள், வேலை, தொழில், படிப்பு, நண்பர்கள், கடைசியில் ஆண்டவர் என தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு இடத்தை ஆண்டவருக்கு ஒதுக்கி விடுகிறார்கள்.

உங்களை உருவாக்கின சர்வ வல்லவருக்கு ஒரு மூலையை அல்ல, உங்கள் வாழ்வின் மையத்தில் அவரை வைக்க வேண்டும். அப்போது தான் அளவுகடந்த ஆசீர்வாதங்களை அவரிடத்திலிருந்து பெறமுடியும்.

பரிசுத்தம் பண்ணும்போது...

‘தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன். அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே, ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. (II கொரிந்தியர் 6:16,17)

ஆம், நம்முடைய தேவன் பரிசுத்தமுள்ளவர். ‘நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள்’ என I பேதுரு 1:16 கூறுகிறது. உங்கள் வாழ்வில் பரிசுத்தத்திற்கு முதலிடம் கொடுக்கும்போது உங்கள் மத்தியில் தங்கியிருக்கவும், உங்களுக்குள்ளே உலாவி வரவும் அவர் வல்லமை உள்ளவராய் இருக்கிறார்.

அன்றைக்கு யோசுவா ஜனங்களைப் பார்த்து ‘இன்று உங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். நாளைக்கு கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்’ என கூறியதை யோசுவா 3:5 ல் வாசிக்கிறோம்.

‘அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள், அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார்’. (நியாயாதிபதிகள் 10:16)

துதித்துப் பாடும்போது...

‘சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு, இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்’. (சகரியா 2:10)

நம்முடைய கர்த்தர் துதிகளின் மத்தியில் தங்கியிருக்கிறார். எங்கு துதி ஆராதனை இருக்கிறதோ அங்கு அவர் நடுவில் வருவார். அது மட்டுமல்ல, ‘என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்’. (யாத்திராகமம் 20:24)

நாம் கெம்பீரித்துப் பாடி தேவனைத் துதிக்கும்போது அவர் நம் நடுவில் தங்கியிருப்பது எத்தனை ஆசீர்வாதம்.

பவுலும் சீலாவும் நடு இரவில் கைகளும், கால்களும் கட்டப்பட்ட நிலையிலும் தேவனைப் பாடி துதித்தபடியால் அங்கு தம்முடைய வல்லமையோடு இறங்கி வந்தார். கட்டுகள் கழன்றது. சிறைச்சாலைக் கதவுகளும் திறந்தது. துதி ஆராதனைக்கு அவ்வளவு வல்லமையுண்டு.

மேலும், பாடித் துதிக்கும்போது நம் நடுவில் அவர் இறங்கி வருவாரென்றால் நமக்கு விரோதமாய் வருகிற சகல எதிரிகளையும் அசுத்த ஆவிகளையும் அவர் விரட்டி நமக்காக யுத்தம் செய்யவும் சத்துருவை மடங்கடிக்கவும் வல்லவராயிருக்கிறார். ஆகவே அவரை ஒவ்வொரு நாளும் துதிக்க மறவாதீர்கள். அப்போது அவர் உங்கள் நடுவில் வருவார். அதிசயங்களைக் காண்பீர்கள்.

‘பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப் பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள்’. (II நாளாகமம் 20:22)

ஜெபம் பண்ணும்போது...

‘இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்’. (மத்தேயு 18:20)

நம் அருமை ஆண்டவரை நம்முடைய வாழ்வின் மையத்திற்குக் கொண்டுவர மற்றொரு முக்கியமான வழி, கூடி ஜெபிப்பது ஆகும். அதாவது குடும்ப ஜெபத்தைக் குறித்து குறிப்பிட விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தில் ஒருமனப்பட்டு இரண்டு அல்லது மூன்று பேர் கூடி வந்தால் நிச்சயம் அவர்கள் நடுவில் அருமை ஆண்டவர் வருவார். ஏறெடுக்கும் ஜெபத்தை நிச்சயம் கேட்பார்.

குடும்ப ஜெபம் ஒரு கர்த்தருடைய பிள்ளைகளுக்கு மிகவும் அவசியமாகும். குடும்ப ஜெபம் இல்லாத வீடு, நான்கு சுவரும் இல்லாத வீடு என பேட்ரிக் ஜோஷ்வா என்ற தேவ மனிதன் கூறுகிறார்.

குடும்ப ஜெபம் செய்ய முடியாதபடி சத்துரு பல தந்திரங்களைக் கொண்டு வருவான். ஆனால் அதை மேற்கொண்டு அனுதினமும் கூடி ஜெபிக்க அர்ப்பணிக்க வேண்டும்.

அன்றைக்கு சாத்ராக், மேஜிக், ஆபேத்நேகோ என்ற தேவமனிதர்கள் அக்கினிச் சூளையில் போடப்பட்டாலும் அவர்கள் நடுவிலே நம் ஆண்டவர் உலாவினார். காரணம் அவர்களுடைய ஒருமனப்பாடு.

உங்கள் குடும்பத்தில் ஜெப வாழ்க்கையை கட்டி எழுப்புவீர்களென்றால் ஆண்டவர் உங்கள் நடுவில் வந்து வாசம் பண்ணுவார். நிச்சயம் நீங்கள் வேண்டிக் கொள்ளுவதற்கும், நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் உங்களை ஆசீர்வதிப்பார். எனவே உங்கள் தனிப்பட்ட வாழ்வில், குடும்பத்தில், தொழிலில், படிப்பு, வேலை எல்லாவற்றிலும் கிறிஸ்துவுக்கு மைய இடத்தை ஒதுக்கிவிடுங்கள். ஆச்சரியமான ஆசீர்வாதங்களை நிச்சயம் பெறுவீர்கள்.

‘கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார், இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார், இனித்தீங்கைக் காணாதிருப்பாய்’ (செப்பனியா 3:15) என்பது இறைவாக்கு ஆகும்.

சகோ. ஜி.பி.எஸ். ராபின்சன்,
‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை-54

Next Story