வளங்கள் தரும் வைகுண்ட ஏகாதசி


வளங்கள் தரும் வைகுண்ட ஏகாதசி
x
தினத்தந்தி 18 Dec 2018 9:59 AM GMT (Updated: 18 Dec 2018 9:59 AM GMT)

18-12-2018 வைகுண்ட ஏகாதசி

மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் பாலமாக இருப்பது விரதங்கள். மனிதனின் வாழ்வில் எழும் பிரச்சினைகளுக்கு ஏற்ப, கடவுள்களும் விரதங்களும் மாறுபடும். ஆனால் அனைத்து விரதங்களிலும் முதன்மையாக திகழ்கிறது காக்கும் கடவுளான விஷ்ணுவை எண்ணி கடைப்பிடிக்கும் ‘வைகுண்ட ஏகாதசி விரதம்.’

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. வைணவ பக்தர்கள் அந்நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம். ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித் துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை.

மாதந்தோறும் வரும் ஏகாதசி திதிகளை விட, மார் கழியில் வரும் ஏகாதசிக்கு பெரும் சிறப்பு உண்டு. ஏகாதசியில் விரதம் இருந்த அம்பரீஷன் என்ற அரசனை, துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து காக்க, விஷ்ணு பகவான் தன்னுடைய சக்கரத்தை அனுப்பி புராண நிகழ்வு நடந்த மாதமாக மார்கழி ஏகாதசி இருக்கிறது.

அம்பரீசனுக்கு இடையூறு செய்த துர்வாசரை, சுதர்சன சக்கரம் துரத்தியது. அதனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றும்படி, வைகுண்டம் சென்று பெரு மாளைப் பணிந்தார் துர்வாசர். ஆனால் துர்வாச முனிவரைக் காப்பாற்றும் தகுதி, ஏகாதசியில் தூய விரதம் இருந்து திருமாலை வழிபட்ட அம்பரீசனுக்கே அளிக்கப்பட்டது. ஏகாதசியின் சிறப்பு அத்தகையது.

வைகுண்ட ஏகாதசி விரதம் கடைப்பிடிப்போரின் கடைக்கண் பார்வைக்கு, அந்த கண்ணன் அடிமையாகி அவர்களின் கவலைகளைத் தீர்த்து இறுதியில் வைகுண்டம் அழைத்து முக்தி தருவான் என்பது நம்பிக்கை.

தனது நண்பரான குசேலன் கொண்டுவந்த அவலை உண்டு, அவருக்கு சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க கண்ணன் வழி செய்தார். குசேலனுக்கு இறைவன் அருள் செய்தது இந்த மார்கழி ஏகாதசி என்பதால், பக்தர்கள் அன்றைய தினம் இரவு விழித்திருந்து பகவானுக்கு அவல் நைவேத்தியம் படைத்து வேண்டினால், அவர்களின் ஆவல் நிறைவேறும்.

வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஒரு முறை நாம் இருக்கும் வைகுண்ட ஏகாதசி விரதமானது, மூன்று கோடி ஏகாதசி விரதங்களுக்கு ஒப்பாகும் என்பதால், இவ்விரதத்தை “முக்கோடி ஏகாதசி” என்றும் அழைக்கின்றனர்.

ஏகாதசி விரதம் 10-வது திதியாகிய தசமி, 11-வது திதியாகிய ஏகாதசி, 12-ம் திதியாகிய துவாதசி என்று 3 திதிகளிலும் மேற்கொள்ளும் விரதமாக அமைந்துள்ளது. ஆகவே ஏகாதசி விரதம் இருப்பவர்கள், அதற்கு முன்தினமான தசமி நாளிலேயே தங்கள் விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய தினம் பெருமாளை வழிபட்டு ஒருவேளை மட்டும் சாப்பிட்டு, மறுநாள் ஏகாதசியன்று முழுமையான உண்ணாவிரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகள், விடாமல் துரத்தினாலும் நாம் நம் சிந்தையை ஒருங்கிணைத்து அவன் பாதம் நாடி அருளைப்பெற இரவு-பகல் பாராமல், இறைவனின் நாமம் ஓதுவதில் கவனம் கொள்ள வேண்டும். வீண் கதைகள் பேசி பொழுதுகளை போக்குவது நன்மை தராது. இந்த நோக்கத்தின் அடிப்படையில் தசமிக்கு அடுத்த ஏகாதசியன்று இரவில் கண்விழித்து பெருமாளின் பெருமைகளை எடுத்துக்காட்டும் கதைகளைப் படிப்பதும், கேட்பதுமாக இருக்க வேண்டும். விஷ்ணு சகஸ்ர நாமம், ரங்கநாதர் ஸ்துதி போன்ற பெருமாள் மீதான பதிகங்களை ஓதுவது நல்லது. எதையும் படிக்கவோ மனனம் செய்யவோ முடியாதவர்கள் “ஓம் நமோ நாராயணா” எனும் எட்டெழுத்து மந்திரத்தை மனதில் நிறுத்தினாலே அந்த நாராயணனின் அருளுக்கு பாத்திரமாகலாம்.

