நன்மைகளைத் தரும் ஜெபம்
பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: ‘தபீத்தாளே, எழுந்திரு’ என்றான். (அப்.9:40)
உலகம் கற்பனை செய்து பார்க்க முடியாத அதிசயமான காரியங்கள் ஜெபத்தினால் நடப்பிக்கப்படுகின்றன. யோப்பா பட்டணத்தில் தபீத்தாள் என்ற ஸ்திரி இருந்தாள். அவள் மிகுதியான நற்கிரியைகள், தான தருமங்கள் செய்துகொண்டு வந்தாள். அவள் திடீரென்று வியாதிப்பட்டு மரணமடைந்தாள். மேல் வீட்டில் கிடத்தி வைத்தார்கள்.
இயேசுவின் சீஷரான பேதுருவை அழைத்துச்சென்று தபீத்தாள் செய்திருந்த நல்ல காரியங்களை எல்லாம் பேதுருவுக்கு தெரிவித்தார்கள். பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து; முழங்காற்படியிட்டு இறைவனிடம் ஜெபம் பண்ணி பிரேதத்தை பார்த்து: ‘தபீத்தாளே எழுந்திரு’ என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்தாள். பேதுரு அவளை உயிருள்ளவளாக ஜனங்களுக்கு முன்பாக நிறுத்தினான். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
தானியேல் தான் முன் செய்துவந்த படியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணினான் (தானி.6:10).
தரியு ராஜா அரசாண்ட காலத்தில் தானியேல் பிரதான மந்திரியாக இருந்தார். ‘ராஜா, என் ஜனங்கள் எனக்கு கீழ்படிகின்றவர்களா என்று சோதிக்கும்படியாக முப்பது நாள்வரை எந்த தேவனையாகிலும் யாதொரு மனிதர்களும் வேண்டுதல் செய்து ஜெபம் செய்யக்கூடாது’ என்று உத்தரவு பிறப்பித்தான். மீறினால் அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட கட்டளை பிறப்பித்து கட்டளைப் பத்திரத்தில் கையெழுத்து வைத்தான்.
தானியேல், தரியு ராஜாவின் உத்தரவை தள்ளி, தான் முன் செய்து வந்தபடியே தினம் மூன்று வேளையும் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்செய்து பரலோக தேவனை பணிந்து கொண்டான்.
ராஜா, தானியேலை சிங்கங்களின் கெபியிலே போட்டார். ஒரு இரவு முழுவதும் சிங்கங்களின் கெபியிலே இருந்தான். கர்த்தர் சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார். காலையில் சிங்கங்களின் கெபியிலிருந்து உயிரோடு வெளியே வந்தான். அவன் உடலில் ஒரு சேதமும் காணப்படவில்லை.
ராஜா, தானியேலை பார்த்து ‘நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவித்தார்’ என்றான். தானியேலின் ஜெபம் ஜெயமாக மாறியது.
வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரியின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. (1 இரா.17:17)
தேவனிடம் நெருங்கி உறவாடும் தனி மனிதனாகிய எலியா என்ற தேவ மனிதன் சாறிபாத் ஊரில் ஒரு விதவை வீட்டில் தங்கி இருந்தான். விதவைக்கு ஒரு மகன் இருந்தான். அவன் வியாதியில் விழுந்தான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் வியாதி அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவன் செத்துப் போனான்.
எலியா அந்த குமாரனை வாங்கி தான் தங்கியிருக்கிற மேல் வீட்டிலே அவனைக் கொண்டுபோய் தன் கட்டிலின் மேல் படுக்கவைத்து, ‘என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனை சாகப்பண்ணினதினால் விதவை ஸ்திரிக்கு துக்கத்தை வருவித்தீரோ’ என்று ஜெபம் செய்தான்.
எலியா அந்த பிள்ளையின் மேல் மூன்று தரம் குப்புறவிழுந்து, ‘என் ஆண்டவரே, இந்தப் பிள்ளையின் உயிர் அவனுக்குள் திரும்பி வரப்பண்ணும்’ என்று ஜெபம் செய்தான்.
அவன் உயிர் திரும்பி வந்து அவன் பிழைத்தான். எலியா பிள்ளையை தாயினிடத்தில் கொடுத்து, ‘உன் பிள்ளை உயிரோடிருக்கிறான்’ என்றான். அந்த ஸ்திரி, ‘நீர் தேவனுடைய மனுஷன். உமது வாயிலிருந்து பிறக்கும் வார்த்தை தேவ வார்த்தை என்று அறிந்தேன்’ என்றாள்.
‘நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்கு தெரியப்படுத்துங்கள்’. (பிலி.4:6)
நீயோ ஜெபம் பண்ணும் போது உன் அறை வீட்டினுள் பிரவேசித்து உன் கதவைப் பூட்டி அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.
தேவனுக்கு பிரியமில்லாத படி ஜீவிக்கிறவர் ஜெபம் அருவருப்பானது. செம்மையானவர்கள், பரிசுத்தமானவர்கள், நீதிமான்கள் ஜெபத்தையோ கேட்கிறார். பதில் கொடுக் கிறார்.
வேதத்தையும் தேவனுடைய எச்சரிப்பு களையும் பொருட்படுத்தாதவர்களின் ஜெபம் கேட்கப்படுதல் அரிது. வேதத்தை படிக்காதவனுடைய ஜெபம் தேவனுக்கு பிரியமில்லாத ஜெபம்.
திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம் பண்ணாமல் அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். இயேசு அதி காலையில் வனாந்தரமான ஓரிடத்திற்குப் போய் பிதாவை நோக்கி ஜெபம் செய்தார். நீங்கள் ஜெபம் பண்ணும்போது எவை களைக் கேட்டுக்கொள்வீர்களோ அவை களைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள்.
சகல யூத ஜனங்களையும் அழித்து நிர்மூலமாக்க ஆமானின் சதியால் அகாஸ்வேரு ராஜா உத்தரவு போட்டபோதும், எஸ்தர் உபவாசம் செய்து ஜெபித்ததால் சகல யூதர்களின் உயிர் பாதுகாக்கப்பட்டது. பவுல் எருசலேம் தேவாலயத்திலே ஜெபம் பண்ணிக் கொண்டிருக்கையில் ஞான திருஷ்டியடைந்து அவரைத் தரிசித்தான். ஜெபம் நமக்கு ஜெயத்தைத் தரும். ஆமென்.
- சி. பூமணி, ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம், சென்னை-50.
Related Tags :
Next Story