பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில் நிரம்பி வரும் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குளம்


பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த நிலையில் நிரம்பி வரும் அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தெப்பக்குளம்
x
தினத்தந்தி 1 Dec 2018 10:44 PM GMT (Updated: 1 Dec 2018 10:44 PM GMT)

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள தெப்பக்குளம் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த நிலையில் தற்போது தண்ணீர் நிரம்பி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அவினாசி,

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் தெப்பக்குளம் உள்ளது. பழமைவாய்ந்த இந்த தெப்பக்குளத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் குறையாமல் இருந்து வந்தது. பருவமழை இல்லாததால் தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்து வந்து நாளடைவில் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்தது.

ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியாக தெப்பத்தேர் உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறும். அப்போது தெப்பக்குளத்தின் பகுதி முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இதை காண்பதற்காக கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டம் மற்றும் நீலகிரி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

கடந்த சில வருடங்களாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் லாரிகள் மூலம் குளத்தில் சிறிதளவு தண்ணீர் நிரப்பி தெப்போற்சவம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் அவினாசி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்தது.

இதனால் அவினாசி மங்கலம் ரோட்டில் உள்ள 300 ஹெக்டேர் பரப்பளவுள்ள தாமரைக்குளம் கிராமப்புறங்களில் உள்ள குட்டைகளுக்கு கனிசமான அளவு நீர்வரத்து காணப்பட்டது. நீர்ஊற்று மூலம் அவினாசி கோவில் வளாகத்தில் உள்ள தெப்பக்குளத்தில் ஓரளவு நீர் நிரம்பி வருகிறது.

வறண்டு கிடந்த தெப்பக்குளம் நிரம்பி வருவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story