மறுநாள் துவாதசி திதி அன்று, இந்த பருவத்தில் கிடைக்கும் 21 வகை காய்கறிகளை சமைத்து சூரிய உதயத்திற்கு முன் உண்ணுதல் நலம் தரும். சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை விரதம் முடித்து உண்பதால் உடல் ஆரோக்கியத்துக்கும் இவ்விரதம் உதவுகிறது. அனைத்து காய்கறிகளும் இல்லை என்றாலும், அகத்திக் கீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவை அவசியம் இடம்பெற வேணடும்.

ஏனெனில் அகத்திக்கீரையை நலம் காக்கும் “அமிர்தபிந்து” என்றும், நெல்லிக்காயில் செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமியை மார்பில் சுமந்த ஹரி வாசம் செய்வதாகவும், சுண்டைக்காயில் பாற்கடலில் அமுதம் வேண்டி கடைந்தபோது வெளிவந்த பிணிகளைத் தீர்க்கும் மருத்துவக் கடவுளான தன்வந்திரியின் நிழல் இருப்பதாகவும் முன்னோர் வாக்கு.

இந்த விரதத்தில் ஒரு முக்கியமான தகவலும் உண்டு. துவாதசியன்று காலையில் உண்டு விரதம் முடித்த பிறகு, எக்காரணம் கொண்டும் பகலில் உறங்கக்கூடாது. விரதத்தின் போது விஷ்ணுவுக்கு உகந்த துளசியை பறிக்கக்கூடாது. பூஜைக்கான துளசியை முதல்நாளே பறித்து விடுவது சிறப்பு. இந்த விரதத்தை உற்றார் உறவினரோடு பகவானின் சிந்தையில் மகிழ்ந்து, அவன் புகழை பாடி பூஜைகள் செய்து, அரங்கன் குடியிருக்கும் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மிகச் சிறப்பாகும்.

மார்கழி ஏகாதசியை முறையாக வழிபடும் முறையை தொடங்கியவர், திருமங்கையாழ்வார். வைணவத் தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் விழாக்களில், மிகவும் சிறப்பானதாக இருப்பது வைகுண்ட ஏகாதசி விழாதான்.

இங்கு மட்டுமல்ல சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவில், சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவில் போன்ற அனைத்து பிரசித்திபெற்ற பெருமாள் ஆலயங்களிலும் கொடியேற்று விழா தொடங்கி, பத்து நாட்கள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படும்.

இராபத்து தொடங்கும் வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் எனப்படும் முக்தி தரும் வாசல் திறப்பு நடைபெறும். அன்று ஸ்ரீரங்க மூலவருக்கு முத்தங்கி அணிவிக்கப் படும். அதிகாலை 4.30 மணியளவில் மூலஸ்தானத்தில் இருந்து பெருமாள் ரத்ன அங்கி அணிந்துவாறு, முகத்தில் மந்தகாசப் புன்னகையுடன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு அருளைப் பொழிந்தவாறு பரமபத வாசல் வழியாக எழுந்தருள்வார்.

மனிதனாக பிறப்பு எடுத்த நாம் நம் ஞானேந்திரியங்கள் ஐந்தையும், கர்மேந்திரியங்கள் ஐந்தையும், மனம் என்ற ஒன்றையும், பரம்பொருளுடன் ஒன்றுபடுத்தி நிம்மதியான வாழ்வைப் பெற வைகுண்ட ஏகாதசி விரதம் வழிகாட்டுகிறது.

 - சேலம் சுபா

Next Story